சென்னை, ஏப். 19 –
ஜெயலலிதா மறைவைத் தொடர் ந்து இரண்டாக உடைந்த அதிமுக மீண்டும் ஒன்றாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஓ. பன்னீர்செல்வம் விதித்த நிபந்தனைப்படி, சசிகலா குடும்பத்தை அதிமுகவிலிருந்து விலக்கி வைப்பதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற் றும் அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். அதற்கேற்ப, டிடிவி தினகரனும் கட்சியிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

இது அதிமுக அணிகள் ஒன்றாவதற்கான சூழலை உருவாக்கியுள்ளது. சசிகலா குடும்ப ஆதிக்கத்திலிருந்து அதிமுகவுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் முதல் வெற்றி கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி தரப்போடு அமர்ந்து பேசி உடன்பாட்டுக்கு வரத் தயார் என்று அறிவித்துள்ளார்.

இரண்டாக உடைந்த அதிமுக
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மரணம் அடைந்ததைத் தொடர் ந்து, ஓ.பன்னீர்செல்வம் புதிய முதல்வரானார். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா, அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக டிசம்பர் 29-ம் தேதி அன்று நியமிக்கப்பட்டார். ஓ. பன்னீர்செல் வம், இ. மதுசூதனன் உள்ளிட்டோர் அதிமுக-வின் பொதுச்செயலாளர் பதவிக்கு, சசிகலாவை முன்மொழிந்திருந்தனர்.

இந்நிலையில் கட்சியும் ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இதனால், சசிகலா அதிமுகவின் சட்டமன்றக்குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் படவே ஓ. பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை பிப்ரவரி 5-ஆம் தேதி ராஜினாமா செய்தார். சசிகலா புதிய முதல்வராகப் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.ஆனால், திடீரென ஜெயலலிதாவின் சமாதியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், தன்னை ராஜினாமா செய்யுமாறு சசிகலா கட்டாயப்படுத்தியதாக புதிய குற்றச்சாட்டை முன்வைத்தார். 75 நாட்கள் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவரை ஒருமுறை கூட சசிகலா சந்திக்க விடவில்லை என்றும் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச் சாட்டுக்களைத் தொடர்ந்து, அதிமுகவில் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ஒரு தரப்பும், சசிகலாவுக்கு ஆதரவாக மற்றொரு தரப்புமாக அதிமுக பிளவுபட்டது.  அதிமுகவின் 11 எம்எல்ஏ-க்களும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர். சசிகலா அணியில் பெரும்பான் மையாக 122 எம்எல்ஏக்களும், 37 எம்.பி.க்களும் இருந்தனர். இதனிடையே, சொத்துக் குவிப்பு வழக்கில், பிப்ரவரி 14-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் அவர் முதல்வர் ஆக முடியவில்லை.

அவரது அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி புதிய முதல்வரானார். சசிகலா சிறைக்குச் செல்வதற்கு முன்னதாக தனது பணிகளைக் கவனிப்பதற்காக தனது அக்காள் மகனான டிடிவி தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார். ஜெயலலிதா எம்எல்ஏ- இருந்த ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணியில் மதுசூதனனும் போட்டியிட்டனர். இருவருமே இரட்டை இலை சின்னத்தைக் கோரிய நிலையில், இருவருக்குமே சின்னத்தை தராமல் இரட்டை இலைச்சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது.

ஓ.பி.எஸ். அழைப்பு
இந்நிலையிலேயே, சசிகலா – ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அதிமுக-வின் இரு அணிகளும் மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்புச் செய்திகள் வெளியாகின. இதற்கென குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதுபற்றி கேட்டபோது, ‘அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக இதுவரை யாரும் என்னை அணுகவில்லை; ஆனால், நிச்சயம் வருவார்கள் என்று நம்புகிறேன்; வந்தால், எந்த நிபந்தனையும் இல்லாமல் பேசத் தயாராக இருக்கிறோம்’ என்று ஓ. பன்னீர் செல்வம் கூறினார்.

தம்பிதுரை வரவேற்பு
சசிகலா அணியைச் சேர்ந்த- மக்களவைத் துணை சபாநாயகர் மு. தம்பிதுரை, ஓ. பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேசத் தயார் என்றும் இரட்டை இலையை மீண்டும் பெற ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்றும் அவர் கூறினார்.

அமைச்சர்கள் கூட்டம்
அதற்கேற்ப திங்கட்கிழமையன்று இரவு 10 மணியளவில் சசிகலா- தினகரன் அணியைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் அனைவரும் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் திடீரென ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். அதுவும் டிடிவி தினகரன் சென்னையில் இல்லாத நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சுமார் 1 மணிநேரம் நடந்த கூட்டத் திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் டி. ஜெயக் குமார், ‘இரட்டை இலைச் சின் னத்தை மீட்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டிய பிரமாண பத்திரம் குறித்தும், இரண்டு அணிகளும் ஒன்றாக இணைவது சம்பந்தமாக ஓ. பன்னீர்செல்வம் கூறிய கருத்து தொடர்பாகவும் மட் டுமே அமைச்சர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது’ என்று தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்திலிருந்து செவ்வாய்க்கிழமையன்று சென்னை வரவுள்ளதாகவும், அப்போது முறைப்படி இணைப்புக் கான பேச்சுவார்த்தை நடக்கும் என்றும் தினகரன் தரப்பினர் பலமான நம்பிக்கை தெரிவித்தனர்.

