வேலூர்,
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேவூரில் இருந்த டாஸ்மாக் கடை, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டது. இதற்கு பதிலாக, பைராஹி காலனியில் டாஸ்மாக் கடை அமைக்க, அதிகாரிகள் இடம் பார்த்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இப்பகுதி மக்கள், கடந்த, 10 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடை அமையவுள்ள இடத்தில் பந்தல் அமைத்து, உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இது குறித்து காட்பாடி காவல்துறையினர், டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ள வில்லை. வெறுப்படைந்த பெண்கள் கடந்த, 12 ஆம் தேதி காலை, 11 மணிக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்து, டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என, கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பிரச்சனையை தீர்த்து வைப்பர் என நினைத்து உண்ணாவிரதப் பந்தலிலேயே இரவு முழுவதும் படுத்து தூங்கி காத்திருப்பு போராட்டத்தை மக்கள் தொடர்ந்தனர்.

எட்டாவது நாளாக காத்திருக்கும் போராட்டம் நடந்தது. பின்னர், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர். அதிகாரிகள், தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் வரை, காத்திருக்கும் போராட்டம் தொடரும் என போராட்டக் குழுத் தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.

Leave A Reply