இதற்கு நெல்லினைப் பரப்பிவைத்து அதிலே ஒரு குட்டி ஆட்டினை நிறுத்தி வைத்திருப்பார்கள். பின்னர் வேலன் என்ற அந்த பூசாரி மீது முருகன் ஏற அவன் குட்டி ஆட்டினை அறுத்து அதிலிருந்து வெளிப்படும் இரத்தத்தைஎடுத்துப் பெண்ணின் நெற்றியில் தடவுவான். இப்படிச் செய்வதால் பெண்ணிடமிருந்து பேய் அகன்று ஓடி விடும் என்பது மூட நம்பிக்கை. இதனை அப்படியே பதிவு செய்திருந்தால் நாம் பேச வேண்டிய தேவை இருக்காது, ஆனால் இளம் பெண்ணின் தோழி இந்த வெறியாடும்வேலனைப் பகடி செய்வதாக இலக்கியம் படைக்கப்பட்டிருப்பது மிக முக்கியமானது.

“முருகு அமர்ந்து வந்த முதுவாய் வேல
சினவல் ஓம்புமதி வினவுவது உடையேன்
பல்வேறு உருவின் சில்அவிழ் மடையொடு
சிறுமறிக் கொன்று இவள் நறுநுதல் நீவி
வணங்கினை கொடுத்தி ஆயின் அணங்கிய
விண்தோய் மாமலைச் சிலம்பன்
ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே”
(குறுந்தொகை – 362)

நான் கேட்கிறேன் என்று கோபித்துக் கொள்ளாதே. முருகனுக்குப் பலி கொடுப்பதாகச் சொல்லி ஆட்டுக் குட்டியைக் கொன்று அந்த இரத்தத்தைத் தலைவியின் நெற்றியில் தடவுகிறீர்களே! இந்தப் பலியிடுதலை குறிஞ்சி நிலத் தலைவனான சிலம்பனின் மார்பு உண்ணுமோ ? என்று தோழி கேட்கிறாள். எவ்வளவு நாசூக்கான நக்கலான மொழியில் தோழி பேசுகிறாள் பார்த்தீர்களா? தலைவிக்கு நோய் தந்த வன் குறிஞ்சி நிலத் தலைவன். அவனை அழைத்து மணமுடிப்பதை விடுத்து முருகனுக்குப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களே என்று நேரடியாகப் பளிச்சென பேசவேண்டியதைத் தான் அடக்கமாக மாற்றிப் பேசுகிறாள்.

ஒரே ஒரு புலவர் மட்டுமல்ல வெறிபாடிய காமக் கண்ணியார் பாடல்களும் (அகநானூறு 22, 98) குறுந்தொகை 111, 263, 360 ஐங்குறுநூறு 138, 156, 232, 272 நற்றிணை 34 ஆகிய பாடல்களும் வெறியாட்டினை இகழ்ந்தே பாடப்பட்டுள்ளன. குறிஞ்சி நிலத் தெய்வம் முருகன் என்று ஒரு பக்கம் கூறினாலும் மறு பக்கம் அந்த முருகனின் பெயரால் நடக்கும் மூடச் சடங்குகளைப் பெண்களே பகடி செய்ததாகப் புலவர்கள் பதிவு செய்திருப்பது அவைதிக மரபுகளை அவர்கள் உள்வாங்கியிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. அவற்றை வெளிப்படுத்தியும் இருக்கிறார்கள்.

சங்க இலக்கியங்களுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இயற்றப்பட்டதான காப்பியங்கள் பெரும்பான்மையும் சமண, பவுத்த சார்புடைய புலவர்களின் படைப்புகளாகும். இவற்றில் நமக்கு முழுமையாகக் கிடைத்திருப்பவை சிலப்பதிகாரம் , மணிமேகலை, சீவக சிந்தாமணி, நீலகேசி ஆகியவையே. மற்றவை பெரும் சிறும் காப்பியங்கள் என்ற பட்டியலில் இருந்தாலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. கிடைத்திருப்பதிலும் மணிமேகலைக் காப்பியமே முழுக்க முழுக்க தத்துவ விளக்க நூலாக இருக்கிறது. சிலப்பதிகாரத்தின் கணிகைப் பாத்திரமான மாதவி கோவலனைப் பிரிந்தபின் புத்தமதத்தைத் தழுவுகிறாள். அவளது மகள் மணிமேகலையும் புத்த பிக்குணியாகிறாள். மணிமேகலையின் மூலமாக புத்த சமயக் கருத்துக்கள் நிலை நாட்டப்படுகின்றன. பலவகையான சமயவாதங்களை வாதத்தால் நிராகரிக்கும் பகுதியாக “சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதை” விளங்குகிறது.

