மதுரை,
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம்  மதுரையில் நடைபெற்றது.  கூட்டத்திற்குப் பின்னர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாய வேலைகள் இல்லாமல் 95 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நூறு நாள் வேலைத்திட்டத்தில் குறைந்தபட்ச கூலியாக ரூ.205 அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் ரூ.130 மட்டுமே வழங்கப்படுகிறது.

இதுவும் 6 மாதங்களுக்கு மேலாக வழங்கப்படவில்லை. கேரளாவில் ரூ.240 வழங்குவது அமல்படுத்தப்பட்டுள்ளது. வறட்சி காலத்தில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய வேலைநாட்களை மிகக் குறைவாக தமிழக அரசு வழங்கியுள்ளது. 50 நாட்கள் தர வேண்டிய வேலை பல இடங்களில் 20, 35 நாட்கள் என குறைவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் விவசாயிகளுக்கான பணி அட்டை இதுவரை வழங்கப்படவில்லை. இதில் அரசும், அதிகாரிகளும் அலட்சியப்போக்குடன் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழகம் முழுவதும் ஆட்சியர் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடக்கின்ற பகுதிகளில் மட்டும் ஓரளவு ஊதியம் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக மாநில அரசு, மத்திய அரசு அதிகாரிகள் முரண்பாடான தகவல்களைத் தெரிவிக்கின்றனர்.

மேலும் வறட்சி பாதிப்பிலிருந்து விவசாயத் தொழிலாளர்களை மீட்பதற்காக நூறு நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்பட்டது. ஆனால் உயர்த்தப்பட்ட 50 நாளுக்கு வேலை வழங்கப்படவில்லை. வடகிழக்கு பருவ மழை தொடங்கும் வரை வேலை வழங்க வேண்டும். 150 நாள் வேலைக்குப் பதிலாக 200 நாள் வேலை வழங்க வேண்டும். அதற்கு ரூ.400 ஊதியமாக வழங்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 528 பேரூராட்சிகளில் 35 லட்சம் தொழிலாளிகளுக்கும் மேலுள்ளனர். பேரூராட்சிகளுக்கு நூறு நாள் வேலைத்திட்டம் ஒதுக்கப்படாததால் 35 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பேரூராட்சிகளில் தேர்வு நிலை பேரூராட்சி என  அனைத்தும் விவசாயப் பகுதிகளாக உள்ளன. எனவே பேரூராட்சிகளுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உழவர் அட்டை மூலம் திருமண நிதியுதவி, முதியோர் நிதி உதவி, வேளாண் நலத்திட்டங்களை பெற்று விவசாயிகள் பயனடைந்து வந்தனர். கடந்த 5 ஆண்டுகளாக உழவர் அட்டை வழங்கப்படவில்லை. பலமுறை அரசிடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. உழவர் அட்டையை  மீண்டும் வழங்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு தமிழகத்தில் மக்கள், விவசாயிகளின் பிரச்சனைகளை அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் கண்டுகொள்வது இல்லை. தங்களது பதவிகளை தக்கவைத்துக் கொள்வதில் மட்டுமே கவனமாக உள்ளனர். அரசின் அலட்சியப்போக்கால் ஆங்காங்கு போராட்டம் நடந்து வருகிறது.

தமிழகத்தின் நலனை வலியுறுத்தும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, புதுதில்லியில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி இதுவரை சந்திக்காதது ஏற்கத்தக்கது அல்ல. இந்நிலையில் பிரதமர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் ஆடைகளைத் துறந்து நிர்வாணமாக போராட்டம் நடத்தியுள்ளனர். விவசாயிகளின் அவலநிலை நாட்டுக்கே தலைகுனிவு. உலக ஊடகங்களே செய்தி வெளியிடும் அளவு போராட்டம் நடத்தி வரும் போது, விவசாயிகளை சந்தித்துப் பேசாமல் இருப்பது பிரதமர் நரேந்திர மோடிக்குத்தான் தலைகுனிவு.

விவசாயிகளுக்கு எதிரான மத்திய, மாநில அரசின் கொள்கைகளால் விவசாயிகள் நிர்வாணமாக்கப்பட்டுள்ளனர். தமிழகம் வறட்சி நிவாரணமாக கேட்ட ரூ.39 ஆயிரம் கோடியில், ஆயிரத்து 740 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. நூறு நாள் வேலைத்திட்டம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பிரச்சனை, வறட்சி நிவாரணம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் (பொறுப்பு) அமிர்தலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லதா, மாவட்டச் செயலாளர் சொ.பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply