சென்னை,
கோவை மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரிய வழக்கில் , கோவை மாவட்ட ஆட்சியர், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக  வீர விளையாட்டு நலச்சங்கத் தலைவர்  வி.எம்.கதிர்வேல் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :
சேவல் சண்டையில் செயற்கை உணவோ, மருந்து மாத்திரைகளோ கொடுக்கப்படாமல்

இயற்கையான உணவு முறை மூலம் வளர்க்கப்படும் சேவல்கள் மட்டும்   பயன்படுத்தப்படுகிறது.  அப்படிப்பட்ட கோழிப்பண்ணை வைத்திருப்பவர்களை ஊக்குவிக்கவே சேவல் சண்டை நடத்தப்படுகிறது.  இதனடிப்படையில் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2014 வரை போட்டிகள் நடத்தப்பட்டபோது, எவ்வித சட்டம் ஒழங்கு பிரச்சனை ஏற்படவில்லை. சண்டையின்போது சேவல்கள் துன்புறுத்தப்படவில்லை .  கடந்த மார்ச் 22ம் தேதி  முதல் 26ம் தேதி வரை சேவல் சண்டை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், புதிய மனு கொடுக்கவும், அதை பரிசீலித்து காவல்துறை முடிவெடுக்கவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் ஏப்ரல் 5ம் தேதி முதல் 9ம் தேதி  வரை சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி புதிய மனு   அனுமதியளிக்க காவல்துறை மறுத்துவிட்டது.
சேவல் சண்டையை  சூதாட்டம் போல் நடத்துவதால் சட்டம் ஒழங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சேவலின் கால்களில் கூர்மையான கத்திகள்வைத்ததால் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என பல காரணங்களை கூறி காவல்துறை அனுமதி மறுக்கிறது.   ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் போல சேவல் சண்டையும் பாரம்பரிய விளையாட்டு. எனவே , ஆலந்துறை காவல் நிலைய ஆய்வாளர் அனுமதி மறுத்து கடந்த ஏப்ரல் 3ம் தேதி  பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, போட்டி நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் இது தொடர்பாக காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு இம்மாதம் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் விலங்குகள் நலவாரியத்தையும் எதிர்மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டனர்.

Leave A Reply