உத்திரமேரூர்,
உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரியும்,  மக்கள் வசிக்கும் இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது எனப் போராடிய பெண்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,இந்திய மாணவர் சங்கம் ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த தளவராம்பூண்டி ஊராட்சியில் புதியதாக  திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடையை எதிர்த்து உத்திரமேரூர் செங்கல்பட்டு சாலையில்  மாதர் சங்கத் தலைமையில் சாலை மறியல் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை ஆய்வாளர் ரமேஷ், சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பெண்களை மிகவும் தரக்குறைவாகப் பேசினார். கர்ப்பிணி பெண்களையும், கைக்குழந்தை வைத்திருந்தவர்களையும் கூட கீழே தள்ளினார். மிகவும் மரியாதைக்குறைவாக நடத்தினார் .சம்பவ இடத்தில் வட்டாட்சியரும் இருந்தார் .அவர் கூட இச்செயலை தடுக்கவோ கண்டிக்கவோ இல்லை.

கர்ப்பிணிகளையும், கைக்குழந்தை வைத்திருந்த தாய்மார்களையும் தரக்குறைவாக பேசி கீழே தள்ளிய ஆய்வாளர் ரமேஷ் மற்றும் வேணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து மாதர் சங்க மாவட்டச் செயலாளர் மருத்துவர் வா. பிரமிளா சிறப்புரையாற்றினார். மாதர் சங்கம் சார்பில்

வட்டச்செயலாளர் வி. ஜெயந்தி, செங்கை ஜெயந்தி, பிரியா , டிஒய்எப்ஐ மாவட்டச் செயலாளர் மா.பா நந்தன், எஸ்.எப்.ஐ நிர்வாகி மணிகண்டன் உட்பட திரளாக பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாக இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது

Leave A Reply