திருப்பூர்:
டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் செவ்வாயன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் குறிப்பாக திருப்பூரில் டிஎஸ்பியாக பணியாற்றி வரும் பாண்டியராஜன் போராடிய பெண்களில் ஒருவரை நடு ரோட்டில் வைத்து ஆவேசமாக கன்னதில் அறைந்து நிலைகுலையச் செய்தார். அவருடன் வந்த காவலர்கள் மற்ற பெண்களை விரட்டி விரட்டி அடித்தனர். அதனை படம் எடுத்துக்கொண்டிருந்த சன்டிவி கேமரா மேன் கிருஷ்ணனின் கேமராவையும் பிடுங்க முயற்சித்தனர். மேலும் போலீஸ் நடத்திய தடியடி தாக்குதலில் பலரின் மண்டை உடைந்தது. இதனால் ரத்தத்தோடு பதறியடித்து பொதுமக்கள் ஓடினர்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பொது மக்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிபிஎம் கடும் கண்டனம்
காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச்செயலாளர் கே.காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் முழுவதும் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அமைக்க திருப்பூர் மாவட்ட  நிர்வாகம் முயன்று வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு அனைத்து பகுதிமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் நேரடியாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து டாஸ்மாக் அமைக்கக்கூடாது என மனு அளித்தும் வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், மக்கள் நலனை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் டாஸ்மாக் கடை அமைப்பதிலேயே குறியாக இருந்து வருகிறது. இதற்கு காவல்துறையினரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு போராடும் மக்களை மிரட்டி வந்தனர்.
இந்நிலையில் இன்று சாமாளாபுரம் பகுதியில்  டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்டோரை காவல்துறையினர் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக்கின்றனர். குறிப்பாக பெண் ஒருவரை நடுரோட்டில் வைத்து டிஎஸ்பி பாண்டியராஜன் மிக ஆவேசத்துடன் தனது பலம் முழுவதை செலுத்தி கன்னத்தில் ஓங்கி அறையும் காட்சி மனதை பதறவைக்கிறது. காவல்துறையினரின் தொடர் தடியடி தாக்குதலில் பலரின் மண்டை உடைக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித்தன தாக்குல் மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெண்களை தாக்கிய டிஎஸ்பி பாண்டியராஜன் உள்ளிட்டு தாக்குதல் நடத்திய அனைத்து காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதை அரசு கைவிட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave A Reply