ஓ.பி.எஸ். நிபந்தனை
ஆனால், பெரியகுளத்தில் செவ்வாயன்று காலை செய்தியாளர் சந்திப்பு நடத்திய ஓ. பன்னீர்செல்வம், ‘எந்த (சசிகலா) குடும்பம் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தி வருகிறோமோ, அதே குடும்பம் அதிமுகவில் தவறுக்கு மேல் தவறு செய்து, தமிழகத்திற்கே தலைக்குனிவை ஏற்படுத்தி வருகிறது; எனவே, சசிகலா குடும்பம் இருக்கும் வரை இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று அறிவித்தார். இதனால் அதிமுக அணிகள் இணைவது வெறும் பேச்சாகவே போய்விடும் என்று கருதப்பட்டது.

திடீர் திருப்பம்
ஆனால், தமிழக அமைச்சர்கள் செவ்வாயன்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் கூடி மீண்டும் அவசர ஆலோசனை நடத்தினர். அக்கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் ஜெயகுமார், திடீர் திருப்பமாக ஓ.பன்னீர்செல்வம் விதித்த நிபந்தனையின் அடிப்படையில், டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து முழுமையாக ஒதுக்கி வைப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதிமுகவை இயக்கு வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட உள்ளதாகவும், ஓ.பி.எஸ். உடனான பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

சலசலப்பு
இது அதிமுகவினர் மத்தியில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அமைச்சர்கள் – எம்எல்ஏக்கள் அனைவரும் சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து விலக்கி வைப்பதில் உறுதியாக இருந்த நிலையில், தங்க.தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், கதிர்காமு உள்ளிட்ட 8 எம்எல்ஏக்கள் மட்டும் சசிகலா – டிடிவி தினகரன் தலைமைக்கு ஆதரவு அளித்தனர். இதனால் அதிமுக மூன்றாக உடையலாம் என்று கருதப்பட்டது. புதனன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், ‘பெரா’ வழக்கில் ஆஜராவதற்கு நீதிமன்றம் சென்று விட்டு மீண்டும் தனது இல்லத்திற்கு திரும்பிய தினகரன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி எடப்பாடி – ஓ.பி.எஸ். அணிக்கே ஆச்சரியம் அளிப்பதாகி விட்டது.

அதிமுகவிலிருந்து ஒதுங்கி விட்டேன்                                                                  “அதிமுகவிலிருந்து என்னை ஒதுங்கச் சொன்னதன் அடிப்படையில், செவ்வாயன்றே நான் ஒதுங்கி விட்டேன்; இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை அமைச்சர்கள் என்னிடம் ஆலோசித்திருந்தால் கட்சியிலிருந்து ஒதுங்கும் முடிவை நானே அறிவித்திருப்பேன்” கூறி டிடிவி தினகரன் அதிர்ச்சி அளித்தார்.

“கடந்த 14-ம் தேதி வரை அமைச்சர்கள் என்னை சந்தித்து வந்தனர்; அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் என்னுடன் தொலைபேசியில் பேசினர்; ஆனால், 4 நாட்களில் திடீரென்று அவர்கள் இப்படி ஒரு முடிவு எடுப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை; அமைச்சர்கள் சிலருக்கு ஏற்பட்ட அச்சத்தால் என்னை கட்சியிலிருந்து நீக்கப்பார்க்கிறார்கள். அவர்களது அச்சத்துக்கு என்ன காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை; என்னை நீக்கினால்தான் அமைச்சர் களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் நன்மை கிடைக்குமென்றால் அந்தநன்மை அவர்களுக்கு கிடைக் கட்டும்” என்று குறிப்பிட்ட தினகரன், “எக்காரணத்தாலும் அதிமுகவில் பிளவு ஏற்படக்கூடாது என்பதே எனது விருப்பம்; கட்சியில் பிளவு ஏற்பட நான் காரணமாக இருக்க மாட்டேன்; அமைச்சர்களுடன் எந்த சண்டை சச்சரவையும் நான் விரும்பவில்லை” என்றும் தெரி வித்தார்.

அவர்கள், யாருடைய மிரட்ட லுக்கும் பயப்படாமல் தைரியத்துடன் கட்சியையும், ஆட்சியையும் நடத்த வேண்டும் என்று தான் தான் விரும்புகிறேன் என்றும் கூறினார். துணைப் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதைப் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், “அதற்கான தேவையில்லை; ஏனெனில் பதவியின் அடிப்படையில் செயல் பட்டால்தானே அதில் முக்கியத்துவம் இருக்கப் போகிறது” என்று கூறிய தினகரன், “இப்பதவியை எனக்கு அளித்தவர் பொதுச்செயலாளர் சசிகலா; எனவே, அவரிடம் கலந்து ஆலோசிக்காமல் ராஜினாமா பற்றி முடிவெடுக்க முடியாது” என்றார்.அமைச்சர்களின் தற்போதைய முடிவால், தனக்கு எந்தவித ஏமாற்றமும் இல்லை; எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் ஏற்படும் என்று கூறிய தினகரன், இனியும் எனது அரசியல் வாழ்க்கை தொடருமா? என்பதை இறைவன் தீர்மானிப்பார் என்று முற்றுப்புள்ளி வைத்தார்.

ஓ.பி.எஸ். மகிழ்ச்சி
தினகரனின் இந்த பேட்டி வெளியான சில நிமிடங்களில் தனது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் சிரித்த முகத்துடன் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார் அப்போது, தங்கள் தர்ம யுத்தத்தில் தங்களுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளதாகவும், சசிகலா குடும்ப ஆதிக்கத்திலிருந்து அதிமுகவுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் முதல் வெற்றி கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

Leave A Reply