திருப்பூர்/மதுரை, ஏப்.11 –
நெடுஞ்சாலைகளில் இருந்து குடியிருப்புகளுக்குள் மாற்றப்படும் டாஸ்மாக் கடைகளை எதிர்த்தும், இத்தகைய முடிவை மேற்கொண்டுள்ள தமிழக அரசின் அடாவடியான போக்கினை கண்டித்தும் மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் தன்னெழுச்சியாக திரண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் குடி நோயைப் பரப்பி இளம் பெண்களின் வாழ்வை சூறையாடும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தீவிரமடைந்துள்ள இத்தகைய போராட்டங் களை தடிகொண்டு அடக்குமுறை ஏவி ஒடுக்கிவிட முனைந்துள்ளது அதிமுக அரசு. திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து செவ்வாயன்று சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் மீது காவல் துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தினர். இதில் ரத்தம் சொட்டச் சொட்ட பலர் காயமடைந்திருப்பது தமிழக மக்களை கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

 

                             – ஜி.ராமகிருஷ்ணன், சிபிஎம் மாநிலச் செயலாளர்சா                                         மளாபுரத்தில் பல மணி நேரம் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் செல்லவில்லை. மாறாக காவல் துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியுள்ளனர். குறிப்பாக பெண்கள் மீதும் காவல் துறை அதிகாரிகள் கொடூரமான முறையில் வன்முறைத்தாக்குதலை நடத்தியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறையினர் மீது அரசு நிர்வாகம் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை அமைப்பதை எதிர்த்து பொது மக்களிடம் பரவலாக எதிர்ப்புக் கிளம்பியிருக்கும் நிலையில் அந்த முடிவை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்

சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாமளாபுரம் பேரூராட்சியில் வாழைத்தோட்டத்து அய்யன் கோயிலுக்குச் செல்லும் சாலையில் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று அமைக்கப்பட்டு செவ்வாயன்று திறக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பள்ளிக்கூடம் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்கு 500 மீட்டர் தொலைவுக்குள் வருவதால் இக்கடையைத் திறக்கக் கூடாது என்று பொதுமக்கள் ஆட் சேபம் தெரிவித்தனர்.

செவ்வாயன்று காலை மதுபானக் கடைதிறக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூர் சாலையில் காலை 10 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் மறியல் தொடர்ந்தபோதும் டாஸ்மாக் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை.  காவல் துறையினர் மட்டும் பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எனினும் கடையை மூட வேண்டும் என்று உறுதியோடு போராட்டம் தொடர்ந்தது.

நியாயப்படுத்திய அதிமுக எம்எல்ஏ :
இந்நிலையில் பிற்பகல் 2 மணியளவில் சூலூர் தொகுதி அதிமுக சசிகலா பிரிவு எம்எல்ஏ கனகராஜ் சம்பவ இடத்துக்கு வந்தார். அவரிடமும் கடையை மூட நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் கோரினர். ஆனால் அந்த கடை 500 மீட்டர் எல் லைக்கு அப்பால் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் திறக்கப்பட்டுள்ளது. எனவே கடை செயல்படும் என்று மக்கள் கருத்தைப் பொருட்படுத்தாமல் எம்எல்ஏ கனகராஜூம் பதிலளித்துள்ளார். மாலை 4 மணி வரை அவரை முற்றுகையிட்டு கடையை அகற்றுமாறு மக்கள் வற்புறுத்தினர்.இந்த நிலையில் காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். 4 மணியளவில் எம்எல்ஏ கனகராஜை அங்கிருந்து நாசூக்காக காவல் துறையினர் வெளியேற்றி அழைத்துச் சென்றனர்.

காட்டுமிராண்டித்தனமான தடியடி
அவர் வெளியேறிச் சென்ற அடுத்த ஐந்து நிமிடத்தில் திருப்பூர் மாவட்ட ஏடிஎஸ்பி பாண்டியராஜ் தலைமையில் காவல் துறையினர் கண்மூடித்தனமாக தடியடித் தாக்குதல் நடத்தினர். இதில் ஆண்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் கடும் தாக்குதலுக்கு உள்ளானார்கள். ஆண்கள் ஆறு பேருக்கு மண்டை உடைந்தது. பெண்கள் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சாமளாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தலையில் காயம் அடைந் தோர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தடியடியில் ஊடகத் துறையினர் மூவரும் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சுமார் 8 மணி நேரம் நடந்த மறியல் போராட் டத்தில் பொறுப்புள்ள அதிகாரிகள் சுமூகமான தீர்வுகாண முன்வராமல் காவல் துறைமூலம் தடியடி நடத்தியது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற் படுத்தியுள்ளது.

தக்கலையில் ஐந்தாவது நாளாக தொடரும் முற்றுகை                                                   குமரி மாவட்டம் தக்கலை அருகே ஆலங்கோடு பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை, டாஸ்மாக் நிர்வாகம் தக்கலை அருகே கீழகல்குறிச்சி பாலாகுளம் பகுதியில் வியாழனன்று திறந்தது. இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துவெள்ளி முதல் இரவு, பகலாக அப் பகுதியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஐந்தாவது நாளான செவ்வாயன்று, மதுக்கடை அமைந்துள்ள பகுதியில் பெண்கள் உள்பட ஏராளமானோர் அமர்ந்து கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்ட இடத்திற்கு வந்த தக்கலை போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். எனினும் நிரந்தரமாக மதுக்கடையை இங்கிருந்து அப்புறப்படுத்தும் வரை போராட்டம் நடைபெறும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

பேராவூரணி அருகே மாணவர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு
தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்துள்ள செருவாவிடுதி கடைவீதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வந்தது. உச்சநீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து இந்த மதுபானக் கடையும் மூடப்பட்டது. மாற்று இடத்தில் இந்த கடையை திறக்க அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், மதுபானக் கடையை திறக்க பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். செருவாவிடுதி தெற்கு ஊராட்சியில் அமைந்துள்ள போத்தியம்பாள் நகரில் அரசின் மதுபானக் கடையை திறக்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர். இந்த பகுதியில் தான் அரசின் “தரம் மேம்படுத்தப்பட்ட” அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும், பிற பணிகளுக்கு செல்வோருக்கும் செருவாவிடுதி ஆரம்ப சுகாதாரநிலைய வளாகத்தில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தை பெரிதும் பயன்படுத்தி பலனடைந்து வருகின்றனர். இந்த பகுதியில் அமைந்துள்ள போத்தியம்பாள் நகரில் புதிதாக அரசின் மதுபானக் கடையை தொடங்க இப்பகுதி மக்கள், மாணவர்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுக்கு புகார் மனுக்களை அனுப்பி உள்ளனர்.

மணப்பாறையில் சாலை மறியல்
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட 2வது வார்டு செவலூர் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் செவ்வாயன்று சாலை மறியல் நடைபெற்றது.

சாலை ம0றியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணப்பாறை வட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமைவகித்தார். மறியல் போராட்டத்தில் மணப் பாறை வட்டச் செயலாளர் ராஜகோபால், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புறநகர் மாவட்டத் தலைவர் பாலு, செவலூர் கிளைச்செயலாளர் வினோத், அழகர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.பின்னர் துணைத்தாசில்தார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இப்பகுதியில் டாஸ்மாக்கடை திறக்கப்படமாட்டாது என உறுதியளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Leave A Reply