கிருஷ்ணகிரி,
ஓசூர் – ராயக்கோட்டை சாiயில் அரசு அலுவலகங்கள்,   அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன. இதன் அருகே  இருந்த இரண்டு மதுக்கடைகளும், தளி சாலையில் உள்ள ஒரு மதுக்கடையையும் மூடுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த கடைகளை இரவோடு இரவாக கோகுல்நகர் சாலையில் திறப்பதற்கு அரசு அதிகாரிகள் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். மதுக்கடையை மூடுவதாக அறிவித்து விட்டு, எங்கள் பகுதியில் அதே கடையை திறப்பது என்ன நியாயம் என அப்பகுதிமக்கள் அதிகாரிகளிடம் கேள்விஎழுப்பினர்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வாசுதேவன், மாதர்சங்க மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி ஆகியோர் கூறுகையில், இந்த மதுக்கடைகளை மூட வலியுறுத்தி வாலிபர், மாதர் சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தது. மேலும் ஆட்சியரிடமும் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. அப்போதே அதிகாரிகள் இந்த மூன்று கடைகளையும் மூடுவதாக அறிவித்தனர்.

ஆனால் கடைகளை மூடவில்லை.  தற்போது தமிழக அரசு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை மூட உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடைகள் மூடப்பட்டு வருகின்றன. ஆனால், மூடப்பட்ட கடைகளை வேறு இடங்களில் திறப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இப்படி அரசு நாடகமாடி வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். மூடப்பட்டப் கடைகளை வேறு பகுதியில் திறக்க முயற்சித்தால் மக்களை திரட்டி நாங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம் என்று அவர்கள் கூறினர்.

Leave A Reply