திண்டுக்கல். ஏப்.13-
இடதுசாரிப்பாதையில் இந்தியா பயணிக்க வேண்டும். அப்போது தான் உண்மையான வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற கருத்தரங்கில் திரைப்பட நடிகர் ராஜேஷ் கூறினார். ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என். வரதராஜனின் 5 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி செவ்வாயன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது.

கருத்தரங்கில் இடதுசாரி சிந்தனை யாளரும். திரைக்கலைஞருமான நடிகர் ராஜேஷ் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: ரஷ்யப் புரட்சிதான் உலகின் முதல் சோசலிசப் புரட்சி, இந்த புரட்சியால் உலகத்தில் உள்ள பல நாடுகள் விடுதலை அடைந்தன. இன்றைக்கு முதலாளித்துவத்தின் கேடுகளால் சமூகம் கெட்டு வருகிறது. வளர்ச்சிக்கான மாற்றம் இல்லாமல் வீழ்ச்சிக்கான மாற்றம் தென்படுகிறது. மதுரையில் சிங்கராயர் பணக் காரர், பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், கோட்டைச்சாமி தேவர் என பணக்காரர்கள் இருந்தனர். திண்டுக்கல்லில் ரோஜாபாக்கு, அங்கு விலாஸ் நிறுவன முதலாளிகள்தான் முதலாளிகளாக இருந்தனர்.

ஆனால் இன்றைக்கு மக்களுக்கு சேவையாற்ற வந்தவர்கள் அரசியலில் கொள்ளையடித்து பணக்காரர்களாக ஆகியுள்ளனர். இப்படிப்பட்ட வர்களுக்கு மத்தியில் தோழர்கள் பி.ராமமூர்த்தி, கே.டி. கே.தங்கமணி, ஏ.பாலசுப்ரமணியம், என்.வரதராஜன் போன்ற தலை வர்களும் அப்பழுக்கற்றவர்களாக வாழ்ந்து மறைந்தார்கள். எனக்கு சொந்த ஊர் திண்டுக்கல்தான். அதனால் தோழர் ஏ.பாலசுப்ர மணியத்தை பற்றி அறிவேன். தோல் பதனிடும் தொழிலாளர்களுக்காக போராடியவர். அமிர்தலிங்கய்யர் என்ற மிகப்பெரிய நீதிபதியின் மகனாக பிறந்தவர். கே.டி.கே. தங்கமணி போன்ற தலைவர்கள், பணக்காரக் குடும்பத்தில் பிறந்தாலும், ஏழை, எளிய மக்களுக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்து, மக்கள் சேவையாற்றினர்.

திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அந்த காலத்தில் ஏராளமான போராட்டங்கள் நடந்தன. அதனைப் பார்த்து பயந்ததுண்டு. ஆனால் பிற்காலத்தில் அந்த கட்சியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. ரஷ்யாவில் புரட்சி நடந்த பிறகு அந்த நாட்டின் மீது பல நாடுகள் படையெடுக்கத் திட்டமிட்டன. ஜெர்மனியை ஆண்ட ஹிட்லர் படையெடுத்தான். அந்த படைகள் முறியடிக்கப்பட்டு ரஷ்யப்படைகள் ஜெர்மனிக்குள் புகுந்தன. ஜெர்மானிய மக்களின் இதயம் வலிக்கிற அளவிற்கு ரஷ்ய படையான செஞ்சேனையின் ‘ஷூ’ சத்தம் இருந்ததாக கூறுவார்கள். பின்னர் ரஷ்யப்படைகள் ஜெர்மனியை கைப்பற்றின. உலகிற்கு ஏற்பட இருந்த ஆபத்தை தடுத்து நிறுத்தியது சோவியத் ரஷ்யாதான்.

நான் ரஷ்யாவுக்கு சென்றி ருக்கிறேன். அங்கே 10 நாட்கள் தங்கியிருந்தேன். மாமேதை லெனின் இறந்த பிறகு அவரது உடலை பதப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அந்த பதப்படுத்தப்பட்ட உடலை நான் 2 நாள் சென்று பார்த்தேன். மெய்சிலிர்த்துப் போனது. உலக மக்களின் தலைவராக கருதப்படுகிற அந்த தலைவனின் உடலை பார்த்தேன். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். இன்றைக்கு இந்தியாவில் முதலாளித்துவ அரசு நுகர்வுக் கலாச்சாரத்தை உருவாக்கி உள்ளது. இடதுசாரிப்பாதையில் இந்தியா திரும்பும்போதுதான் நாடு உண்மையான வளர்ச்சியடையும். இவ்வாறு ராஜேஷ் பேசினார்.

கருத்தரங்கிற்கு ஜி.தேவி தலைமை வகித்தார். சிபிஎம் நகரச் செயலாளர் பி.ஆசாத் வரவேற்றார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் என். பாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.கே.கருப்புசாமி, வ.கல்யாணசுந்தரம், ஒன்றியச் செயலாளர் அஜாய்கோஷ், மாவட்டக்குழு உறுப்பினர் ஜானகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வின்சென்ட் நன்றி கூறினார்.

(நநி)

Leave A Reply