காபூல், ஏப். 19-
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கி இருந்த முகாம் மீது அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சில் இந்தியாவை சேர்ந்த 13 பேர் பலியானதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.ஆப்கானிஸ்தானில் அசின் மாவட்டத்தில் உள்ள நன்கார்கார் என்ற இடத்தில் உள்ள மலை பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம் அமைத்து தங்கி இருந்தனர். ஆப்கானிஸ்தானில் தெஹ்ரிக் இ தலிபான் இயக்கத்தில் இருந்து சென்ற விலாயத் கோர்சான் அங்கு ஐ.எஸ். இயக்கத்தை தொடங்கி தாக்குதல் நடத்தி வருகிறார். அவர்தான் இங்கு முகாம் அமைத்து இருந்தார். இந்த முகாம் மீது கடந்தவாரம் அமெரிக்கா ராட்சத வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 30-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

முகாமும் அழிந்தது. இந்தியாவை சேர்ந்த சிலர் ஆப்கானிஸ்தான் சென்று ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களில் பலர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் முகமது ஹபிசுதின், முர்சித் முகமது ஆகிய இந்தியர்கள் கொல்லப்பட்டது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. இப்போது அந்த தாக்குதலில் 13 இந்தியர்களும் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதில் தளபதியாக செயல்பட்ட முகமது, அல்லா குப்தா ஆகியோரும் அடங்கு வார்கள் என்றும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்து ள்ளது. ஆனால், அதை இந்தியா இன்னும் உறுதி செய்யவில்லை. இது சம்பந்தமாக தேசிய புலனாய்வு முகமையினர் விசாரித்து வருகிறார்கள்.

தேசிய புலனாய்வு அதிகாரி ஒருவரிடம் இதுபற்றி கேட்ட போது, கடந்த ஆண்டு கேரளாவில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 21 பேர் ஈரானுக்கு சென்று அங்கிருந்து ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்றிருக்கிறார்கள். அவர்கள் இந்த தாக்குதலில் பலியானார்களா? என்பது தெரியவில்லை. 2 இந்தியர் மட்டுமே இறந்தது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் பற்றிய விவரங்களைச் சேகரித்து வருகிறோம். இந்தியாவில் இருந்து காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை அவர்களின் குடும்பத்தினரை அணுகியும் விசாரித்து வருகிறோம் என்று கூறினார்.

Leave A Reply