மணிமேகலை காப்பியத்தின் மையநோக்கமாக விளங்குவது மனித சமுதாயத்தின் பசிப்பிணி தீர்ப்பது. இந்தப் பிணிக்கு மருந்தாக அவளுக்குக் கிடைப்பது அட்சய பாத்திரமாகும். இந்தப் பாத்திரத்தின் மூல நாயகனாக இருப்பவன் ஆபுத்திரன் அதாவது பசுவின் மைந்தன்.இந்த ஆபுத்திரன் கதை வழியே வைதிக மரபுகளை அம்பலப்படுத்தி அவைதிக கருத்துக்களை நிலைநாட்டுகிறார். பெண்களின் வாழ்நிலை, உளவியல் சிக்கல்கள் தீர்வுக்கு மாற்றாக பாபவிமோசன பாசாங்கு போன்றவையும் இலைமறை காயாக இடம் பெற்றுள்ளன. வேத சமயத்தின் மீதும் வேள்வி முறைகள் மீதும் கடுமையான நேரடித் தாக்குதலைத் தொடுக்கிறது ஆபுத்திரன் கதை.

வாரணாசியில் அபஞ்சிகன் எனும் மறையோன் இருந்தான். இவனது பார்ப்பன மனைவி சாலி அவள் ஒழுக்கம் தவறியதால் குமரியில் நீராடப் புறப்படுகிறாள் வருகிற வழியில் முறைகேடாக உற்ற கருவிலிருந்து குழந்தை பிறக்கிறது. அதனை சிசுக்கொலை செய்யாமல் மறைவான ஓரிடத்தில் போட்டுவிட்டுப் போகிறாள் . பின்னர் குழந்தைபசியால் அழுகிறது அழுகுரலுக்கு இரங்கிய பசு ஒன்று அங்கு வந்து குழந்தைக்குப் பால் கொடுத்துப் பாதுகாக்கிறது. இப்படி வளர்ந்த குழந்தை தான் ஆபுத்திரன் எனப்படுகிறான்.

பின்னர் இளம்பூதி என்கிற மறையோனும் அவனது மனைவியும் ஆபுத்திரனை வளர்க்கிறார்கள். அவன் வாழ்ந்த ஊரில் மறையவர்களால் வேள்விக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த யாகத்தீயிலே போடுவதற்கு பசு ஒன்று கட்டப்பட்டுள்ளது . அந்தப் பசுவின் நிலையையும் ஆபுத்திரனின் தவிப்பையும் இப்படி சொல்லோவியம் ஆக்குகிறார் சீத்தலைச் சாத்தனார்.

“கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி
வலையிடைப் பட்ட மானே போன்று
அங்கு அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு
நெஞ்சு நடுக் குற்று நெடுங்கணீர் உகுத்தான்”

ஆபுத்திரன். மனம் பொறுக்காத அவன் அந்தப் பசுவை இரவோடு இரவாக அவிழ்த்துச் சென்று விடுகிறான். மறையவர்கள் அவனையும் பசுவையும் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள். தாய் தந்தையின் பெயர் அறியாததால் அவனைப் “புலைச் சிறுமகனே” என்று இழிவாக விளிக்கிறார்கள் கொன்று விடுவோம் என்று கோல்கொண்டு அடிக்கிறார்கள்.  ‘அருமறை நன்னூல் அறியாது இகழ்ந்தனை” என்று வேதங்கள் – அரியவை நன்னூல் (நல்லநூல்) என்றெல்லாம் புகழ்ந்து கூறி அஃதறியாமல் இகழ்ந்து விட்டாய் என்றும் கோபப்படுகிறார்கள். பசுமாட்டினை வேள்வியில் இடச் சொன்னதுதான் அருமறை நன்னூல் என்பதை இங்கே நினைவில் நிறுத்த வேண்டும்.

