திருநெல்வேலி, ஏப். 17-
100 நாள் வேலை செய்யும் தொழி லாளர்களுக்கு கொடுக்க வேண்டிய 5 மாதசம்பளப் பாக்கியை உடனடியாக வழங்கக் கோரி நெல்லையில் விவசாயத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் பெருந்திரளாக வந்து மனு கொடுத்தனர்.

வறட்சி காரணமாக தொடர்ந்து 5 ஆண்டுகளாக வேலை, வருமானம் இழந்துள்ள விவசாயக் கூலித் தொழி லாளர்களுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.15 ஆயிரம் வாழங்கிடுக, 100 நாள் வேலையை 200 நாட்களாகவும் தினக்கூலியை ரூ.400 ஆகவும் உயர்த்திடுக, ஊரக வேலை திட்டத்தை பேரூராட்சிப் பகுதிக்கும் விரிவுபடுத்திடுக, பொது விநியோக திட்டத்தில் வழங்கப்படும் இலவச அரிசியை 30 கிலோவாக உயர்த்தி 6 மாதங்களுக்கு வழங்கிடுக, 100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு 5 மாத சம்பளப் பாக்கியை உடனடியாக வழங்கிடுக, தாமிரபரணி தண்ணீரை பன்னாட்டு குளிர்பான கம்பெனிகளுக்கு வழங்கக் கூடாது போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயத் தொழிலாளர்கள் திரண்டனர். இந்த பெருந்திரள் போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ லாசர் தலைமை தாங்கினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, பி.ஜெயராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமாநில குழு உறுப்பினர் தி.கணபதி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள்சங்க மாவட்ட செயலாளர் பாலுசாமி, விதொச தூத்துக்குடி முன்னாள் மாவட்டச் செயலாளர் சீனிவாசன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சைலஜா, கற்பகம், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.எஸ்.சிவசாமி, சிபிஎம் நெல்லை தாலுகா செயலாளர் எம்.சுடலைராஜ் , தாலுகா குழு உறுப்பினர் சங்காரவேலாயுதம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தங்கம், விதொசநிர்வாகிகள் ரயில்வே முத்துசாமி, முருகேசன், ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

பின்னர் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் லாசர் வழங்கினார். தொடர்ந்து அவர் மாவட்ட ஆட்சியரிடம் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளப் பாக்கி அதிகமாக இருப்பதாகவும் அதை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அதோடு விவசாயத் தொழிலாளர்களின் கோரிக் கைகளையும் விளக்கிப் பேசினார். அதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் சம்பளப் பாக்கி களை ஒரு வார காலத்திற்குள் தொழிலாளர்களுக்கு கிடைக்கும்படி ஏற்பாடு செய்வதாக கூறினார்.

Leave A Reply