இளமைப் பருவம் அழகானது, இனிமையானது, சுவையானது என்பதை யாரும் மறுக்க முடியாது. யாரிடம் கேட்டாலும் பள்ளி வாழ்க்கையே சிறப்பானது என்பர். ஏன் என்றால் அந்தப் பருவத்தில் தான் நண்பன், தோழி, வகுப்பு, பாடங்கள், திருட்டு, சண்டை என உலகத்தைப் பற்றி நாம் கற்றுக் கொள்கிறோம். நமக்கு யார் முதல் நண்பன் என நினைத்துப் பார்த்தால், பல முகங்கள் நம் கண்முன்னே வந்து நிழலாடும். கண்டிப்பு, தண்டனை, பயமுறுத்தல், கட்டாயப்படுத்துதல் போன்றவற்றை சந்திக்காமல் யாராவது சிறுவர்கள் இருக்க முடியுமா? இப்படியான உலகத்தில் தான் சிறுவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். நாம் என்னதான் வயதில் பெரியவர்களாக இருந்தாலும் நம் மனதில் இளம் வயதின் நினைவுகள் வெண்மையான பாலாடைபோன்று ஏதோ ஒரு மூலையில் பசுமையாக இருக்கத்தான் செய்யும்.சிறுவர்கள் பேசும்போதும், விளையாடும் போதும்,சாலையில் நம்மைக் கடந்து செல்லும் போதும் நம்முடைய பதின் பருவத்தை தூண்டிவிட்டுத் தான் செல்கிறார்கள். இப்படியாக தான் வாழ்ந்த சிறு வயது அனுபவங்களுடன் கற்பனைக் கதைகளையும் சேர்த்து ‘பதின்’ என்ற நாவலை படைத்திருக்கிறார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். மரபான நாவல்களைப் போல் கதாபாத்திரங்களைப் பயன்படுத்திச் சம்பவங்களைப் பின்னும் கதை முறையில் இந்நாவல் எழுதப்படவில்லை என்பதை கதைகளுக்குள் நாம் செல்வதற்கு முன்பே தனது முன்னுரையில் சொல்லிவிடுகிறார் எஸ்.ரா.பலாப்பழத்தில் இருக்கும் ஒவ்வொரு சுளையும் சுவையானது. அப்படி இந்த நாவலில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் சுவையான நம்முடைய சிறார்பருவத்தை ஞாபகப்படுத்துகின்றன.நாவலில் நந்து, சங்கர், நான் என்ற பாத்திரங்களைக் கொண்டு தான் கதைகள் நகர்த்தப்பட்டுள்ளன. இதில் நானுடன் வாசகன் கலந்து நாமாகப் பல கதைகள் மாறும். பெரியவர்கள் செருப்பைப் போட்டு நடப்பது; வீட்டில் காசு திருடுவது;
தீப்பெட்டி லேபிள்களை சேர்ப்பது, சிறிய லென்ஸ் கண்ணாடியை சூரிய வெளிச்சத்தில் காட்டி தாள்களில் ஓட்டைப்போடுவது என நாம் செய்த சேட்டைகளை ‘பதின்’ கதைகள் நினைவுபடுத்துகின்றன.ஊரில் இருக்கும் பாட்டிகளுடன் சேர்ந்து நந்து திருவிளையாடல் படம் பார்க்கிறான். படம் பார்க்கும் அவனுக்கு நிறைய கேள்விகள். ‘கடவுள் ஏன் விறைப்பாகவே நடக்கிறார்?, யார் அவருக்கு சட்டை தைப்பார்கள்? அவருக்கு யார் முடிவெட்டுவார்கள்? பார்வதி ஏன் சிவனை விட குண்டாக இருக்கிறாள்? தேவலோகத்தில் எதற்காக இவ்வளவு புகை சுற்றிக் கொண்டிருக்கிறது? சிவன் உடுத்தியிருக்கும் மான்தோல் எந்த மானுடையது? அதை ஏன் அவர் கொன்றார்?, இப்படி சிறுவர்களால் மட்டுமே சிந்திக்க முடியும்.பிடிச்ச துணியை வாங்கித்தராமல் ஏதாவது ஒரு துணியை வாங்கிக் கொடுத்து போட்டுக்கச் சொல்லும் போது சிறுவர்கள் மனம் வேதனைப்படுவது; உடைந்த பல்லை யாருக்கும் தெரியாமல் புதைப்பது; சத்தம் போட்டு அதட்டிப் பேசும் பெரியவர்களை வெறுப்பது; அம்மாவைக் கட்டி அணைத்துத் தூங்குவது; தன்னை அடித்தவனுக்கு எப்படியாவது ஒரு அடி திருப்பிக் கொடுக்க வேண்டும் என திட்டம் தீட்டுவது; பேருந்தில் எனக்கு அரை டிக்கெட் எடுப்பதற்கு நடத்துனரிடம் அப்பா எப்போதும் சண்டைபோடும் போது, எப்பத்தான் நான் பெரியவன் ஆவேன்என குழந்தைகள் ஏங்குவது என அவர்களின் ஏக்கம், ஆசை, கனவு என அழகாகக் கதைகளைத் தொகுத்து நமக்கு கொடுத்திருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.வகுப்பை கட் அடிப்பதற்காக ஓவியப் போட்டியில் பங்கேற்று அதில் வெற்றி பெற்று, அந்த நொடியிலிருந்து ஓவியங்களைத் தொடர்ந்து வரைந்து பார்த்து விட்டு, சில மாதங்கள் கழித்து, இது நமக்கு வராது என அதை அப்படியே துறந்து விடுவது; பியானோ மீது ஆசை வந்து, அதை எப்படியாவது கற்றுக் கொள்ள வேண்டும் என அலைந்து, மாமா வீட்டில் தங்கி அதை கற்றுக் கொள்ளும் போது, “ கருமம்… தெண்டக்கழுதை… உனக்கு ஃபிங்கரிங்கே வரலை. நீ எல்லாம் பியானோ கத்துக்கிடலைன்னு யாரு அழுதா..” எனத் திட்டு வாங்கிய போது,எதற்காக பியானோ கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன்..? ஏன் இப்படி அசிங்கப்பட்டு நிற்கிறேன் என யோசித்துக் கொண்டேயிருந்தது, காலை விடிந்தவுடன் மாமாவிடம் ரிசல்ட் வருகிறதுஎன பொய் சொல்லிவிட்டு ஊருக்கு வந்துவிட்டது போன்ற நினைவலைகள் இந்த கதைகளில் வருகின்றன. இதை நாம் வாசிக்கும் போது பரிதாபமே ஏற்படுகிறது. இப்படியாக நம்முடைய சிறு பருவத்தையும், இப்போது இருக்கும் சிறுவர்களையும் நமக்கு காட்டுகிறது இந்த ‘பதின்’ நாவல்.

Leave a Reply

You must be logged in to post a comment.