சென்னை,
மிகுந்த மன அழுத்தம் சர்க்கரை நோயை ஏற்படுத்தும் என்று  நீரிழிவு சிகிச்சை மைய நிபுணர் டாக்டர் மோகன் கூறியுள்ளார்.
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தாண்டு பொதுமக்களிடையே   மனஅழுத்தம் குறித்து விவாதிக்குமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டது என்றார். மனதில் இருப்பதை பூட்டி வைத்துக்கொள்ளாமல் நண்பர்கள் மற்றும் மருத்துவர்களிடம் கூற வேண்டும் என்றார். எப்போதும் மகிழ்ச்சியாகவும்  மற்றவர்களுடன் அன்பாக பழகியும் வந்தால் மன அழுத்தம் ஏற்படாது என்றார்.  மன அழுத்தம் வந்தால் அது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து உடலுக்கு பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
சென்னை நீரிழிவு ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை அறிவியலாளரும், மருத்துவ ஆய்வு சோதனைகள் துறையின் தலைவருமான மருத்துவர் பூங்கோதை பேசுகையில்   நீரிழிவு நோயாளிகள், மனஅழுத்தத்திற்கு ஆளாவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்றார். நீரிழிவு என்பது குறைபாடுதானே ஒழிய நோய் அல்ல. இதை நன்கு உணர்ந்து கொண்டவர்கள் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, மருந்துகள் மூலமாக உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறார்கள். எனவே மன அழுத்தத்திற்கான காரணங்களை கண்டுபிடித்து அவற்றை களைந்தாலே அந்த பிரச்சனையில் இருந்து எளிதாக விடுபடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.