தேச பக்தர்களே
கண்களை
மூடி கொள்ளுங்கள்
ஆடையை இழந்தது
விவசாயிகள்
தேகம் அல்ல
இந்திய தேசம்!

ஆடை களைந்தான்
விவசாயி
அம்மணமாய் நிற்கிறது
அரசு!
தியாகம் செய்ய
மிச்சம் இருப்பது
உயிர் மட்டுமே
அதையும்
எடுத்து கொண்டு
ஒளிரட்டும்
புதிய இந்தியா!
பத்து இலட்ச
ஆடை அணிந்தான்
நாட்டின் தலைவன்
பத்து நிமிடம் பார்க்க
அம்மணமாய் நிற்கிறான்
விவசாய குடிமகன்!
வல்லரசு கனவை
கழுவேற்றி கொன்றது
உழவனின் நிர்வாணம்!
கேடுகெட்ட நாட்டிலே
மனிதனாய் பிறந்ததற்கு
மாடாய் பிறந்திருந்தால்
மதிப்பு இருந்திருக்கும்
குரல் கொடுக்க
கூட்டம் இருந்திருக்கும்
இனியென்ன…
உழவனின் துயர
சிதையில் எரியட்டும்
ஐனநாயக மானம்!
வானம் பார்த்து
பயிர் செய்தவன்
மானம் இழந்து
போராடுவது
அவன் வயிற்றுக்காக
மட்டுமல்ல
வேடிக்கை பார்க்கும்
நம் வயிறுக்காகவும் தான்!
-பிரசாந்த் வே

Leave a Reply

You must be logged in to post a comment.