தஞ்சாவூர், ஏப். 3 –
வறட்சி நிவாரணம் வழங்குவதில் தமிழகத்தை வஞ்சித்த மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் டெல்டா மாவட் டக்குழுக்கள் சார்பில் தஞ்சாவூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ. சண்முகம் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்டச் செயலாளர் சாமி. நடராஜன், நாகை மாவட்டச் செயலாளர் வி.சுப்பிரமணியன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுசாமி, திருச்சி மாவட்டச் செயலாளர் வி. சிதம்பரம், கடலூர் மாவட்டச் செயலாளர் ஜி.ஆர். ரவிச்சந்திரன், விவசாயத் தொழிலாளர் சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே. காமராஜ், தஞ்சை மாவட்டப் பொருளாளர் ஏ. கோவிந்தசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாநிலத் துணைத்தலைவர் கே. முகமது அலி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் டி. ரவிச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கோ. நீலமேகம், மாவட்டச் செயலாளர் ஆர். மனோகரன் உள்பட ஏராளமனோர் கலந்துக்கொண்டனர். முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதுமே வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் மத்திய அரசிடம் வறட்சி நிவாரணமாக ரூ. 39 ஆயிரத்து 565 கோடி கேட்கப்பட்ட நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கு வெறும் ரூ. 1748 கோடியை மட்டும் அறிவித்துள்ளது.

இது யானைப் பசிக்கு சோளப்பொரி வழங் கிய கதையாக உள்ளது. எனவே, தமிழக அரசு கோரிய வறட்சி நிவாரணத்தை முழுமையாக மத்திய அரசு வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்க மாநில அரசு தடைவிதித்துள்ள நிலையில், மீத்தேன் எரிவாயு எடுக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது கண்டிக்கத்தக்கது. டெல்டா மாவட்டங் களில் விவசாயத்தை அழித்து பாலை வனமாக்கும் மீத்தேன் எரிவாயு திட் டத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். காவரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் மேலாண்மை வாரியம், நீர் ஒழுங்காற்று குழுவையும் அமைக்காத மத்திய அரசு, தற்போது, மாநிலங்களுக்கான நதிநீர் சிக்கலை தீர்க்க புதிதாக தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள சட்ட முன்வடிவு 2017-ஐ திரும்பப் பெற வேண்டும்.

விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக விவசாயிகள் தில்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு பெ. சண்முகம் கூறினார்.

(ந.நி.)

Leave A Reply