சென்னை,
மெரினா கடற்கரையில் விவசாயிகளுக்கு ஆதரவாக மீண்டும் இன்று திரண்ட 25 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி, கோவை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் இறங்க துவங்கி உள்ளனர்.

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை தொடர்ந்து மெரினாவில் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தில்லி, ஜந்தர் மந்தரில் தொடர்ந்து 16 வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சென்னை மெரினாவில் மாணவர்கள், இளைஞர்கள் திரண்டனர். மேலும், விவசாயிகளுக்கு ஆதரவாக கூடுமாறு சமூக ஊடகங்களில் செய்திகள் பரவியதையடுத்து மெரினாவில் நேற்று கூடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இன்றும் மெரினாவில் கூடிய 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாணவர்கள் கூடுவதைத் தடுக்க மெரினாவின் காந்தி சிலையில் இருந்து விவேகானந்தர் இல்லம் வரை பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதும் மாணவர்கள், இளைஞர்கள் தடையை மீறி ஒன்று கூட முயற்சித்து வருகின்றனர். பாதுகாப்பை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கடைகள் அகற்றப்பட்டுள்ளன.

திருச்சி
இன்று காலை திருச்சியில் தில்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட முயன்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை
தற்போது கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இந்நிலையில் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காவலர்களை மாணவர்களை கைது செய்து வருகின்றனர்.

Leave A Reply