இதற்கிடையே அந்தப் பசு அங்கே இருந்த தலைமை மறையவனைக் கொம்பால் குத்தி தள்ளிவிட்டு காட்டுக்குள் ஓடி விடுகிறது. வேதங்களின் அருமை பெருமைகளை இவன் அறியாததற்குக் காரணத்தையும் கண்டறிந்து விட்டவர்கள்போல் “ஆமகன் அதற்கு ஒத்தனை அறியாய்” என்கிறார்கள், இதுவரை பொறுமை காத்த ஆபுத்திரன் ஆவேசம் அடைகிறான். வைதிகமரபில் சொல்லப்பட்டுள்ள மறையவர்களின் பிறப்புத் தன்மை களைப் பட்டியலிட்டு சொல்கிறான், இருடி (ரிஷி) கணங்கள் என்று உங்கள் குலத்தில் உயர்வாக சொல்லப்படுகிற அசலன் என்பவன் பசுவின் மகன். சிருங்கி என்பவன் மானின் மகன். விரிஞ்சி என்பவன் புலியின் மகன். கேசகம்பளன் என்பவன் நரியின் மகன் என்ற பட்டியலைச் சொல்லி விட்டு பசு வளர்த்தால் நான் மட்டும் இழிந்த குலம் ஆகிவிடுவேனா? நான்கு வேதங்களை நல்ல நூல் என்றீர்களே அதில் அப்படித்தான் சொல்லப் பட்டிருக்கிறதா என்று சாடுகிறான்.

அது மட்டுமல்ல வேதங்களில் அறிவு நிறைந்தவர்கள் என்று சிலரைச் சொல்கிறீர்களே அவர்களின் நிலை என்ன? அகத்தியர் வசிஷ்டர் என்று கூறப்படும் இரண்டு அந்தணர்களும் யாருடைய பிள்ளைகள்? (திலோத்தமை என்ற) கணிகைக்குப் பிறந்தவர்கள். சொல்லுங்கள் நான் சொல்வதில் ஏதாவது பொய்யிருக்கிறதா? நிலைமை இப்படி இருக்கும்போது என்தாய் சாலி என்ன தவறு செய்து விட்டாள்? என்று கேள்விகளை அடுக்குகிறான்.

“ஆன்மகன் அசலன் மான்மகன் சிருங்கி
புலிமகன் விரிஞ்சி புரையோர் போற்றும்
நரிமகன் அல்லனோ கேச கம்பளன்
ஈங்கு இவர் நும்குலத்து இருடி கணங்கள் என்று
ஓங்குயர் பெருஞ்சிறப்பு உரைத்ததும் உண்டால்
ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ
நான்மறை மாக்காள் நன்னூல் அகத்து “
மாமறை மாக்கள் வருங்குலம் கேண்மோ
முதுமறை முதல்வன் முன்னர்த் தோன்றிய
கடவுட் கணிகை காதலஞ்சிறுவர்
அருமறை முதல்வர் அந்தணர் இருவரும்
புரிநூல் மார்பீர் பொய்யுரை யோமோ
சாலிக்கு உண்டோ தவறு

மணிமேகலை ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை ; வரிகள் 63, 69, 93, 99 என்று கோபம் கொப்பளிக்கப் பேசும் ஆபுத்திரன் பாத்திரத்தின் வழியாக வேள்விகளை அம்பலப்படுத்தியும் ரிஷிகள் என்றும் வேத விற்பன்னர்கள் என்றும் போற்றப்படுவோரின் பிறப்புண்மைகளை வெளிப்படுத்தியும் பாடுகிறார் சீத்தலைச் சாத்தனார். பசுக்களைப் பாதுகாப்பதற்காகவே பிறந்திருப்பது போல் இப்போதும் காட்டிக் கொள்வோரின் முன்னோர்கள் வேள்விகளில் இளம் பசுக்களைக் கொல்வதற்கு என்னமாய்த் துடித்திருக்கிறார்கள்! பசுவைக் காப்பாற்றிய ஆபுத்திரனை எப்படித் தாக்கியிருக்கிறார்கள்! இழிவு படுத்தியிருக்கிறார்கள் என்பதை மணிமேகலைக் காப்பியம் எடுத்தியம்புகிறது. சென்ற நூற்றாண்டில் தந்தை பெரியார் அவர்கள் வேதமரபினரின் பிறப்புகளை இழிவுபடுத்திப் பேசியதாகக் கூறுவோர் இத்தகைய எதிர்கருத்து நிலையை சொல்வது காலம் காலமான மரபு தான் என்பதை உணரச் செய்கிறது. பண்டையச் சமூக மரபில் கடவுள் மறுப்பு என்பதோடு கடவுளை நிலை நாட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கருவிகளான வேத மறுப்பு . சடங்கு மறுப்பு என்பதுதான் நாத்திகத்தின் வேராக பார்க்கப்படுகிறது.

