சண்டிகர், ஏப். 10 –
சண்டிகரிலுள்ள சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்திய பல்கலைக்கழகத்திற்கு மாவீரன் பகத்சிங் பெயரை வைக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழகங்களில் பகத்சிங் பெயரில் ஒரு புதிய அமர்வு தொடங்க வேண்டும் என்றும் புரட்சியாளர்களின் படைப்புகள் குறித்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும் என்றும் பஞ்சாப்பில் நடைபெற்ற மாணவர் – வாலிபர் சங்கங்களின் மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பஞ்சாப்பில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த மாநாடு, பகத்சிங் மற்றும் படுகேஷ்வர் தத் ஆகியோர் 1929 ஆம் ஆண்டு மத்திய சட்டசபை மீது குண்டு வீசிய நாளான ஏப்.8 அன்று இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் விக்ரம் சிங் தலைமையில் பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலுள்ள மாணவர் – வாலிபர் சங்கங்களின் சார்பில் சண்டிகரிலுள்ள பாக்னா பவன் அரங்கில் நடைபெற்றது.

அகாலி தள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம் சிங் சந்த்மஜ்ரா, முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால், பகத்சிங்கின் அண்ணன் மகன் அபே சந்த், ஜாக்ரூப் சிங்(சிபிஐ), விஜய் மிஸ்ரா(சிபிஎம்), பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறு குறித்த நூலை எழுதிய பேரா.சமன் லால், பேரா. எம்.எம்.ஜூனேஜா ஆகியோர் உரையாற்றினர்.

ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சந்த் சிங் மற்றும் அதிலிருந்து பிரிந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தரம்பிர் காந்தி ஆகியோரும் மாணவர்- வாலிபர் சங்கங்களின் இந்த தீர்மானத்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மேலும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த தீர்மானத்திற்கு முழு ஆதரவை தருவதாக உறுதி அளித்ததோடு, இதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து அறிக்கை ஒன்று தயார் செய்யப்படும் என்று உறுதி கூறினர்.

இதுகுறித்து அகாலி தள நாடாளுமன்ற உறுப்பினர் சந்த்மஜ்ரா கூறுகையில், நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும் பஞ்சாபியாகவும் இருப்பதால், இந்த கோரிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவேன் என்றார். மேலும், பேராசிரியர் சமன்லால், பகத்சிங் மற்றும் படுகேஷ்வர் தத் ஆகியோர் மத்திய சட்டசபையில் குண்டு வீசுவதற்கு முன்பு (நாடாளு மன்றத்தில்) அமர்ந்திருந்த இருக்கைகளுக்கு அவர்களது பெயர்களை சூட்ட குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.