திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வலியுறுத்திப் போராடிய பெண்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய ஏடிஎஸ்பி பாண்டியராஜன் உள்ளிட்ட காவல்துறையினரை தண்டிக்க வலியுறுத்தி மங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மறியல் செய்த பெண்களை திருப்பூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையிலான காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். இதில் ஈஸ்வரி என்ற பெண்ணிற்கு செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தவறிழைத்த காவலர்களை உடனடியாக இடைநீக்கம் செய்து, சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதன்கிழமை தருமபுரியில் நிறைவடைந்த மாதர் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்ட முடிவுப்படி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. சாமளாபுரம் பகுதிக்குரிய மங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வியாழனன்று போராட்டம் நடைபெற்றது. முன்னதாக மங்கலம் நால்ரோடு திருப்பூர் சாலையில் இருந்து மங்கலம் காவல் நிலையத்தை நோக்கி அணிவகுத்து வந்தனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலச் செயலாளர் ராதிகா, மாவட்ட தலைவர் ஈ.அங்குலட்சுமி, மாவட்டச் செயலாளர் ஜி.சாவித்திரி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அப்போது காவல்துறையினரை கண்டித்தும், தவறிழைத்தோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பூரண மதுவிலக்கு கொண்டு வரக் கோரியும் முழக்கங்கள் எழுப்பிச் சென்றனர்.

மங்கலம் காவல் நிலையம் முன்பாக முற்றுகையிட்ட பெண்கள் காவல் துறையைக் கண்டித்தும், தவறிழைத்த ஏடிஎஸ்பி பாண்டியராஜன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆவேசமாக முழக்கமிட்டனர். மங்கலம் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தங்கவேல், போராடிய பெண்களிடம் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தக் கூடாது என்றும் காவல்நிலையத்திற்கு எதிராக போராடுவது தவறு என்றும் கூறினார். எனினும் அதை மீறி போராட்டம் தொடர்ந்தது. மாநிலத் தலைவர் வாலண்டினா, மாநிலச் செயலாளர் ராதிகா ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.

காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம்: சிபிஎம் கண்டனம்
முன்னதாக, சாமளாபுரத்தில் நடந்த தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்தது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், புதனன்று விடுத்த அறிக்கையில் கூறியிருந்ததாவது: திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது எனப் போராடிய அப்பேரூராட்சிக்கு உட்பட்ட மக்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இளைஞர்கள் ரத்தக் காயம் ஏற்படும் வகையில் தாக்கப்பட்டுள்ளனர். பெண்களை இழிவாகவும், தரக்குறைவாகவும் அவமரியாதை செய்ததோடு கம்புகளாலும், கைகளாலும் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் அறைந்ததில் ஒரு பெண்ணின் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை நீதிமன்றக் காவலில் வைத்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட வேறு சிலர் மீது காவல்துறை வழக்கு தொடுத்து சிறையில் அடைக்க முயல்கிறது. தங்கள் பேரூராட்சி பகுதியில் மதுக்கடைகள் அமைக்கக் கூடாது என்று போராடுவதற்கு கூட தமிழக காவல்துறை அனுமதிக்க மறுப்பதும், போராடுகிறவர்கள் மீது மிருகத்தனமான வன்முறையை ஏவி விடுவதும் அதிகரித்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவை கள்ளத்தனமாக மீறும் முயற்சியில் மாநில அரசு முயற்சித்து வருவதை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்தப் போராட்டங்களை காவல்துறையின் துணையோடு வன்முறையின் மூலமாக முறியடிக்க தமிழக அரசு முயல்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

சாமளாபுரத்தில் நடைபெற்றுள்ள தாக்குதல் கடுமையானது, அநாகரிகமானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதோடு, தாக்குதலில் ஈடுபட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், உடனடியாக இடை நீக்கம் செய்து கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சிறையிலடைக்கப்பட்டுள்ள மற்றும் காவல்துறையின் தேடுதல் பட்டியலில் உள்ளவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டுமெனவும், சிறையில் உள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. மேலும் தங்கள் பேரூராட்சி பகுதிக்குள் மதுக்கடைகளை அமைக்கக் கூடாது என்கிற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு எந்த மதுக்கடைகளையும் அந்த பேரூராட்சி பகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதனிடையே டாஸ்மாக் கடைகளை எதிர்த்தும், திருப்பூர் காவல்துறையைக் கண்டித்தும் மாநிலம் முழுவதும் வியாழனன்று போராட்டங்கள் நடந்தன.

வெம்பக்கோட்டை
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், ஆலங்குளம் அருகே உள்ளது டி.மேட்டூர் மற்றும் காந்தி நகர். இங்கு நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகள் திடீரென திறக்கப் பட்டது. இதனால் வெகுண்டெழுந்த பொது மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யில் இராஜபாளையம்-ஆலங்குளம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவ லறிந்து வந்த வட்டாட்சியர் மனோகரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். முடிவில் உடனடியாக இரு கடைகளையும் மூட உத்தரவிட்டார். முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எம்.சுந்தரபாண்டியன், ஒன்றியக்குழு உறுப்பினர் கே.கண்ணன், மாதர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பரமேஸ்வரி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி சுரேஷ், ஊர்த் தலைவர்கள் கணபதி, சுப்புராஜ், பச்சைமால், சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் ஆவேசம்
வியாழனன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட தமிழ் மாநில பெண்கள் கூட்டமைப்பை சேர்ந்த பெண்கள் திருப்பூர் கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜனை கைதுசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் அருள்மொழி தலைமை வகித்தார். நிர்வாகிகள் சந்திரகலா, சுந்தரம்மாள், கருத்தம்மாள் உள்ளிட்ட பலர்லந்து கொண்டனர். விடியல்,தேன் சுடர்,முரல், சங்கமம் உள்ளிட்ட பெண்கள் அமைப்பை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு மதுவிற்கு எதிராக முழக்கமிட்டனர்.

Leave A Reply