திண்டுக்கல். ஏப்.13-
திண்டுக்கல் அருகே வெள்ளரிக்கரை என்ற கிராமத்தில் உள்ள துவக்கப்பள்ளி மூடப்படும் நிலையில் உள்ளது. மலைவாழ் மக்கள் உள்ள இந்த பகுதியில் செயல்படும் பள்ளியை மேம்படுத்த அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் பெரும்பாறை பகுதியில் வெள்ளரிக்கரை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசின் தன்னிறைவு திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1983-ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. தொடக்கத்தில் இந்த பள்ளியில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பயின்றனர்.

தற்போது மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து 2 மாணவர்கள் மட்டுமே பயில்கிறார்கள். ஒரு தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் ஒருவர் அந்த மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள். இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
நாங்கள் சின்னாளபட்டியில் இருந்து பெரும்பாறைக்கு 2 பேருந்துகள் மாறி வருகிறோம். அங்கிருந்து வெள்ளரிக்கரைக்கு நடந்தே வருகிறோம். தொடக்கத்தில் இங்கு ஏராளமான மாணவர்கள் பயின்றனர். இந்த பகுதியில் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. வாகனங்களில் தங்களது பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் செல்கின்றனர். இதனால் வெள்ளரிக்கரை பள்ளி க்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே அடுத்த கல்வி ஆண்டிலாவது இந்த பள்ளிக்கு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் வருவார்கள் என நம்புகிறோம்.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, மல்லீஸ்வரன் ஆகியோர் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பெற்றோர்கள் மத்தியில் அரசு பள்ளி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசு பள்ளிகள் செயல்படும் பகுதிகளில் தனியார் பள்ளிகளின் செயல் பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ச.மோசஸ் கூறும் போது, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு துவக்கப்பள்ளி, 3 கிலோமீட்டர் தொலைவில் ஒரு நடுநிலை ப்பள்ளி, 5 கிலோமீட்டர் தொலைவில் ஒரு உயர்நிலைப்பள்ளி என்ற விதியை அரசு பின்பற்றி இருந்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பில்லை. மேலும் தனியார் பள்ளிகள் எந்த இடத்தில் துவங்கினாலும் அதற்கு அரசு அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது.

அதனால் தனியார் மெட்ரிக் பள்ளிகளால்தான் அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறைகிறது. மேலும் அரசு பள்ளிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும். மாணவர்களுக்கு கழிப்பறை கூட இல்லை. ஒரு நூலகம் இல்லை என்ற நிலை தான் உள்ளது. அரசு பள்ளியில் பயின்றால் அரசு வேலை என்ற அறிவிப்புகள் வராதவரை அரசு பள்ளிகளை காப்பாற்ற முடியாது. ஜூன் மாதம் நடைபெற வேண்டிய அட்மிஷன் தனியார் பள்ளிகளில் தற்போதே துவங்கிவிட்டது. அரசு பள்ளிகளில் ஜூன் மாதம் தான் அட்மிஷன் நடைபெறும். இத னால் தனியார் பள்ளிகள் மாணவர்களை வலைவீசி தேடி அழைத்துச் செல் கிறார்கள்.

அரசு பள்ளிகளில் இப்போதே பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி, கலந்தாய்வுகள் நடத்தப்பட வேண்டும். அதற்கு அரசு தேவையான முன்முயற்சிகளை இப்போதே துவங்க வேண்டும். இதே வெள்ளரிக்கரை பள்ளியில் நான் பணியாற்றியுள்ளேன். அப்போது 25 மாணவர்கள் வரை பயின்றனர். மாணவர்கள் வருகை குறைபாட்டுக்கு ஆசிரியர் பொறுப்பாக முடியாது. அந்த பகுதி பின்தங்கிய மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியாகும். எனவே இது போன்ற பகுதிகளில் செயல்படும் அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசு போதிய முன் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்.

(நநி)

Leave A Reply