“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்,” என்று மேடையில் அறிவித்துக்கொண்டு அரசின் சாதனைகளைப் பேசத் தொடங்குகிற அவரை வியப்போடும், சிரிப்போடும் அவையினர் கவனிக்கிறார்கள். காரணம் அவர் மோடி முகமூடியணிந்திருக்கிறார். வியப்பு அத்துடன் நிற்கவில்லை. மோடியின் தற்புகழ்ச்சிக்கு மாணவர்கள் சிலர் கோபத்துடன் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அவர்களை மற்றவர்கள் சமாதானப்படுத்துகிறார்கள். தொடர்ந்து அவர் பேசப்பேச, மோடி அரசின் கார்ப்பரேட் விசுவாசம், மதவெறி அரசியல், மக்களைக் கைவிடும் நடவடிக்கைகள், விமர்சன உரிமையைப் பயன்படுத்துவோருக்குத் தரப்படும் தேசவிரோதிப் பட்டங்கள்… எல்லாம் வெளிப்படுகின்றன. தொடக்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் உணர்வுப்பூர்வமாகக் கைதட்டி ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகிறார்கள்.இது ஒத்திகை பார்க்கப்பட்ட வீதிநாடகக் காட்சியல்ல. வீதிகள்தோறும் செல்லவேண்டிய ஒரு புத்தக அறிமுக நிகழ்ச்சி. ‘பொய் – வேடங்களில் மன்னன்: இப்போது தலைநகர் டெல்லியில்…!’ -இது புத்தகத்தின் பெயர். குஜராத் எழுத்தாளர் – பத்திரிகையாளர் ஜெயேஷ் பாய் என அழைக்கப்படும் ஜெயேஷ் ஷா ஆங்கிலத்தில் எழுதி வெளிவந்துள்ள ‘பிளஃப் மாஸ்டர் – நவ் இன் டெல்லி’ என்ற புத்தகத்தின் தமிழாக்கமே இது. மொழிபெயர்த்ததுடன், தனது ‘சிலம்பு பதிப்பகம்’ மூலமாகத் தமிழ் வாசகர்களுக்குக் கொண்டு வந்திருக்கிற பணியையும் செய்திருக்கிறார் ஆனந்தராஜ். புத்தக அறிமுகக் கூட்டங்களில், ஆர்எஸ்எஸ் அரசியல் முகமூடியான பாஜக, அதன் ‘வளர்ச்சி’ முகமூடியான மோடி ஆகிய இரண்டு முகமூடிகளையும் கழற்றிக்காட்டும் வகையில் மோடியின் முகமூடியணிந்து பேசுகிறவர் இவரேதான்.ஆகவே, தொடக்கத்தில் சாதனைப் புராணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது போலவே, பின்னர், முகமூடிகள் கழற்றப்பட்டு உண்மைகள் அம்பலப்படுத்தப்படுவதை மோடி ஆதரவாளர்கள் எதிர்ப்பதும் நடக்கிறது. தன் மீது தேசத்துரோக வழக்குகள் ஏவிவிடப்படலாம் என்ற அபாயநிலை இருந்தும் அதை எதிர்கொள்ளும் துணிவுடன் இதை ஒரு சமூகப் பணியாகக் கருதிச் செய்கிறார் ஆனந்தராஜ்.

மோடி வகைப்பட்ட பாசிசம் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தோருக்கு மட்டுமே எதிரானதல்ல, பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்களுக்கும் பாதகமானது என்ற உண்மையையும், கார்ப்பரேட் தொண்டூழியமே மோடி அரசின் உயிர்நாடி என்பதையும் புத்தகம் எடுத்துரைக்கிறது. அதையொட்டிய பல்வேறு சிந்தனைகளை முகமூடியோடு பகிர்ந்துகொள்கிறார்.“அயூப் ரானா எழுதிய ‘குஜராத் கோப்புகள்’ வெளிவந்த நேரத்தில்தான் ஜெயேஷ் எழுதிய இந்தப் புத்தகமும் வெளியானது. ஆங்கில நூல் வெளியானதும் குஜராத்தைச் சேர்ந்த சோலங்கி என்பவர் அது தவறான தகவல்களைச் சொல்வதாகக்கூறி, அதற்குத் தடைவிதிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சோலங்கி. உயர்நீதிமன்றமும் அதைத் தள்ளுபடி செய்தது. இப்படி புத்தகத்தை முடக்க அடுத்தடுத்துத் தொடுக்கப்பட்ட வழக்குகள்தான் என்னை ஈர்த்தன. உடனடியாக அதை வரவழைத்துப் படித்தேன். தமிழில் கண்டிப்பாகக் கொண்டுவர முடிவு செய்து, மொழிபெயர்ப்பில் இறங்கினேன்,” என்றார் ஆனந்தராஜ்.மதுரையில் ஒரு பேராசிரியர்-மருந்தாளுநர் இணைக்குப் பிறந்து, பொறியியல் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று, சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் ஊதியத்தில் வேலை செய்து வந்தவர் இப்போது முழுநேரப் புத்தக மொழிபெயர்ப்பிலும் வெளியீட்டிலும் ஈடுபட்டிருக்கிறார். சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை ஆக்குவதிலும் ஆர்வம் கொண்டுள்ள இவர் படத்தயாரிப்பு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். “பொறியியல் படித்தாலும் இலக்கியம், அரசியல் இரண்டிலும் எனக்குச் சிறுவயதிலிருந்தே ஈடுபாடு இருந்தது. ஆகவேதான் இதனை முழுமையாகத் தேர்ந்தெடுத்தேன்.”அரசியல் இயக்கம், இலக்கிய அமைப்பு எதிலும் உறுப்பினராக இல்லாவிட்டாலும், இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரிய தளங்களைச் சார்ந்தே தன் சிந்தனைகளைச் செதுக்கி வந்திருக்கிறார். “இந்திய நிலைமைகளை மாற்ற வேண்டுமானால், இந்திய நிலைமைகளைச் சரியாக மதிப்பிட்டாக வேண்டும். அதற்கு மார்க்சியமும் பெரியாரியமும் அம்பேத்கரியமும் பெருந்துணையாக இருக்கின்றன.”சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ராமு மணிவண்ணன் முன்முயற்சியோடு, அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறை ஏற்பாடு செய்திருந்த, செல்லாக்காசு அறிவிப்பு தொடர்பான உரையரங்கில், இந்தப் புத்தகம் பற்றியும் குறிப்பிட்டு, முகமூடியை மாட்டிக்கொண்டு பேச, பொதுவாக அதற்கு மாணவர்கள், ஆசிரியர்களிடமிருந்து வரவேற்பு, முணுமுணுப்பு இரண்டும் எதிரொலித்ததைக் குறிப்பிட்டார்.

“அரசின் மீது ஒரு விமர்சனம் வருகிறது என்றால், அதை, அதை மறுப்பதன் மூலம் அரசின் நிலைபாடுகளை விளக்குவதற்கான வாய்ப்பாக ஆளுங்கட்சியினர் கருதினால் அது ஜனநாயகம். ஆனால் பாஜகவினரோ, விமர்சனமே வரக்கூடாதென்று முடக்கிப்போடவும் தடுத்து நிறுத்தவும் முயல்கிறார்கள். இது ஜனநாயகத்திற்குப் பேராபத்து. இதையும் நிகழ்ச்சிகளில் எடுத்துக்கூறுகிறேன்,” என்றார் ஆனந்தராஜ்.“சீரியஸ் அரசியல் சித்தாந்தங்களில் ஒரு ஆர்வமின்மை பரவியிருக்கிறது. படிப்பதில், அறிவதில் ஒரு அக்கறையின்மை ஊன்றிப்போயிருக்கிறது. ஆனால் பாதிப்புகள் ஏற்படுகிறபோது மட்டும் நிவாரணங்களை எதிர்நோக்குகிற மனப்போக்கு. அவர்கள் காண மறுக்கிற இருண்ட பக்கங்களில் வெளிச்சம் பாய்ச்சி இந்த உண்மைகளைப் பாருங்கள் என்று காட்ட விரும்புகிறேன். நான் மொழிபெயர்த்திருக்கிற புத்தகங்கள் அதைச் செய்ய முயல்கின்றன,” என்றார். ஏற்கெனவே சிலம்பு பதிப்பகம் சார்பில் ராஜீவ் சர்மா எழுதிய ‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ வந்திருக்கிறது. தற்போது, இந்திய மருத்துவ உலகில் நடைபெறும் சந்தை ஆதிக்க விவகாரங்கள், தொழில் முறைகேடுகள் போன்றவற்றை விளக்கி மருத்துவர்கள் அருண் கோத்ரா, அபேஷ் சுக்லா எழுதிய ‘டிஸ்ஸன்டிங் டயக்னிசிஸ்’ புத்தகத்தை ‘இந்திய மருத்துவ உலகம் – ஒரு மரணக்கூடம்’ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்துகொண்டிருக்கிறார். மற்றவர்கள் செய்துதரக்கூடிய பயனுள்ள புத்தகங்களின் வெளியீட்டிலும் ஈடுபட உள்ளதாகக் கூறியவர், இந்திய அமைதிப்படை தலைவராக இருந்த ஹர்கிரந்த் சிங் எழுதிய ‘இலங்கை இனச்சிக்கல் – இந்திய அரசின் தலையீடு’ பற்றிய புத்தகத்தையும், அனிதா பிரதீப் எழுதிய ‘குருதி சூழ் தீவு’ என்ற புத்தகத்தையும், காவிரிப் பிரச்சனை பற்றிய ஒரு ஆய்வு நூலையும் வெளியிடுவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.“மறைக்கப்பட்ட உண்மைகளைத் திறந்துகாட்டுவதில் புத்தகங்கள் ஒரு பகுதி பணியைத்தான் செய்ய முடியும். மீதிப்பணியைச் செய்ய வேண்டியது மக்கள் இயக்கங்கள்தான். சமூக மாற்றத்திற்கான அமைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகளில் உடன் வரத் தயாராக இருக்கிறேன்,” என்று முகமூடி எதுவுமின்றிச் சொல்கிறார் ஆனந்தராஜ்.

அ. குமரேசன்

Leave A Reply

%d bloggers like this: