தரங்கம்பாடி, ஏப். 11 –
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வரலாற்று சின்னங்கள் நிறைந்த பாரம்பரியமிக்க நகரான தரங்கம்பாடியில் அடிப்படை வசதிகளை செய்து தர சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

14 ஆம் நூற்றாண்டிலிருந்தே மிகப்பெரிய கடல்வழி வணிகத்தளமாகவும், டேனிஷ் காரர்களின் கட்டுபாட்டிலிருந்த தரங்கம்பாடியில் 1620ல் கட்டப்பட்ட டேனிஷ் கோட்டை, 1701ல் கட்டப்பட்ட சீயோன் தேவா லயம், 1718ல் சீகன்பால்குவால் கட்டப்பட்ட புதிய எருசலேம் ஆலயம், அரேபியர்களால் கட்டப்பட்ட 320 ஆண்டுகள் பழமையான மசூதி, 1785ல் கட்டப்பட்ட டேனிஷ் ஆளுநர் மாளிகை,  கி.பி.1305ல் கட்டப்பட்ட மாசிலாநாதர் ஆலயம், 1845ல் கட்டப்பட்ட ஆங்கிலேயர் ஆட்சிக்கால மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பக்கிங்காம் கால்வாய் அருகே 1792ல் கட்டப்பட்ட தரங்கம்பாடி நுழைவாயில், 1716ல் கட்டப்பட்ட குருக்களை பயிற்றுவிக்கும் இறையியல் கல்லூரி, மாணவர் விடுதி, 17ஆம்நூற்றாண்டில் கட்டப்பட்ட சீகன்பால்கு வாழ்ந்த வீடு என ஏராளமான வரலாற்று சின்னங்கள் தரங்கம்பாடி பகுதியில் நிறைந்துள்ளன.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட இங்கு வந்து செல்கின்றனர். ஆனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்தாலும் அடிப்படை வசதிகள் ஒன்றும் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் கடும் அவதியுடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது. சமீபத்தில் டேனிஷ் கோட்டை ரூ.4 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் தொல்லியல்துறை, சுற்றுலாத்துறை ஆகியதுறையின் கீழ் புதுப்பிக்கும் பணி நடை பெற்றாலும் சுற்றுலா வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாதது பெரும் ஏமாற்றமாகும்.

தேவையான அளவு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி செய்து தர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தும் பெயரளவிற்கு மட்டுமே கோட்டையின் உட்புறத்தில் யாருக்கும் தெரியாமல் குடிநீர் வசதி மட்டும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கழிப்பிட வசதிக்கு எந்தவித நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட துறையினர் செய்யவில்லை. அன்றாடம் இங்கு பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக சொல்லப்போனால் பாரம்பரிய மிக்க முக்கிய நகரான தரங்கம்பாடி முழுவதும் கழிப்பிட வசதியே இல்லாதது வருந்தத்தக்க ஒன்றாகும். பலமுறை பொதுமக்கள் சார்பில் தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித பலனும் இல்லை. அதே போன்று டேனிஷ்கோட்டை மற்றும் கோட்டையை ஒட்டிய பகுதியில் நிழற்குடைகள் அமைக்கப்படாததால் நாள்தோறும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகின்றனர். வாகனம் மூலம் வருபவர்களில் பலர் நிழலுக்கு ஒதுங்க இடம் இல்லாததால் வாகனத்திலிருந்து இறங்காமலேயே திரும்பச் செல்லும் அவல நிலையையும் காணமுடிகிறது.

எனவே உடனடியாக வரலாற்று சின்னங்கள் நிறைந்த பாரம்பரிய நகரான தரங்கம்பாடியில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, நிழற்குடைகள் போன்றவற்றை அமைக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(ந.நி.)

Leave A Reply