சென்னை ,

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விவசாயிகள் பிரச்னை தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பாக அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்  இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அனைத்துக் கட்சி கூட்டம் நிறைவு பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விவசாயிகள் நலன் காக்கவும், தமிழர்கள் நலன் காக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முழு அடைப்பின் தேவை குறித்து மக்களிடையே விளக்க ஏப்ரல் 22 ஆம் தேதி அனைத்துக் கட்சி விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும். அரசியலுக்காக இந்தக் கூட்டம் நடைபெறவில்லை. விவசாயிகளுக்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது என்றார்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான முக்கிய தீர்மானங்கள் விபரம்,

* விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி வருகிற 25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

* 22 ஆம் தேதி அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் சென்னையில் நடத்தப்படும்.

* தற்கொலை செய்த விவசாயிகளுக்கு இரங்கல்.

* தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்தை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும்.

* காவிரி மேலாண்மை வாரியம் – காவிரி ஒழுங்காற்று குழு உருவாக்க வேண்டும்.

* அனைத்து தரப்பு விவசாயிகளின் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

* விவசாயிகள் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

* நெல், கரும்புக்கு நியாய விலை வழங்க வேண்டும்.

* அனைத்துக்கட்சி தலைவர்களுடன் தில்லி சென்று பிரதமரை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.

*  குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

* நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து தமிழக அரசியல் சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

* மீத்தேன் – ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்.

* வறட்சி நிலவும் இந்த நேரத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தமிழகத்தை தேசிய பேரிடர் மாநிலமாக அறிவிக்க வேண்டும்.

* சாமளாபுரத்தில் பெண்கள் மீது காவல்துறை நடத்திய தடியடிக்கு கண்டனம்.

Leave a Reply

You must be logged in to post a comment.