வேதாந்தங்களான உபநிடதங்களும் பிறவும் கடவுளின் கிருபை அவற்றிற்குச் செய்ய வேண்டிய சடங்குகளை விரித்துரைக்கின்றன. இவற்றையெல்லாம் வேதமறுப்பாளர்கள் பகடி செய்ததற்கான தரவுகள் இலக்கியங்களில் ஏராளமாக இருக்கின்றன. இறந்த பின் வானுலகம் சென்றதாக நம்புகின்ற உறவினர்கள் வீட்டில் சடங்கு செய்து உணவு படைக்கிறார்கள்.மேலுலகத்தில் இருக்கும் உறவினர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறார்கள். அப்படியென்றால் வீட்டின் தரைத் தளத்தில் ஒருவன் உணவுண்டால் முதல் தளத்தில் இருப்பவனுக்கு பசிபோய்விடுமா என்று பேசி வைதீகச் சடங்குகளையும் மூட நம்பிக்கைகளையும் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார்கள்.

இதனைச் சகித்துக்கொள்ள முடியாதவர்கள் வாதத்தால் வென்றதில்லை. மாறாக வசை மாரி பொழிந்திருக்கிறார்கள். சூழ்ச்சி அதிகாரத்தில் இருப்போரின் துணையோடு வன்செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசியில் கதைத் தலைவியான நீலகேசி பூதகனுடன் வாதிடுகிறாள். “சாத்திரமாவது வேதமன்றோ; அதுதான் சுயம்பு” என்பதுபூதகனின் வாதம்.

ஆனால் வேதங்களும் அவற்றிற்கு விளக்கங்களாக வந்த பிற நூல்களும் முரண்பட்டுக் கிடக்கின்றன. அவற்றால் பயனில்லை என்றாள் நீலகேசி. ஆத்திரமடைகிறான் பூதகன். வேத வேதாகமங்களை மறுத்துப் பேசிய நீலகேசி பற்றி பூதகன் எடுத்து சொல்லும் வார்த்தை மிகவும் கவனிக்கத்தக்கது. “சூத்திரி நீ அது வல்லை அலாமையின் சொல்லுகிறாய்” வாதிட்டு வெல்ல முடியாதவன் வர்ணாசிரமத்திற்குள் புகுந்து விடுகிறான்.

நீ சூத்திரி என்பதால் உனக்கு வேதத்தில் வல்லமை இல்லை. அதனால்தான் அப்படிச் சொல்கிறாய் என்கிறான். இப்படித்தான் வாதிட்டு வெல்லமுடியாத வைதிகமரபினர் வசை மொழியை வன்முறையைக் கையிலெடுக்கிறார்கள். அவைதிகர்கள் காலந்தோறும் உண்மைகளை உரக்கப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் கோவிந்த் பன்சாரே போன்றோரை அண்மைக் காலத்தில் இழந்திருக்கிறோம். இடைப்பட்ட காலத்தில் எட்டாயிரம் சமணர்களை கழுவேற்றிக்கொன்றிருக்கிறார்கள். அதற்கும் முற்பட்ட காலத்தில் எதுவும் நடக்கவில்லை என்று எண்ணிவிடக் கூடாது.

ஒன்று புரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒரு முது நூல்
இகல்கண்டோர் மிகல் சாய்மார்”
(புறநானூறு 166)

என்ற ஆகூர் மூலங்கிழாரின் புறநானூற்றுப் பாடல் வரிகளுக்கு விளக்கம் அளிக்க வந்த பழைய உரையாசிரியர் ‘வேதத்திற்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோராகிய புத்தர் முதலான புறச் சமயத்தோரது மிகுதியைச் சாய்க்க வேண்டி என்கிறார் (சாய்த்தல் / வீழ்த்துதல்) சாய்த்தல் என்பது கருத்துக்களை அல்லது கருத்துக் கொண்டிருந்தவர்களைக் கொள்கை பரப்பியவர்களை வீழ்த்துதல் என்பதை வரலாற்றின் வழி அறிந்து கொள்கிறோம். அவைதிக (நாத்திக) மரபுகளை முன்னெடுத்தல் என்பது எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதையும் அதற்கு ஆதரவானவர்கள் வசை பொழியப்பட்டிருக்கிறார்கள்.

களப்பலியாகியிருக்கிறார்கள் என்பதையும் தொல்காப்பிய காலம் தொடங்கி நீலகேசி காலம் வரை வரலாறு நெடுகக் காண்கிறோம். அதன் நீட்சியை வளர வொட்டாமல் வெட்டத் துடிப்பவர்கள் வைதிக மரபினர்.. வெட்ட வெட்ட மேலும் கிளர்ந்து துளிர்த்துக் கொண்டே இருப்பார்கள் அவைதிகமரபினர். ஏனெனில் அவைதிகம் என்பது அறிவின்பாற்பட்டது. அழியாது.

(நிமிர்வோம் – மார்ச் – 2017 இதழுக்கு
எழுதப்பட்ட கட்டுரை)

Leave a Reply

You must be logged in to post a comment.