கொழும்பு,
இந்திய – இலங்கை மீனவர்கள் இடையே வெள்ளியன்று (ஏப். 7) மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
பாரம்பரிய பகுதியில் மீன்பிடிப்பது தொடர்பாக, இந்திய – இலங்கை மீனவர்கள் இடையே நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்திய மீனவர்கள் எல்லை கடந்து மீன்பிடிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர்.
இதனை தடுக்கவும், இரு நாட்டினரும் கடல் எல்லையை சுமூகமான முறையில் வரையறுத்துப் பயன்படுத்தி கொள்ளவும் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த மார்ச்சில் 3வது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
இந்நிலையில், இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே கொழும்பு நகரில் ஏப்ரல் 7 அன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையில், எல்லை தாண்டி மீன்பிடிப்பதில் உள்ள பிரச்சனை மற்றும் இரட்டை மடி மீன்வலை தொடர்பாக இலங்கை மீனவர்கள் தரப்பிலும், இலங்கை படையினரின் கொடுந்தாக்குதல்கள், சிறைப்பிடிப்பு மற்றும் படகுகள், உபகரணங்கள் பறிமுதல் தொடர்பாக இந்திய மீனவர்கள் தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.