கும்பகோணம், ஏப். 13 –
நெசவாளர் கூட்டுறவு சங்க கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென கைத்தறி நெசவாளர் சம்மேளன மாநாடு வலியுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் சம்மேளன (சிஐடியு) தமிழ் மாநில 12வது மாநாடு கும்பகோணத்தில் செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

மாநாட்டிற்கு கைத்தறி சம்மேளனத் தலைவர் ஆர்.சிங்காரவேலு தலைமையேற்றார். அஞ்சலி தீர்மானத்தை எஸ்.ராமர் வாசித்தார். முதல் நாள் செவ்வாயன்று மாநாட்டை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் துவக்கி வைத்தார். வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் முத்துகுமார் வாசித்தார். வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் கே.ஜீவா வாசித்தார். இரண்டாம் நாள் நிகழ்வாக கேரள கைத்தறி நலவாரிய தலைவர் அரக்கன் பாலன் பிரதிநிதி மாநாட்டை துவக்கி வைத்தார்.

தனியார் நெசவாளர்களுக்கு கூலி உயர்வு, பஞ்சப்படி போனஸ் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண துணி உற்பத்தி மற்றும் விற்பனை முறை ஒழுங்கமைப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளித்திட வேண்டும். சட்ட விரோத துணி உற்பத்தியாளர்கள் மீது ரக ஒதுக்கீடு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் நிவாரணம் வழங்கிட வேண்டும். கைத்தறி நலவாரிய கமிட்டியை அமைத்திட வேண்டும். பட்டு ஜரிகை விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.

பசுமை வீடு திட்டம் நகர்ப்புற நெசவாளர்களுக்கு விரிவாக்கம் செய்திட வேண்டும். மருத்துவக் காப்பீட்டு தொகையை உயர்த்த வேண்டும். நலிந்த நெசவாளர் கூட்டுறவு சங்க கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். ஓய்வூதியத் தொகையை உயர்த்த வேண்டும். தனியார் நெசவாளர்களுக்கான சேமிப்பு பாதுகாப்பு நிதி திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்:
தலைவராக ஆர்.சிங்காரவேலு, பொதுச் செயலாளராக இ.முத்துகுமார், பொருளாளராக ஜீவா, துணைத் தலைவர்களாக துரைராஜ், சண்முகம், முரளி, ரங்கநாதன், துணைச் செயலாளர்களாக என்.பி.நாகேந்திரன், பழனியம்மாள், ராஜகோபால், செல்லபாண்டியன் உள்ளிட்ட 36 பேர் மாநிலக் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன் நிறைவுரையாற்றினார்.

Leave A Reply

%d bloggers like this: