சென்னை:  ‘மார்க்சிஸ்ட்’ மாத இதழ் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த வே.மீனாட்சி சுந்தரம் எழுதி, பரிசல் புத்தக நிலையம் பதிப்பித்துள்ள “இந்திய பொருளாதார வரலாறு-மார்க்சியப் பார்வை” நூல் வெளியீட்டு விழா புதனன்று (ஏப். 5) கிண்டியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நூலை திறனாய்வு செய்து பேசிய சென்னை மாற்றுவளர்ச்சி மைய இயக்குநர் பேரா.ஜெ.ஜெயரஞ்சன், “ இந்திய பொருளாதாரத்தை ஆய்வு செய்தவர்கள் 1980களின் நடுப்பகுதி வரை சாதியை கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. அதிலிருந்து இந்த புத்தகம் வேறுபட்டுள்ளது. உலக பொருளாதார வரலாறு, இந்தியாவின் வரலாறு, காலனிய சுரண்டல் ஆகியவற்றின் பின்னனியோடு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலை வாசிக்கும்போது நூலாசிரியரின் தார்மீக கோபத்தை புரிந்து கொள்ள முடியும். ஆராய்ச்சி மாணவர்கள் கவனத்தில் கொள்ள அம்சங்கள் இதில் நிரம்ப உள்ளன. வர்க்கப் போராட்டத்தையும், சமகால நிகழ்வுகளையும் கவனத்தில் கொண்டு நூல் எழுதப்பட்டுள்ளது.” என்றார்.

“காலனியாத்திக்கத்தில் இந்திய பொருளாதாரம் சுரண்டப்பட்டது. மூலதன திரட்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது, அதற்கான கூறுகளை ஆங்கிலேயே அரசு அழித்தது. தற்போதைய பொருளாதாரக் கொள்கையால் தொழில்முனைவோர், விவசாயிகள், தொழிலாளர்கள் லாபமடையவில்லை. இத்தகையச்சூழலில் சிலர் காந்திய பொருளாதாரத்தை பின்பற்ற கூறுகின்றனர். அந்தப்பொருளாதாரத்தில் உள்ள குறைபாடுகளை நூலாசிரியர் விளக்கியுள்ளார். இந்நூலை பொருளாதார மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். கல்லூரி மாணவர்களும், ஆய்வாளர்களும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் இது. கடந்தகால பொருளாதார சுரண்டலுக்கும், தற்காலத்தில் உள்ள பொருளாதார கொள்கைக்கும் உள்ள ஒற்றுமைகளை அடுத்த பதிப்பில் கூடுதலாக சேர்க்க வேண்டும்” என்றார் ஐஐடி சமூக அறிவியல் துறை பேரா.கல்பனா கருணாகரன்.

இந்நிகழ்விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.செல்வா தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.அப்பனு வெளியிட, தென்சென்னை மாவட்டச் செயலாளர் எம்.குமார், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.நிருபன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சிஐடியு மாநில துணைப்பொதுச் செயலாளர் ஆர்.கருமலையான், பரிசல் புத்தக நிலைய பதிப்பாளர் சிவ.செந்தில்நாதன் உள்ளிட்டோர் பேசினர். நூலாசிரியர் வே.மீனாட்சி சுந்தரம் ஏற்புரையாற்றினார்.

Leave A Reply