மதுரை, ஏப்.18-
மதுரை, அழகர்கோவில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுக்கடை கட்டிடத்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகில் பொய்கைக்கரைப்பட்டி மூனூர் கிராமத்தில் புதிதாக அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடையினை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை தலைமையில் மூனூர் கிராமத்து மக்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் செவ் வாயன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இரா.அண்ணாதுரை பேசுகையில், கடந்த சனிக்கிழமையன்று மதுக்கடையினை அகற்றுவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தகவல் அனுப்பப்பட் டது. மேலும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் நேரில் மனு அளிக்கப்பட்டது. இதுவரை அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது மதுக்கடையினை சுற்றிஅடைக்கப்பட்டு பார் வசதி ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இப்பகுதியில் கல்லூரி, மாணவர்கள் தங்கும் விடுதி, மதுபோதை மறுவாழ்வு மையம் உள்ளது.

இதுபோன்ற இடங்களில் மதுபானக்கடை அமைக்கக்கூடாது என இப்பகுதி மக்கள் கூறினர்.ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார். மதுக்கடையை அகற்றாததால் கோபமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கல்லூரி மாணவர்கள்,ஊர் பொதுமக்கள் ஆகியோர் மதுக்கடையினை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பொதுமக்களும் மாணவர்களும் மதுக்கடை கட்டிடம் மற்றும் பார் ஆகியவற்றை நொறுக்கினர்.

அப்போது இங்கு பார் நடத்து வதற்கு ஒப்பந்தம் வாங்கியுள்ள திமுக பிரமுகர் முத்துப்பொருள் என்பவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை மற்றும் பத்திரிகையாளர்களை அடிப்பதற்கு பாய்ந்தார். அப்பகுதி மக்கள் அவரைக் கண்டித்து, அழகர் கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அப்பகுதிக்கு வந்த அப்பன்திருப்பதி காவல்துறையினர், வடக்கு தாசில்தார் கருப்பையா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், இப்பகுதியில் மதுக் கடை வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று ஒப்புதல் அளித்தனர். இதனையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி, தாலுகாச் செயலாளர் எம்.பாலுசாமி,மாநகர் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பிச்சைமணி, தாலுகாக்குழு உறுப்பினர்கள் என்.மூர்த்தி,ஏ.கஜேந்திரன்,எம்.காசிராஜன், துபாய் பாண்டி,கணேசன் , கல்லூரி மாணவர்கள்,ஊர் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.

வாடிப்பட்டியில் மாணவ-மாணவிகள் மறியல்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகில் சந்தைவாசல் முன்பு இருந்த அரசு மதுபானக்கடை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அடைக்கப்பட்டது .இந்த மதுக்கடை கடந்த சில நாட்களுக்கு முன்பு போடிநாயக்கன்பட்டி கோட்டைமேடு சாலையின் எதிரே புனித சார்லஸ் பள்ளிகளின் அருகில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டிடம் கட்டி திறக்கப்பட்டது. இங்கு மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்த போதே பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியருக்கு ஆட்சேபணை தெரிவித்து மனுக்கள் அளிக்கப்பட்டன. அதையும் மீறி மதுக்கடை திறக்கப்பட்டதால் குடிபோதையில் பலர் பள்ளியின் முன்புறத்திலும், திறந்தவெளியிலும் ஆபாசமான வார்த்தைகளால் பேசிக்கொண்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. மேலும் பள்ளி செல்லும் வழியில் மதுபாட்டில்களை உடைத்து விட்டுபோவதால் மாணவ-மாணவிகள் நடந்து வரும் போது கை,கால்களில் காயம் ஏற்படுகிறது.

இதனால் கொதிப்படைந்த சார்லஸ் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் செவ்வாயன்று காலை வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலம் முன்புள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபானக் கடையை அகற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர். தகவலறிந்து வந்த வாடிப்பட்டி வருவாய் ஆய்வாளர் முத்து சங்கர், காவல் சார்பு ஆய்வாளர்கள் பழனிச்சாமி, சங்கர் ஆகியோர் பள்ளி தாளாளர் ஜான்கென்னடி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக்கடையை 15 நாட்களுக்குள் இடமாற்றம் செய்வதற்கு தாசில்தார் மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

திருச்சுழி
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ளது தும்முசின்னம்பட்டி. உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து எம்.ரெட்டியபட்டியில் இருந்த டாஸ்மாக் கடையை திடீரென தும்முசின்னம்பட்டி அருகே உள்ள தனியார் கட்டிடத்திற்கு மாற்றம் செய்தனர். இப்பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. மேலும் சேதுபுரம், திருமலைபுரம், தொப்புலாக்கரை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வழியில் உள்ளது. இதனால், அவ்வழியே நடந்து செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகும் என தெரிவித்து தும்முசின்னம்பட்டி, திருமலைபுரம், சேதுபுரம்,

தொப்புலாக்கரை ஆகிய 4 கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஒட்டு மொத்தமாய் மதுபானக் கடையின் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கடையை இடமாற்றம் செய்யும் வரை போராட் டத்தை கைவிட மாட்டோம் என முழக்கங்களை எழுப்பினர். தகவலறிந்து விரைந்து வந்த திருச்சுழி வட்டாட்சியர் மற்றும் எம்.ரெட்டியபட்டி காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், கடையை இடமாற்றம் செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொது மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.சந்திரமோகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வீரையா, செல்வராஜ், கிளைச் செயலாளர் குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அறந்தாங்கி
டாஸ்மாக் கடை திறப்பதற்கும் அதற்காக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கடையை கட்டக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை நாகுடி பேருந்து நிலையம் அருகே களக்குடி பாக்கத்தி, மாணவநல்லூர், வேட்டனூர், நாகுடி ஆகிய பகுதிகளிலுள்ள பெண்கள், பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் கவிவர்மன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மா.முத்து ராமலிங்கன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சலோனி, சிபிஎம் அறந்தாங்கி தாலுகாச் செயலாளர் தென்றல் கருப்பையா, மாதர் சங்க நிர்வாகிகள், வாலிபர் சங்கத்தினர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தஅறந்தாங்கி வட்டாட்சியர் இ.பரணி, அறந்தாங்கி டி.எஸ்.பி தெட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மார்க் கடை புதிதாக திறக்க மாட்டோம் என்று உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

சீலநாயக்கன்பட்டி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மூவரைவென்றன் அருகே சீலநாயக்கன் பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பள்ளி மற்றும் வழிபாட்டு தலம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதை அகற்ற வலியுறுத்தி சீலநாயக்கன்பட்டி, கலிங்கப்பட்டி, காடனேரி ஆகிய மூன்று கிராமத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து ஏப்ரல் 18 செவ்வாயன்று கடையை திறக்கவிடாமல் முற்றுகை மற்றும் ஒப்பாரி போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மூன்று ஊர் நிர்வாகிகள், மாதர் சங்க மாவட்ட தலைவர் ஜோதிலட்சுமி ஆகியோர் தலைமைதாங்கினர்.

Leave A Reply