புதுக்கோட்டை, ஏப். 19-
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க, மத்திய அரசு ஜெம் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட மறுநாள் கிளர்ந்தெழுந்த விவசாயிகள் அப்பகுதியில் ஓய்வின்றி போராடி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் ஹைட்ரோ கார்பன் திட்டம் வராது என்று சொன்ன நம்பிக்கையால், 22 நாட்களில் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்திய நெடுவாசல் விவசாயிகள், மத்திய அரசு மீண்டும் ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டதால் இரண்டாம் கட்ட போராட்டத்தைத் தொடங்கி, கவன ஈர்ப்பு போராட்டமாக தொடர்ந்து 8-வது நாளாக நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நூதன போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வந்தாலும் அரசு அவர்களைக் கண்டுகொள்வதாக இல்லை. அதனால் நாளுக்கு நாள் போராட்ட வடிவங்களை அங்கு போராடி வரும் விவசாயிகள் மாற்றி வருகின்றனர். 8வது நாளான புதனன்று ஹைட்ரோ கார்பன் என்னும் நோயாளி மாதிரியான உருவ பொம்மை செய்து, அதன் தலையில் ஹைட்ரோ கார்பன் என்றும், இடையில் மத்திய அரசு, கீழே ஜெம் உள்ளிட்டபதாகைகளைக் கட்டி போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடலில் இருந்து கடைவீதி வரை ஊர்வலமாக தூக்கிச் சென்றனர் போராட்டக் குழுவினர்.

பின் கடைவீதியில் வைத்து பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து செருப்பு, துடைப்பத்தால் அடித்து கீழே தள்ளி சாணிப்பால் ஊற்றினார்கள். ‘மண்ணையும் மக்களையும் அழிக்கும் திட்டத்தைக் கைவிடு’ என்று முழக்க மிட்டனர். இந்தப் போராட்டத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Leave A Reply