ஈரோட்டிலிருந்து சித்தோடு செல்லும் வழியில் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கனிராவுத்தர் குளம். இந்த குளம் சுமார் 27 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சில வருடங்களுக்கு முன்பு ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரியாக இருந்தது. தற்போது குளமாக மாறிவிட்டது. மேலும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நீர் வந்து சேரும் இடமாகவும் இருந்தது. தற்போது நீர் வருவதில்லை. கழிவு நீர் மற்றும் குப்பைகள் நிறைந்து தூர் வாரப்படாமல் உள்ளது. குளத்தை சுற்றி 10 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த அற்புத நீர் நிலை கழிவு நீர் கலக்கும்இடமாக மாறியுள்ளது. இதற்கிடையே, நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றி, குளத்தை தூர் வாருமாறு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பல்வேறு பொதுநல அமைப்பினர் இணைந்து கடந்த 5 வருடங்களாக போராடி வருகிறார்கள்.

மேலும், கடந்த 26.12.2016 அன்று குளம் மீட்பு இயக்கம் சார்பில் பொதுமக்கள் ஒன்று சேர்ந்துகாலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால், இதன்பின்னர் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன் வரவில்லை. இதற்கிடையே கனிராவுத்தர் குளத்தை தூர்வாரி புனரமைத்து தண்ணீர் தேக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்து கடந்த 2015-16 ஆம் ஆண்டு முதல் கட்டமாக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனாது என்று தெரியவில்லை என அப்பகுதி மக்களும் பொதுநல அமைப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து குளம் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளார் நிலவன் கூறியதாவது:- இந்த குளம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. குளத்தை தூர் வார 2015 ஆம் ஆண்டு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இரண்டு வருடங்கள் முடிந்த பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடையாது. மாநகராட்சி கொடுக்கும் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. இந்த குளத்தை தூர் வாரி தண்ணீர் தேக்கினால் சுமார் ஒரு லட்சம் மக்களுக்கான நீர் ஆதாரமாக திகழும். இதனை வலியுறுத்தி பலமுறை போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடத்தியும் மாவட்ட நிர்வாகமோ, சட்டமன்ற உறுப்பினர்களோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று திரண்டு நம் குளத்தை நாமே தூர் வாரி விடுவோம். அரசை நம்பி எந்த பயனும் இல்லை என முடிவெடுத்து வேலை செய்ய ஆரம்பித்தால், மாநகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்துகிறார்கள். இதற்குஎன்ன காரணம் என்று தெரியவில்லை.இதற்கிடையே இந்த குளம்முழுவதும் சீமை கருவேலம் மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. இந்த சீமை கருவேல மரங்களை உடனே அகற்ற வேண்டும் நீதிமன்ற உத்தரவு வந்த பிறகும், தாங்களும் அகற்றாமல், எங்களையும் அகற்ற விடாமல் மாநகராட்சி நிர்வாகம் தடுத்து வருகிறது. இதை சட்ட விரோதமான நடவடிக்கையாக பார்க்கிறோம். இதுதொடர்பாக நீதிமன்றத்திற்கு செல்வோம். தூர் வாரும் பணியில் இருந்து பின்வாங்க போவதில்லை.

அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தாலும் சரி, மக்களை ஒன்று திரட்டி குளத்தை தூர் வாரும் முயற்சியில் இறங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் என்ற பெயரில் மக்களுக்கு வழங்கப்படும் நீர், கழிவு நீராக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது. தற்போது மாநகராட்சி பகுதிகளின் சாக்கடை கழிவுகள், தோல் சாய கழிவுகள் கலந்த நீரை தான் மக்கள் குடித்தும், குளித்தும், சமைத்தும் வருகிறார்கள். இதன்காரணமாக தமிழ்நாட்டிலேயே புற்றுநோயாளிகள் அதிகமாக உள்ள மாவட்டமாக ஈரோடு மாறியுள்ள மனித உயிர்கள் ஒவ்வொரு நொடியும் விலைபேசப்படுகிறது. ஆகவே, ஈரோடு மக்களை புற்று நோயாளிகளாக மாற்றுவதை மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நிறுத்த வேண்டும். அனைத்து மக்களும் சுகாதாரமான குடிநீர் என்பதை அரசு நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

-து.லெனின்,ஈரோடு.

Leave A Reply