பாபர் மசூதி இடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளிகளான பா.ஜ.க மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.  அப்போதைய உ.பி. முதல்வர் கல்யாண்சிங் உச்ச நீதிமன்றத்தில் பாபர் மசூதி இடிப்பை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதிமொழி அளித்திருந்தார்.

ஆனால் அந்த உறுதி மொழி ஏமாற்று வேலை என்பது பாஜக, சங்பரிவாரத்தின்இடிப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டது. அந்நாளை மதச்சார்பற்ற இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாளாகவே வரலாறு பதிவு செய்திருக்கிறது. அந்த சதிச் செயலை தேச அவமானம் என்று 1995இல் உச்சநீதிமன்றம் கண்டித்தது. பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷனின் ஆயுட்காலம் 48 முறை நீட்டிக்கப்பட்டு, 17 ஆண்டுகள் கடந்த பின்னர் 2009ல் அறிக்கை வெளிவந்தது.

அந்த அறிக்கையில் மசூதி இடிப்பிற்கு அறிவுரீதியாக, தத்துவரீதியாக, உடல் ரீதியாக இருந்தவர்களை பட்டியலிட்டிருக்கிறது. அதில் வாஜ்பாய், எல்.கே. அத்வானி, சுதர்ஸன், கல்யாண்சிங்,முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 68 பேர் மற்றும் இந்துத்துவா அமைப்புகளையும் குற்றவாளிகளாக சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றனர். இந்த வழக்கை விசாரித்து வந்த ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் எல்.கே.அத்வானி உள்ளிட்ட முக்கியக் குற்றவாளிகளை விடுவித்து உத்தரவிட்டது. இதனை அலகாபாத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால் குற்றவாளிகளின் விடுதலைக்கு சட்டரீதியான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பளித்ததை உச்சநீதிமன்றம் தற்போது நிராகரித்திருக்கிறது.

மேலும் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோரிடம் மீண்டும் அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும். தினந்தோறும் விசாரணை நடத்தி 2 வருடத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும். கல்யாண்சிங் தற்போது ராஜஸ்தான் ஆளுனராக இருப்பதால் அவரை தற்போதைக்கு விசாரணையில் இருந்து விடுவித்திருக்கிறது. கல்யாண்சிங் பதவி விலகினாலோ, பதவிக்காலம் முடிந்தாலோ அவரையும் விசாரிக்கலாம் என தெரிவித்திருக்கிறது. தார்மீக அடிப்படையில் கல்யாண்சிங், அமைச்சர் உமாபாரதி ஆகியோர் தங்களின் பதவியிலிருந்து விலக வேண்டும்.

இந்த வழக்கில், மசூதி இருந்த இடம் யாருக்கு என்பது தனிப் பிரச்சனை. அதற்கு நீதிமன்றம் சட்டப்படியான சான்றின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி பாபர் மசூதியை இடித்தவர்களை ஏன் நீதிமன்றம் இதுவரை தண்டிக்கவில்லை. இதில் ஏன் நீதிமன்றம் இன்னும் அமைதி காக்கிறது. இந்த அமைதி மிகப்பெரிய ஆபத்திற்கே அடிகோலும். ஏற்கெனவே சங்பரிவாரங்கள் நம்பிக்கையின்பால் இந்தியா முழுவதும் இது போன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மசூதி மற்றும் தேவாலயங்களை இடிக்க வேண்டிய பட்டியலில் இணைத்திருக்கின்றன. அதில் தமிழகத்தில் மட்டும் 30 இடங்கள் இருப்பதாக அறிவித்திருக்கின்றன. இது இந்தியாவின் மதச்சார்பின்மையை இடித்து உருக்குலைக்கும் திட்டமாகும். ஆகவே நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் நீதியைநிலைநாட்ட வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: