மதுரை, ஏப். 10 –
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையம், மிக மிக அதிக அளவில் வாக்காளர்களுக்கு லஞ்சமாக பணப்பட்டுவாடா செய்தது தொடர்பான புகார்கள் உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையிலேயே தேர்தலை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது; எனவே பணப்பட்டுவாடாவுக்கு காரணமான அதிமுக கோஷ்டிகளின் வேட்பாளர்கள் மற்றும் திமுக வேட்பாளர் ஆகியோரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

மேலும், மிகப்பெருமளவில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதற்கு பிரதான காரணமாக இருந்த நபராக தேர்தல் ஆணையமே குற்றம்சாட்டியுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரைச் சார்ந்தோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 12 (புதனன்று) நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு மிக அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்படுவது தொடர் பான புகார்கள் உறுதிசெய்யப்பட்ட நிலையில் தேர்தலை ரத்து செய்து ஞாயிறன்று இரவு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக திங்களன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தலை ரத்து செய்வது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகளில் வாக்காளர் களுக்கு பணம் பட்டுவாடா செய்த காரணத்தினால் ரத்து செய்யப்பட்டது. இந்தச் சூழ்நிலைமையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஆலோசிக்க வேண்டும்.

சாத்தான்குளம், ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர் ஆகிய தொகுதிகளில் ஏற்கெனவே வாக்காளர் களை விலை பேச அதிமுக பல நூதன முறைகளை பின்பற்றியது. அதேபோல திருமங்கலத்தில் திமுக, வாக்காளர்களுக்கு லஞ்சமாகப் பணப்பட்டுவாடா செய்ய நூதன முறைகளைப் பின்பற்றியது. இந்த இரு கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம்கொடுத்து ஜனநாயகத்தை விலை பேசுவதற்காக உருவாக்கிய மோசமான அதே ‘பார்முலா’க்கள் தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் பின்பற்றப்பட்டன. தேர்தல் ஆணையத்தாலேயே சகிக்க முடியாத அளவிற்கு பணப்பட்டுவாடா மிக அதிகமாக நடந்த பின்னணியில்தான் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தோல்வியடைந்த தேர்தல் ஆணையம்
இந்த தேர்தலில் ஆளுங்கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் சரி ஒருவருக்கொருவர் சளைக்காத விதத்தில் பணப்பட்டுவாடா செய்வதில் தீவிரமாக இருந்தனர். ஒட்டுமொத்தமாக ஜனநாயகத்தை சீர்குலைத்தனர். எந்த அளவிற்கு பணப்பட்டுவாடா நடக்கிறது என்பது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் விரிவானபுகார்களை அளித்திருக்கிறோம். ஆனாலும் கூட தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. டி.டி.வி.தினகரன் கோஷ்டி, ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டி மற்றும் திமுகவினரின் பணப்பட்டுவாடா குறித்து நாங்கள் அளித்த புகாரில், விரிவான விவரங்களைக் குறிப்பிட்டு, அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தவில்லை; தடுத்த நிறுத்த முடியவில்லை. இது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தோல்வியே ஆகும்.

கிரிமினல் நடவடிக்கை
ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவரைச் சார்ந்தோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி ஏராளமான பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளது. ஆர்.கே. நகரில் கிட்டத்தட்ட ரூ.89 கோடி அளவிற்கு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. எனவே விஜயபாஸ்கர் மீதும், அவரைச் சார்ந்தோர் மீதும் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தகுதி நீக்கம் அவசியம் – ஏன்?
அதுமட்டுமல்ல, பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களை சுட்டிக்காட்டியே தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்கிறபோது, பணப்பட்டுவாடா செய்த – பணப்பட்டு வாடா செய்வதற்கு காரணமான வேட்பாளர் களை உடனடியாக தகுதிநீக்கம் செய்ய வேண்டும். இந்த தேர்தலில் டி.டி.வி. தினகரன் கோஷ்டி ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ.4 ஆயிரம் என விலை வைத்தது; ஓ.பி.எஸ் கோஷ்டி ரூ.3 ஆயிரம் என விலை நிர்ணயித்தது; திமுக ரூ.2ஆயிரம் என பேரம் பேசியது. எனவே இந்த கட்சிகளின் வேட்பாளர்களை அவசியம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

ஏற்கெனவே கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் மிகப்பெருமளவு பணப்பட்டுவாடா நடந்தது; ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டது என்ற பின்னணியில் முதலில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, எந்த வேட்பாளர்களால் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது என்று குற்றம்சாட்டப்பட்டு தேர்தல் ரத்து செய்யப்பட்டதோ அதே வேட்பாளர்களை அந்தக் கட்சிகள் மீண்டும் களமிறக்கின. இது ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக்குவதாகும். எனவே தேர்தல் ரத்துக்கு காரணமான வேட்பாளர்கள், அடுத்து போட்டியிடாத வகையில் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.

எங்களை ஏன் தண்டிக்கிறீர்கள்?
ஆர்.கே.நகர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனது வேட்பாளராக ஆர்.லோகநாதனை களமிறக்கி தீவிரமாக பணியாற்றியது. வீதி வீதியாக வாக்காளர்களை நேரில் சந்தித்து, அவர்களது குறைகளைக் கேட்டு, அதைப் போக்குவோம் என வாக்குறுதி அளித்து, பிரச்சாரம் மேற்கொண்டு வந்தோம். மாற்று அரசியலை முன்வைத்தோம். தேர்தல் ஆணையம் அனுமதித்த வரம்புகளுக்கு உட்பட்டு, மாநிலம் முழுவதும் ஏழை, எளிய மக்களிடம் சிறுகச் சிறுக நிதி திரட்டி எங்களது கட்சியும் சில லட்சம் ரூபாய்களை இந்த தேர்தல் பணிகளுக்காக செலவழித்துள்ளது. ஆனால் இப்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பணப்பட்டுவாடா செய்த வேட்பாளர்கள் செய்த தவறுகளுக்காக நாங்களும் சேர்த்து தண்டிக்கப்பட்டிருக்கிறோம். எனவே தேர்தல் ஆணையம் எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

பணப்பட்டுவாடாவைத் தடுக்க என்ன வழி?
தேர்தல் வருகிற போது வேட்பாளர்களின் செலவுகளை தேர்தல் ஆணையமே ஏற்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். வேட்பாளரே செலவு செய்வது என் பதைத் தடுத்தால்தான் பணப்பட்டுவாடா தடுக்கப்படும். அதுமட்டுமல்ல, 1964 ஆம் ஆண்டு முதலே இந்தியத் தேர்தல் முறையில் நாங்கள் சீர் திருத்தம் கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையிலான தேர்தல் நடைபெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது. அறிஞர் அண்ணாவும் இதே கருத்தை முன்வைத்தார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

மீண்டும் ஆர்.கே.நகரில் தேர்தல் நடைபெறுகிற போது நேர்மையாக, சுமூகமாக, பணப் பட்டுவாடா இன்றி நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் வேண்டும்.இன்றைக்கு கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை உள்பட இயற்கை வளங்களை கொள்ளையடிப்பது, ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் தங்களை வளப்படுத்திக் கொள்ளமட்டுமல்ல, அந்தப் பணத்தின் ஒரு பகுதியைத்தான் தேர்தலிலும் பயன்படுத்துகிறார் கள்; வாக்காளர்களை விலை பேசுவதற்கு பட்டு வாடா செய்கிறார்கள். எனவே இதைத் தடுத்துநிறுத்த வேண்டியது அவசியமாகிறது.

தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்து வெளியிட்டுள்ள உத்தரவில், “தேர்தல் நடைமுறையின் தூய்மை என்பது மேற்கண்ட பணப்பட்டுவாடா நடவடிக்கைகளால் மிகக்கடுமையாக – மிக மோசமாகச் சிதைக்கப்பட்டுள்ளது’ என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறது. வாக்குச் சாவடிகளை கைப்பற்றுவது மட்டும்தான் ஜனநாயகப் படுகொலை அல்ல; வாக்காளர்களை பணம்கொடுத்து விலைக்கு வாங்குவதும், அவர்களையே விலை பேசுவது என்பதும் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையே ஆகும்.

வாக்காளர்களை விலைபேசி அவர் களது வாக்குகளைப் பெற முயற்சிக்கிற போதே
மேற்படி ஆண்ட, ஆளும் கட்சியினர் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்றே பொருளாகும். எனவேதான் பணப்பட்டுவாடா செய்கிறார்கள். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாமல், பணநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், இது எதைக்காட்டுகிறது என்றால் அரசியல் ரீதியாக,கொள்கை ரீதியாக அவர்கள் திவாலாகிவிட் டார்கள் என்பதைத்தான். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

முதல்வருக்குப் பொறுப்பு உண்டு
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பணப்பட்டு வாடாவைத் தடுப்பதில் தேர்தல் ஆணையத் திற்கு பொறுப்பு இருக்கிறது; அதேபோல அரசியல் கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது எனக் குறிப்பிட்டார். “டி.டி.வி.தினகரன் ஒரு கூட்டத்தில் சொல்கிறார், நான் இங்கே பேசிக் கொண்டிருக்கும் போது சற்று தொலைவில் எனக்காக யாரோ ஒருவர் வாக்காளருக்கு பணம் கொடுப்பதாகச் சொன்னால் அதற்கு நான் எப்படி பொறுப் பாக முடியும் என அவர் கேட்கிறார்; பணப்பட்டுவாடா புகாரையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

பணம் கொடுத்தவர் எப்படி ஒப்புக்கொள்வார் என்பதே நமது கேள்வி. அரவக் குறிச்சி தேர்தலின்போது கரூர் அன்புநாதனின் வீட்டில் ரெய்டு நடத்தி கோடி கோடியாக பெருமளவில் பணம் கைப்பற்றப்பட்டது. தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு கண்டெய்னர் லாரிகள் பிடிபட்டன. ஆனால் அதற்குப் பிறகு என்னாயிற்று என்ற கேள்வி முக்கியமானது. தேர்தல் ஆணையம் வெறும் சோதனைகளோடு நிறுத்திவிடாமல் தனது நடவடிக்கைகளைத் தொடர வேண்டும். அப்படித் தொடரமாட்டார்கள் என்ற எண்ணத்தில்தான் தினகரன் போன்றவர்கள் மேற்கண்டவாறு பகிரங்கமாகவே பேசுகிறார்கள். அவருக்காக வாக்கு கேட்டு பணப்பட்டுவாடா செய்ததில் அவருக்கு நிச்சயம் தொடர்பு உண்டு. அதுமட்டுமல்ல, அவர் சம்பந்தப்பட்டுள்ள கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் பொறுப்பு உண்டு. கட்சியின் தலைமைக்கு தெரியாமல் எப்படி பணப்பட்டுவாடா நடக்கும்? எனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குற்றச்சாட்டுக்கள் உண்மையானால் தகுதிநீக்கம் செய்யப்படுவோம் என்ற அச்ச உணர்வு சம்பந்தப்பட்டவர்களுக்கு வரும் விதத்தில் அந்த நடவடிக்கைகள் அமைய வேண்டும்” என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்தாலும் அதை மறுக்காமல் ஜனநாயகக் கடமையை மறந்து மக்கள் ஏன் அதை வாங்குகிறார்கள் என்ற ஒரு செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ஜி.ராமகிருஷ்ணன், “இந்த விஷயத்தில் ஊடகங்களுக்கு பெரும் பொறுப்பு உண்டு. எங்களைப் பொறுத்தவரை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறோம். ஊடகங்களும் அதைச் செய்ய வேண்டும். ஆர்.கே.நகரில் நாங்கள் பிரச்சாரத்திற்கு செல்லும்போது கணிசமான இளைஞர்கள், தங்களது வாக்குகள் விலைபேசப்படுவதை விரும்பவில்லை என்பதைச் சொன்னார்கள். அவர்கள் விழிப்புடன்தான் இருக்கிறார்கள். அதையும் தாண்டி எளிய மக்களிடையே மேற்படி ஆண்ட, ஆளும் கட்சிகளின் மீது ஒருவித வெறுப்புணர்வு இருக்கிறது; இவர்களில் யார் வெற்றிபெற்றாலும் எதுவும் செய்யப்போவதில்லை; எனவே இப்போது கொடுப்பதையாவது வாங்கிக் கொள்ளலாம் என்ற சிந்தனைப் போக்கு உருவாகியிருப்பதே, கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்வது என்ற நிலைக்கு காரணம். எனவே தேர்தல் ஆணையம் விடாப்பிடியாக கடும் நடவடிக்கையை முழு அளவில் எடுக்க வேண்டியது அவசியம் எனக் குறிப்பிடுகிறோம்” என்று அவர் கூறினார்.

கறுப்புப் பணம் ஒழியவில்லை
“இந்த நேரத்தில் மற்றொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. பண மதிப்பு நீக்கத்தால் கறுப்புப் பணம் ஒழிந்துவிட்டதாக பிரதமர் மோடியும் பாஜகவினரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆர்.கே.நகரில் கணக்கில் காட்டப்படாத இவ்வளவு பணம் எப்படி வந்தது? ரூ.89 கோடி அளவிற்கு விஜயபாஸ்கரின் பிடியில் இருந்து மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. அந்தப் பணம் எந்தக் கணக்கில் இருக்கிறது? எனவே கறுப்புப் பணம் எந்தவிதத்திலும் ஒழியவில்லை. அது மேலும் வளர்ந்திருக்கிறது” என்றும் ஜி.ராமகிருஷ்ணன் தனது பேட்டியின்போது சுட்டிக்காட்டினார்.

பேட்டியின்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா.ஜோதிராம், இரா.அண்ணாதுரை, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
(நமது சிறப்பு நிருபர்)

Leave A Reply