காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகிலுள்ள சோகண்டி கிராமத்திலுள்ள மலை மாதா கோயிலில் வழிபட உரிமை மறுக்கப்படுவதாக திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மலை பாதுகாப்பு அமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் பாரதி அண்ணா கூறுகையில், கடந்த 3.4.2017 அன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மாநிலத் தலைவர் சம்பத், தலைமையிலான குழு மாவட்ட ஆட்சியரை சந்தித்து, மலை மாதா கோயிலுக்கு  கிறிஸ்த்துவ தலித் பெண்கள், சிரமமில்லாமல் சென்று வழிபாடு நடத்த போதுமான வசதிகளையும்  பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்த ஞாயிறன்று (ஏப். 16) குருத்தோலை ஜெப வழிபாடு, ஏப்.14 புனித வெள்ளியன்று வழிபாடு நடத்தவும் பாதுகாப்பு வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

புனித வெள்ளியன்று  (ஏப்.14) மாலை 3 மணியளவில் சிலுவை ஏந்தி மலை மாதா மலைக்கு வழிபாடு செய்ய சென்ற பெண்களை தள்ளி விட்டும், காலால் மிதித்தும், ஒலிபெருக்கியை பறிமுதல் செய்தும், அசிங்கமாகத் திட்டியும் சிலர் ரவுடித்தனத்தில் ஈடுபட்டனர். “ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள்’’ என்று பெண்கள்  கேட்டதற்கு, ‘இந்த இடம் உங்க அப்பன் விட்டு இடமில்லை ’’  எனக் கூறி சிலுவையையும், அப்பத்தையும் கீழே தள்ளி விட்டனர். உடனே, காவல் துறையினர் ரவுடித்தனத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாமல் வழிபாட்டிற்கு வந்தவர்கள் மீது தடியடி நடத்தி சிலர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய முயற்சித்து வருகிறார்கள்.

எனவே இப்பிரச்சினைக்கு காரணமான திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் மனோகரன் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்கள் தொடர்ந்து வழிபட உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் அம்பேத்கர் நூற்றாண்டு இயக்கத்தின்  சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து முறையிடப்பட்டது என்றும் அவர் கூறினார்.

Leave A Reply