குமரி மாவட்டம் ஆற்றூரில் ஓர் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்றேன். நிகழ்வில் வேளாண்மை குறித்து கருத்துரைக்க வேளாண்மை பேராசிரியர் ஒருவரை அழைத்திருந்தனர். பேராசிரியரோ ‘தமிழகத்தில் விவசாயம் செழித்தோங்குகிறது.. தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடுகிறது..’ என்று அள்ளி விட்டுக் கொண்டிருந்தார். எல்லாவற்றையும் கடும் சகிப்புத் தன்மையோடு நாங்கள் சகித்து கொண்டிருந்தோம்.

கடைசியில், நிகழ்வு குறித்து தங்கள் கருத்துக்களை கூற விருப்பமுள்ள மாணவ- மாணவிகள், தங்கள் இடத்தில் எழுந்து நில்லுங்கள் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அறிவித்தார். சில தனியார் பள்ளி மாணவிகள் எழுந்து தங்கள் நுனிநாக்கு ஆங்கிலத்தில், கருத்துரையாற்றியவர்களை புகழ்ந்து கொண்டிருந்தனர். கருத்துரையாளர்கள் புகழ்ச்சி மழையில் நனைந்து கொண்டிருந்தார்கள். மாணவிகளை கிண்டல் செய்யும் சில மாணவர்கள் கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, ஓர் அரசுப் பள்ளி மாணவி ஒருவர் எழுந்து தமிழ் மொழியில் கருத்துரையாளர்களிடம் பேசினார். அந்த மாணவி விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசினார்.

‘சார்.. நீங்க சொன்னீங்களே விவசாயத்தில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறதுண்ணு… தமிழக அரசு விவசாயிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்கிறதுண்ணு… அப்புறம் எதுக்கு சார் விவசாயிங்க வாயில எலியை கடிச்சுட்டு அரை நிர்வாணத்தோடு தில்லியில போராடுறாங்க..??’ மாணவியின் கேள்வியால் அதிர்ச்சியடைந்தார் பேராசிரியர். மாணவர்கள் கூக்குரலை நிறுத்தினர். அறை மெளனமானது. தொடர்ந்து பேசினார் அந்த மாணவி. காவிரி பிரச்சனை, வறட்சி நிவாரணம் என்று தொடர்ந்தது அவரது பேச்சு.

ஒருகட்டத்தில் பேராசிரியர் திணறிப்போனார். கல்வி மேடையில் அரசியல் பேசக்கூடாது என்று அறிவித்தார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். அதற்கு அந்த மாணவி அளித்த பதில் மிகவும் வித்தியாசமானது.  ‘சார்… நான் அரசியல் பேசல சார்… அரசாங்கம் விவசாயிகளுக்கு துரோகம்செய்து கொண்டிருக்கும் போது, தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஒரு பிரச்சனையும் இல்லைண்ணு பேராசிரியர் பேசினார். அதனால் தான் நான் கேள்வி கேட்டேன். நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிங்க தற்கொலை பண்ண பிறகும் இந்த அரசாங்கம் அவங்களுக்கு உதவி செய்யாம இருக்கிறது ஏன் என்று தான் கேட்டேன். இது தப்பா சார்..?’ உடனடியாக அந்த மாணவியின் கையிலிருந்த ஒலிபெருக்கி பறிக்கப்பட்டது.

பேராசிரியர் தண்ணீர் குடிக்க தொடங்கினார். அதுவரை கூக்குரலிட்ட மாணவர்கள் அவரை பலத்த கரகோஷத்துடன் பாராட்டினர்.சில நிமிடங்களிலே நிகழ்வு முடிந்து நண்பர்களுடன் வீட்டிற்கு திரும்பினேன். வரும் வழியில் ஒரு நண்பர் சொன்னார்: ‘அந்த பொண்ணுக்கு விவசாயிகள் மேலிருந்த பாசம் கூட நம்ம அரசாங்கத்துகிட்ட இல்லையேடா…’சில நொடிகளுக்கு பிறகு, வேறொரு நண்பர் சொன்னார்: ‘பாசம் என்னடா பாசம்.. கொஞ்சம் இரக்கமாவது காட்டியிருக்கலாம்..’ நான் வீட்டிற்கு வந்தபின் தொலைக்காட்சியைப் போட்டேன். 28 நாட்களுக்கு பிறகும் தொடர்கிறது தில்லி விவசாயிகள் போராட்டம்! ஜக்கியைப் பார்க்க பல்லாயிரம் கிலோ மீட்டர் பறந்து வந்த பிரதமர் மோடி, அவருக்குப் பக்கத்திலேயே போராடும் தமிழக விவசாயிகளை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. அந்த சின்னஞ்சிறு மாணவியின் கேள்விகள், மோடிக்குச் சமர்ப்பணம்!
– அபிஜித் சேகுவேரா

Leave A Reply