கோவை சரவணம்பட்டி
யில் உள்ள சிஎம்எஸ் ல்லூரியில் தேசிய அளவிலான கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சப்- ஜூனியர் ஆண்கள் பிரிவில் 27 அணிகளும், பெண்கள் பிரிவில் 27 அணிகளும் பங்கேற்கின்றன. தில்லி, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஒடிசா, பாண்டிச்சேரி, மேற்கு வங்கம் உட்பட மாநிலங்களில் இருந்து 54 அணிகளின் வீரர்கள்இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

இதில் தமிழக அணியின் சார்பில் விளையாடி வரும் தர்ஷிணி, ஒட்டு மொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவர் தான்பங்கேற்ற போட்டிகளில் தமிழக அணிக்கு அதிக அளவில் புள்ளிகள் பெற்று அசத்தி வருகிறார்.
ஒடிசாவிற்கு எதிரான போட்டியில் தமிழக அணி 68-11 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதில் தர்ஷிணி 12 புள்ளிகள் எடுத்தார். விதர்பா அணிக்கு எதிரான ஆட்டத் தில் (52-12) 20 புள்ளிகளும், பாண்டிச்சேரி அணிக்கு எதிராக (32-4) 18 புள்ளிகளும் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

இத்தனை சாதனைக்கும் சொந்தக்காரியான தர்ஷிணி, கேட்கவும் பேசவும் இயலா மாற்றுத்திறனாளி. விளையாட்டில் பெறப்போகும் சாதனை தான், தன்னைப் பற்றி மற்றவர் களைப் பேசவைக்கும் என்கிற நம்பிக்கையோடு களம் இறங்கி சாதித்து வருகிறார் தர்ஷிணி. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இவரின் பெற்றோர் பாலகிருஷ்ணன் மற்றும் ஜெயந்தி தம்பதியினர். இவர்கள் பிழைப்பிற்காக கோவைக்கு இடம் பெயர்ந்தவர்கள். தர்ஷிணியைப் போலவே அவரது அண்ணன் சம்பத்தும் கேட்கவும் பேசவும் முடியாத மாற்றுத்திறனாளி. ஏழ்மையிலும் கூலி வேலை செய்து பிள்ளைகளை வளர்ப்பதில் சீரிய கவனம் செலுத்தினர். தர்ஷிணி கோவை ராஜா வீதியிலுள்ள துணி வணிகர் மேல்நிலைப்பள்ளியில் பதினொன் றாம் வகுப்பு ஹோம் சயின்ஸ் பிரிவில் படித்து வருகிறார். சகோதரர்சம்பத் பட்டப்படிப்பு படித்துவிட்டு தற்போது தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்.

அம்மா என்கிற வார்த்தையை தவிர, ஏதும் பேசத்தெரியாத தர்ஷிணியை பேச வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் முடியாத நிலையில் தனது வீட்டருகில் யோகாகற்றுக்கொள்ள அனுப்பியுள்ளார். அங்கு பயிற்சி பெற்ற தர்ஷிணி, மாவட்ட அளவில் யோகாவில் வெற்றி பெற்று பரிசுகளைப் பெற்றிருக்கிறார். இவரது திறமையைப் பார்த்த யோகா ஆசிரியரின் கணவரும், கபடி பயிற்சியாளருமான கிருஷ்ணன் தர்ஷிணிக்கு முறையாக கபடி பயிற்சியை இலவசமாக அளித்துள்ளார். இதன்பின் மாவட்ட, மாநில போட்டிகளில் விளையாட ஆரம்பித்த தர்ஷிணி தன்னுடைய 13 ஆவது வயதில் மகாராஷ்டிரா மாநிலம் சாட்னாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கபடிப் போட்டியில் தமிழக அணிக்காக முக்கிய ஆட்டத்தில் 23 புள்ளிகள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்துள் ளார்.

கடந்த ஆண்டு இவரது ஆட்டத் தைப் பார்த்த தேர்வாளர்கள் தேசிய அணிக்கு தர்ஷிணியை தேர்வு செய்தனர். ஆனால், “வாய் பேச முடியாதவளை வெளியூருக்கு அனுப்பாதே” என்ற உறவினர்களின் பேச்சை தவிர்க்க முடியாத பெற்றோர், போட்டியில் பங்கேற்க அனுப்பவில்லை. தனது திறமையை வெளிப் படுத்த கிடைத்திருக்கும் வாய்ப்பை விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த தர்ஷிணி, ஒரு வாரம் வரைசாப்பிடாமல் இருந்துள்ளார். ஆனாலும் அடுத்தாண்டு எப்படியும் தேசிய அணிக்காக விளையாட முடியும் என்ற நம்பிக்கையோடு மனம் தளராமல் மீண்டும் கடின பயிற்சி மேற்கொண்டு வந்தார். அவர் விரும்பியது போல் இந்த ஆண்டு தேசியஅளவில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.

தான் விளையாடிய அணிக்கு தர்ஷிணி பெருமை சேர்த்த போதிலும் அரை இறுதிப்
போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றிவாய்ப்பை இழந்து வெளியேறியது. தர்ஷிணியின் தாயார் ஜெயந்தி கூறுகையில், ஓரிரு வார்த்தைகளைத் தவிர செய்கையால் மட்டுமே பேசி வந்த தர்ஷிணி, கபடிப் பயிற்சி பெற ஆரம்பித்ததில் இருந்து மருத்துவ செலவு இல்லாமல் திக்கித்திணறி பேசுகிறார், அவளுக்கு நம்பிக்கையோடு, உற்சாகத்தையும் விளையாட்டின் மேல் தீராத ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருப்பது எங்களுக்கு அவள் மேல் இருந்த அச்சத்தை போக்கியுள்ளது என்றார்.
-அ.ர.பாபு

Leave A Reply