புதுக்கோட்டை, ஏப். 11 –
ஆர்.கே. நகர் தேர்தல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கல்குவாரியில் மத்திய பொதுப்பணித்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் செவ்வாயன்று அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 12 மணிநேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், விஜயபாஸ்கரின் குவாரி விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே கடந்த வெள்ளிக்கிழமையன்று விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், கல்லூரி, உறவினர்கள் மற்றும் உதவியாளர்களின் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 9.5 கோடி பணம் சிக்கியது. ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில், டிடிவி தினகரனுக்கு வாக்களிப்பதற்காக, வாக்காளர்களுக்கு ரூ. 89 கோடி அளவிற்கு பணம் கொடுக்கும் திட்டமும் அம்பலமானது. இதற்கான ஆவணங்கள் விஜயபாஸ்கரின் கணக்காளர் சீனிவாசனிடமிருந்தும், விஜயபாஸ்கரின் எம்எல்ஏ அலுவலகத்திலிருந்தும் வருமான வரித்துறை அதிகாரிகளால் கைப் பற்றப்பட்டது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை
யன்று விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி, சகோதரர் உதயகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்திய வருமான வரித்துறையினர், அமைச்சர் விஜயபாஸ்கரையும், நுங் கம்பாக்கம் அலுவலகத்திற்கு வரவழைத்து, சுமார் 5 மணி நேரம் வரை கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் திருப்தியில்லாத அதிகாரிகள் மீண்டும் விஜயபாஸ்கரை விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், செவ்வாயன்று மத்திய பொதுப்பணி மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான திருவேங்கைவாசல் கல்குவாரியில் நடத்திய சோதனை அவருக்கு புதிய நெருக்கடியாக மாறியுள்ளது.

தில்லியில் இருந்து வந்த மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் 10 பேர், செவ்வாயன்று காலை 7 மணிக்கு அதிரடியாக திருவேங்கைவாசல் குவாரிக்குள் நுழைந்தனர். அங்குள்ள அலுவலகத்தில் பணியில் இருந்த ஊழியர்களிடம் குவாரியின் செயல்பாடுகள், கற்கள் வெட்டி எடுப்பது குறித்து விசாரணை நடத்தினர். குவாரியில் அரசு அனுமதியை மீறி கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறதா? கனிம வளத்துறையின் விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு கற்கள் வெட்டப்படுகிறதா?  முறைப்படி குவாரி இயங்குகிறதா? என சோதனை நடத்தினர். நுழைவு வாயிலில் இருந்து சுமார் அரை கி.மீ. தூரத்தில் குவாரி உள்ளது.

அங்கு கற்கள் வெட்டி எடுக்கப்படும் முறைகள், கற்களின் அளவு, இதுவரை எவ்வளவு ஆழம் வரை கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன என்று சோதனை நடத்தினர். அமைச்சர் விஜயபாஸ்கர் 15 ஆண்டுகளாக திருவேங்கைவாசல் குவாரியை நடத்தி வருகிறார். அங்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு ஜல்லி கற்களாக அனுப்பப்படுகிறது. 100-க்கும் மேற்பட்டோர் இந்த குவாரியில் வேலை பார்த்து வருகிறார்கள். ஆனால், விஜயபாஸ்கரின் நிர்வாகத்தின் கீழுள்ள இந்த கல்குவாரிக்கு, இலுப்பூர் அருகே கரடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ஏ. சுப்பையா என்பவரின் பெயரில் உரிமம் பெறப் பட்டுள்ளது. குவாரிகளுக்காக வாங்கிய இடங்கள் ஒருவரது பெயரிலும், உரிமம் மற்றொருவர் பெயரிலுமாக இருக்கின்றன.

இந்த குவாரிகள் மூலம், கோடிக்கணக்கில் ரொக்க பரிமாற்றம் நடந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். நவீன எந்திரங்கள் கொண்டு மலைகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதால் அவை வாங்கியது, எப்போது? என்ற விவரங்களை வருமான வரித்துறை வட்டாரங்கள் சேகரிக்கத் தொடங்கியுள்ளனர்.குவாரி தொழில் தொடங்க வேண்டுமானால் பூமியில் இருந்து எத்தனை அடி தோண்டவேண்டும்; தோண்டப்பட்ட குவாரிகளில் கிடைத்த வேஸ்ட் மணலை அதிலேயே போட வேண்டும்; வெடி வைத்து தகர்க்கும் போது நீர்நிலைகள் பாதிப்பு இருக்கக் கூடாது; மாசுக்கட்டுப்பாடு அனுமதி பெற வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உள்ளன.

