தருமபுரி, ஏப். 12-
கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிந்து வரும் கூலித் தொழிலாளர்களுக்கு பாக்கி வைக்காமல் கூலிவழங்கக்கோரியும் அடையாள அட்டை வழங்க வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஏப்ரல் 24 ம் தேதி மாநிலம் முழுவதும் 100 மையங்களில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி தெரிவித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பி.சுகந்தி,“ மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 3,500 அரசு மதுபானக் கடைகளை அகற்றவேண்டும் என்றும் அகற்றப்படும் கடைகளை மீண்டும் வேறு எந்த இடத்திலும் திறக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், தமிழகத்தில் அகற்றப்பட்ட பெரும்பாலான கடைகளை மக்கள் குடியிருக்கும் பகுதியில் திறப்பதற்கு மாநில அரசு முயல்கிறது.

இது உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறும் செயலாகும்” என்றார்.திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என போராட்டம் நடத்திய பெண்களை மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதில் ஒரு பெண்ணுக்கு காது சவ்வு கிழிந்துள்ளது. அந்த டிஎஸ்பியை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் 27 பேர் மீது காவல்துறையினர் போடப்பட்டுள்ள பொய்வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நியாயவிலைக் கடைகளில் கடந்த சில மாதங்களாக அரிசி, பருப்பு, சமையல் மற்றும் மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை. அனைத்துக் கடைகளிலும் அத்தியாவசிய பொருட்களையும் முறையாக விநியோகம் செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஏப். 24 ஆம் தேதி போராட்டம் நடத்தப் படும் என்றார். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதமாக பல மாவட்டங்களில் கூலியை முறையாக வழங்காமல் பாக்கி வைத்துள்ளனர். சில இடங்களில் தொழிலாளர்களுக்கு வேலைக் கான அடையாள அட்டையைக்கூட வழங்கவில்லை. பாக்கித் தொகையை வழங்க வலியுறுத்தியும், அடையாள அட்டை வழங்கக் கோரியும் முற்றுகைப்போராட்டம் நடத்தப்படும் என்றும் சுகந்தி தெரிவித்தார்.

பேட்டியின்போது மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, பொருளாளர் இரா.மல்லிகா, மாநிலச் செயலாளர் சங்கரி,மாநில நிர்வாகி சாவித்திரி, தருமபுரி மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave A Reply