தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே தனியார் கல்குவாரி லாரி மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் பி.எம்.சி என்ற தனியார் கல்குவாரி இயங்கி வருகின்றது. இந்த கல்குவாரிக்கு சொந்தமான லாரி ஒன்று வியாழனன்று பஜார் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஜோதிராஜா என்ற 70 வயது முதியவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியர் ஜோதிராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் லாரி ஓட்டுநர் ஆல்வின் ஜெபக்குமார் என்பவரை கைது செய்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் இந்த பகுதியில் லாரி போக்குவரத்து தடைசெய்யப்படும் என உறுதியளித்துள்ளதை தொடர்ந்து பொது மக்கள் போராட்டம் கைவிடப்பட்டது.

Leave A Reply