ஆனால், இவையெல்லாம் விஜயபாஸ்கரின் குவாரியில் மீறப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது. திருவேங்கைவாசல் குவாரியில் ரெடி மிக்ஸ் கான்கிரிட், தார் பிளாண்ட், கிரஷர் ஜல்லி பேவர் பிளாக் கற்கள் தயாரிக்கப்படும் நிலையில், தொழில் விரிவடைந்ததை தொடர்ந்து குவாரியின் பரப்பளவும் அதிகரிக்கப்பட்டு இருப்பது, இந்த குவாரியைச் சுற்றிலும் ராட்சஷ காம்பவுண்டு சுவர் அமைக்கப்பட்டிருப்பது, திருவேங்கைவாசல் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் நிலம் குவாரிக்காக வளைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

வெளியாட்கள் இந்த பகுதிக்குள் செல்லமுடியாத அளவுக்கு தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட லோடு லாரிகள் வந்து செல்வதாகவும் ஒரு லோடு தலா ரூ. 5 ஆயிரம் முதல் ரகம் வாரியாக ஜல்லி விற்பனை செய்யப்படுவதாகவும்; இந்த வகையில் நாள் ஒன்றுக்கு ரூ. 5 லட்சம் ரொக்கமாகப் புழங்குவதாகவும் கூறப்படுகிறது.

குவாரியில் பாறைகள் நவீன தொழில் நுட்பம் கொண்ட வெடிகளால் துண்டாக பிளக்கப்படுகிறது. இவற்றின் அதிர்வுகள் திருவேங்கை வாசல் யோகபுரீஸ்வர் கோயில் மற்றும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதுபற்றி ஏற்கெனவே, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குமுறலை வெளிப்படுத்தி வந்த நிலையில், மத்தியப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செவ்வாயன்று குவாரிகளில் அங்குலம் அங்குலமாக கள ஆய்வு செய்தனர். குவாரியில் உள்ள அறை ஒன்றையும் சீல் வைத்து, அங்கு சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு போட்டனர்.

இந்தச் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களும், குவாரிதொடர்பான முறைகேடுகளும் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ராதிகாவின் ராடான் நிறுவனத்தில் ஐடி ரெய்டு!
நடிகர் சரத்குமாரின் கொட்டி வாக்கம் வீட்டில், கடந்த வெள்ளிக்கிழமையன்று சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், செவ்வாயன்று நடிகை ராதிகாவிற்கு சொந்தமான ராடான் மீடியா நிறுவனத்திலும் சோதனையில் ஈடுபட்டனர். கொட்டிவாக்கம் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், சரத்குமாரை திங்களன்று நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு வரவழைத்த வருமான வரித்துறை அதிகாரிகள், அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சரத்குமாரின் மனைவி ராதிகாவிற்கு சொந்தமான ராடான்மீடியா நிறுவனத்தில் செவ்வாயன்று காலை வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

6 அமைச்சர்களுக்கு நோட்டீஸ்!
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ. 89 கோடி பணப்பட்டு வாடா நடந்ததாக கூறப்படுவது தொடர்பான விசாரணையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள், இதனடிப்படையில், பணம் விநியோகப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், செல்லூர் ராஜூ ஆகியோருக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அமைச்சர்கள் தவிர அதிமுக எம்.பி.க்கள் வைத்திலிங்கம், ராஜன் செல்லப்பா, முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி,மாதவரம் மூர்த்தி, கோகுல இந்திரா, பழனியப்பன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சுதா பரமசிவம், பாப்புலர் முத்தையா உள்பட சிலரது பெயரும் பணப்பட்டுவாடா பட்டியலில் உள்ளதால், அவர்களிடமும் விசாரிக்க அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

துணைவேந்தர் கீதாலட்சுமிக்கு நீதிமன்றம் கண்டனம்
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட அதேநேரத்தில், விஜயபாஸ்கரின் நட்பில் இருந்ததாக கூறப்படும் நடிகர் சரத்குமார், முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இவர்கள் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டது.

அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூவரும் ஆஜரான நிலையில், துணைவேந்தர் கீதாலட்சுமி மட்டும் ஆஜராகவில்லை. அவர்வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, செவ்வாயன்று விசாரணைக்கு வந்தநிலையில், அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அரசுப் பணியில் இருந்தாலும் வருமான வரி விசாரணைக்கு கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் கூறிவிட்டது. இதையடுத்து கீதாலட்சுமி தனது மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

Leave A Reply