தரங்கம்பாடி, ஏப். 10 –
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி ஹைடெக் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் புதுச்சேரி, சென்னை, திருவண்ணாமலை பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பிளாஸ்டிக்துகள்களைக் கொண்டு எரிபொருளாகவும், பயன்படுத்தக்கூடிய பொருளாகவும் மாற்றி சாதனை படைத்துள்ளனர். மாணவர்களின் கண்டுபிடிப்பை கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.

தரங்கம்பாடியில் இயங்கிவரும் ஹைடெக் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஜெயராஜ், முரளி ஆகியோரின் அறிவுரையின் படி சென்னை ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் அபிலாஷ்குமார், பிரேம்குமார், பார்த்தசாரதி, ஆகாஷ், புதுச்சேரி ஆக்லவியா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர் ஸ்ரீராம், திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் சுரேஷ், கார்த்திகேயன் ஆகியமாணவர்கள் இணைந்து பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கழிவுகளை பயன்படுத்தி எரி பொருளாகவும், அதில் கிடைக்கக்கூடிய கழிவுகளை கொண்டு கற்கள் மற்றும் பயன்படுத்தக்கூடிய பொருளாகவும் மாற்றி சாதனைப் படைத்துள்ளனர்.

இக்கண்டுபிடிப்பு குறித்து செயல் விளக்கம் அளித்து மாணவர்கள் கூறியதாவது: இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் என்பது பொதுமக்கள் இடையே அத்தியாவசிய பொருளாக மாற்றப்பட்டுள்ளது. சிறிய பை முதல் பெரிய உபகரணங்கள் வரை பிளாஸ்டிக் பயன்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு அபாயகரமாக உள்ள பிளாஸ்டிக்கை அழிப்பதற்கு வழிமுறைகள் இருந்தாலும் கூட அவை நிலத்திற்கும், சுற்றுப்புற சூழலுக்கும் ஏற்படும் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக அமைகின்றன. எனவே அதை ஏன் மாற்று எரிபொருளாக பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணம் உதித்தது.

பிளாஸ்டிக் எரியும் போது சுற்றுச் சூழல் கடுமையாக மாசுபடுகிறது. எரிப்பதனால் வெளிவரும் வாயுக்கள் கொடிய நோய்களை ஏற்படுத்துகின்றன. எனவே சுற்றுச்சூழல் பாதிப்பின்றி பிளாஸ் டிக்கை ஒழிக்கும் முறை இதில் மேற் கொள்ளப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கில் 7 வகை உள்ளது . சில வகை பிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருளை எடுக்க இயலாது. பி.இ.டி.இ பிளாஸ்டிக்கில் ஆக்சிஜன் அதிகமாக உள்ளதால் அதனை வெப்ப சிதைவு அறையினுள் பயன்படுத்த இயலாது. பி.வி.சி. பிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள் எடுக்க இயன்றாலும் அதில் இருந்து வெளிப்படும் குளோரின் வாயு தண்ணீருடன் கலந்து அமிலமாக உருவாகும். எனவே இவ்வகை பிளாஸ்டிக்கையும் பயன்படுத்த இயலாது.

பிளாஸ்டிக் வகைகளில் பாலிதீன் வகையே அதிகமாக பயன்பாட்டில் உள்ளது. எனவே அதனை தேர்ந்தெடுத்து எரிபொருள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். எரிபொருள் தயாரிப்பு முறை பாலிதீன் பிளாஸ்டிக்கை சேகரித்து அதை சிறு துகள்களாக மாற்றும் இயந்திரத்தின் உதவியுடன் சிறு துகள்களாக மாற்றினோம். வெப்பச் சிதைவு அறையை உருவாக்குவதற்கு துத்தநாக இரும்புகலவை, வார்ப்பு இரும்பு கலவை கொண்ட உலோகத்தை உபயோகப்படுத்தினோம். சிறுசிறு துகள்களாக வைத்துள்ள பிளாஸ்டிக்கை வெப்பச்சிதைவு அறையினுள் 1 கிலோ பிளாஸ்டிக்குக்கு 50 கிராம் சாம்பலை ஊக்கியாக செலுத்தினோம். பின்பு அதை 280 டிகிரியிலிருந்து 320 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தினோம். இந்த செயல்பாடு நடந்து முடிவதற்கு 2 முதல் 3 மணி நேரம் வரை ஆகும்.

மேலும் இச்செயல்பாட்டை விரைவு படுத்த வெப்பச்சிதைவு அறையை வெப்பம் வெளியேறா வகையில் உள்ள வெப்பத்தடுப்பு பொருட்களை பயன் படுத்தி காப்பிடை செய்ய வேண்டும். பிளாஸ்டிக்கை வேதிவினைக்கு உட்படுத்து வதன் மூலம் வெளியில் வரும் வாயுவைகண்டன்சர் மூலம் திரவ எரிபொருளாக மாற்றி சேகரித்தோம். 1 கிலோ பிளாஸ்டிக்கில் இருந்து 900 மி.லிட்டர் எரிபொருள் கிடைக்கும். இவ்வாறு பிளாஸ்டிக் கழிவு களை எரிபொருளாக மாற்றுவதனால் அத
னை சேகரித்து வைக்கும் நிலப்பரப்பின் தேவையும் வெகுவாகக் குறையும். மேலும் அவற்றால் ஏற்படக்கூடிய அபாயகரமான விளைவுகளும் குறைவதோடு பயன்பாட்டிற்கு தேவையான எரிபொருளும் கிடைத்து விடுகிறது. இந்த முறையில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதனால் சுற்றுச்சூழலுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது. இவ்வாறு மாணவர்கள் கூறினர். மாணவர்களின் சாதனையை கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Leave A Reply