திருவள்ளூர்
கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள முத்துரெட்டிகண்டிக்கையில் அரசு மதுபானக்கடை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம பொது மக்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் ஏராளமானோர் கூடி கடையை முற்றிலும் அகற்ற வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று (ஏப்.18) கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த முத்துரெட்டி கண்டிகையில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கேஸ் கம்பெனி எதிரில் அரசு மதுபானக் கடை திறக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை அறிந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பொன்னேரியிலிருந்து அகற்றப்பட்ட இந்தக் கடை முத்துரெட்டி கண்டிகையில்  அமைந்தால் சிறுபுழல் பேட்டை, ராமாச்சேரி, புதுப்பேட்டை, முத்துரெட்டி கண்டிகை ஆகிய நான்கு கிராமங்களில் உள்ள உழைப்பாளி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்தப்போராட்டம் நடைபெற்றது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார். மக்களின் எதிர்ப்பை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கடையை அகற்ற நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எம்.ரவிக்குமார் தலைமை தாங்கினார்.இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.துளசிநாராயணன், ஒன்றிய நிர்வாகிகள் சிவக்குமார், நாகேஷ், கட்டுமான குமார்,ஜெயமணி, சிபிஎம் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply