சேலம், ஏப்.17-
சேலம் உருக்காலையைப் பாதுகாக்க வலியுறுத்தியும், தனியாருக்கு தாரை வார்ப்பதைக் கண்டித்தும் திங்களன்று சேலம் உருக் காலை முன்பு தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலை 4000 ஏக்கர் பரப்பளவில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்புடைய சொத்துகளுடன் மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையை தனியாருக்கு தாரைவார்க்கும் வகையில் தற்போது மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனைக் கண்டித்து சேலம் உருக் காலை தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து உருக்காலையை பாதுகாக்கக்கோரி ஆதரவு திரட்டியும் வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பதற்கான புதிய டெண்டரை அறிவித்துள்ளது. இதன்படி சட்ட ஆலோசகர், சொத்து மதிப்பீட்டாளர், தனியார்மயத்திற்கான ஆலோசகர் என மூன்று ஆலோசகர்களை நியமித்து அவர்களது அறிக்கையின் அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அமல்படுத்தினால் உருக்காலையில் தற்போதுள்ள 1300 நிரந்தர பணியாளர்களும், 800 தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மறைமுகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

ஆகவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் உருக்காலை தொழிலாளர் கூட்டமைப்பினர் திங்களன்று தங்களது குடும்பத்தினருடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, சேலம் உருக்காலை மோகன் நகர் முதல் கேட் துவங்கி இரண்டாம் கேட் வரை நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இப்போராட்டங்களில் உருக்காலை பாதுகாப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர்  எஸ்.கே.தியாக ராஜன், ஐஎன்டியுசி நிர்வாகி வடமலை, திமுக சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.இராஜேந்திரன் எம்எல்ஏ, பாமக மாநில துணை செயலாளர் அருள் மற்றும் சிஐடியு, பிடிஎஸ், எஸ்சி.,எஸ்டி அமைப்பு, ஓபிசி, நிலம் கொடுத்தோர் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந் தோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply