“போர்முனையில் உயிரைவிட வந்தவர்களைக் காலரா நோய் வென்று விட்டது” இது அசோகமித்திரனின் கதையான “வெள்ளை மரணங்களில்” கடந்து செல்லும் கல்லறை வாசகம். நேர்எதிரிகளின் மரணத்திற்காகவும் கூடகண்ணீர் உகுக்கிற கலைஞன் அசோகமித்திரன். அவருடைய மரணச் செய்தியைக் கேட்டவுடன் இந்தக் கல்லறை வாசகம் என்னுடைய ஞாபகக் குளத்தில் இருந்து சட்டென மேலேறியது. மரணம் எப்போதும் ஞாபகங்களைத் திறக்கும் சாவி தான். நல்லதும், அல்லதுமாக அசோகமித்திரனின் நடவடிக்கைகள் குறித்து சொல்வதற்கு எல்லா இலக்கிய வாசகனுக்கும் விஷயங்கள் இருக்கவே செய்யும்.
அவருடைய கதைகளின் தன்மை குறித்து பேசுவதே அவருடைய மரணத்திற்கு நாம் செலுத்தும் அஞ்சலியென நினைக்கிறேன். ஐம்பது வருடங்களையும் கடந்து எழுதிக்கொண்டேயிருந்தவர் அசோகமித்திரன். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று தீவிரமான இயக்கத்தை அவர் நிறுத்தியதே இல்லை. எழுதுகிற பலரும் சமகாலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் தன்னுடைய சகாக்களின் எழுத்தினை வாசிப்பதில்லை. இதிலும் இவர் விதிவிலக்கு என்பதனை அவருடைய சமீபத்திய “தடம்”பேட்டியை வாசிக்கிற போது உணர்ந்து கொள்ள முடிந்தது. சென்னைப் பெருநகரின் தீராத துக்கமாக நீடித்திருக்கும் குடிதண்ணீர் சிக்கலையும், அந்த நகரின் வர்ணஜாலமான சினிமாத்துறையின் இருள்பகுதியான துணை நடிகர்களின் வாழ்வியலையும் கலந்து அவர் தீட்டிய சித்திரம் “தண்ணீர்”எனும் நாவல். சிக்கல்களின் தன்மையைச் சொல்லுவதிலும் அதைக் கலையாக்குவதிலும் மகா சமர்த்தன் அசோகமித்திரன் என்பதை அவருடைய பதினெட்டாவது அட்சக்கோடு நாவலை வாசிக்கிறபோது நம்மால் உணர முடியும். பெருந்தேசத்தின் கொடுந்துயராக நீடித்திருக்கிற இந்து –முஸ்லிம் கலவரக் காட்சிகளின் அவதானிப்புகள்தான் அவருடைய “பதினெட்டாவது அட்சக்கோட்டின்” காட்சிகள். அவருடைய நாவல்களைக் காட்டிலும் அவருடைய சிறுகதைகள் மிகவும் முக்கியமானவை. இருநூறுக்கும் மேற்பட்ட அவருடைய கதைகளின் தன்மையைக் குறித்து யோசிப்பதும், அவற்றை வாசிப்பதுமே அந்தக்கலைஞனுக்கான ஆகச் சரியான நினைவு கூரலாகும். அவருடைய கதையுலக மனிதர்கள் நடுத்தரவர்க்க மனிதர்கள் தான். நடுத்தர வர்க்கத்து மனிதர்களின், மனுஷிகளின் துயரங்களையோ, துள்ளல்களையோ எழுதுவது எளிதில்லை. அசோகமித்திரன் நடுத்தரவர்க்கத்தினரின் மனதில் குரலையே கண்டுணர்கிறார். அவர்களின் மனக்கிலேசங்களும், மன அவஸ்தைகளுமே கதைகளாகியிருக்கின்றன. இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகள், பத்து நாவல்கள், இரண்டு மிகப்பெரிய கட்டுரைத் தொகுப்புகள் என யாவற்றிலும் உறைந்திருக்கும் மனது நடுவில் நிற்பவர்களின் மனதுதான். நடுவில் நிற்கும் மனிதர்களைக் குறித்து அச்சு அசலான கதைகளை படைத்துள்ள அசோகமித்திரனின் மொழி எளிமையும், சிக்கனமும் கொண்டது. நேரடி வாசிப்பில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்திடச் சாத்தியமற்றிருக்கும் பல கதைகள் மறுபடியும் கவனமாக என்னை வாசியுங்களேன் என்று நம்மைக் கோருகின்றன. மனிதர்களால் மட்டும் தான் கூடி வாழ்ந்திட முடியும். அப்படியான கூடிவாழும் மனதை நகர்ப்புறத்து மனிதர்கள்தொலைத்து வெகு நாட்களாகி விட்டது.
“சங்கமம்” எனும் கதையில் சங்கமம்ஆகின்றன சாக்கடைகள். ஆனால்கூடிக்களித்திருக்க வேண்டியவர்கள் விலகி வெகு தூரம் போய்கொண்டேயிருக்கிறார்கள். ஒன்றாகத் தான் இருக்கிறார்கள். மனம் மட்டும் ஒத்திசைவு கொள்ள முடியாது பிசகிக் கிடக்கிறது என்பதையே அசோகமித்திரனின் பல கதைகள் வாசகனுக்குள் கடத்துகின்றன. மனநிலைகளை எளிய சொற்கள் அடங்கிய வாக்கிய சேர்க்கையின் மூலம் அசாத்தியமாக எழுதியவர் அசோகமித்திரன். “சங்கமம் கதையில் வருகிற உரையாடல்கள் அவரின் மேதைமையை உணர்த்துகின்றன. தன் வீட்டுக்குள் மேல்வீட்டுச் சாக்கடை நீர் கசிகிறது என குற்றம் சாட்டப் போகிறான் நடுவீட்டுக்காரன். மேல்வீட்டுக் கிழவர் இது என்னுடைய தவறில்லை, பில்டரின் தவறு அதற்கு நான் பொறுப்பாக முடியாது. இப்படித்தான் குப்பைகளை, சிந்தனை ஆதிக்கத்தை வன்முறையை தனக்கு கீழே இருப்பவர்களின் மீது பிரயோகித்துப் பார்த்து ஒருவிதமான குரூர மகிழ்ச்சிக்கு உள்ளாவது மேல்தட்டு மனித குணம். அதனால் தான் நடந்திருப்பது தவறே என்றுதெரிந்த போதும் அதற்கான பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார். கதையின் உச்சமே வேறு ஒரு இடம் தான். மாடி சென்று குற்றம் சுமத்தி கீழிறங்கி வருகிற நடுவீட்டுக்காரனை தரைத்தளத்து வீட்டுப் பையன் அழைக்கிறான். என்ன சார் அநியாயம் உங்கவீட்டு சாக்கடைக் குழாய் கசிவு எங்கள் வீட்டு முத்தத்திற்குள்ள முட்டுது என்கிறார். நடுவீட்டுக்காரன் ஏதாவது சொல்லி சமாளிக்கப் போகிறான் என வாசகர்கள் நினைக்கிறார்கள். அப்போது அவன் சிரிக்கிறான். அவன்மீண்டும் சிரித்தான் என்று கதையை முடிக்கிறார். நடுத்தர வர்க்கத்து மனிதன் பிறரின் துன்பத்திற்காக இரக்கம் கொள்கிறவன் அல்ல. அதற்கு மாறாக இந்த சிக்கல் தனக்கு மட்டுமானது அல்லது தன்னையொத்தவனுக்காக வருந்துவதற்குப் பதிலாக கெக்கொலிகொட்டிச் சிரிக்கிற இந்தமனிதனையே நடுத்தரவர்க்கத்தின் குறியீடு என்று நாம் உணர வேண்டியது. உணர்ச்சித் ததும்பல்கள், அதிர்ச்சி முடிவுகள் கண்ணீரைத் துடைத்தபடி அடுத்த வரிகளை கடந்திட முடியாத மன நெருக்கடிஆகியன போன்ற மொழி விளையாட்டுக்களை நடத்தியே தீர வேண்டும் என்கிற எந்தபகீரத முயற்சிகளிலும் இறங்காதவர் அசோகமித்திரன். அவருடைய கதைக்குள் காட்சிப்படுவது எளிய சம்பவங்கள், எளிய முடிவுகள் மட்டும் தான். வாழ்க்கையின் அன்றாடப் பாடுகளை உற்றுக் கவனித்து அப்படி அப்படியே எழுதிச் செல்வது. இதுதான் அசோகமித்திரனின் எழுதுதல் பணி. அதனால் வாழ்க்கைக்குள் இறங்கி நின்று அதன் துயரங்களைப் பகிர்கிற உணர்ச்சிமிகு மொழி அசோகமித்திரனுக்கு சேரவே இல்லை. எழுத்தாளனால் விலகி நின்று கவனிக்க முடியும். கவனித்தவற்றைக் காட்சிப்படுத்த முடியும். பிறகு கதை எழுத்தாளனின் கைநழுவி வாசகனின் வசமாகிவிடும். அதற்கு பிறகான இலக்கியச் செயல்பாடு வாசகனுக்கும், கதைக்குமானதே தவிர இங்கு எழுத்தாளனுக்கு யாதொரு வேலையுமில்லை. அவன் அடுத்த அடுத்தகதைகளைத் தேடிப் போய்க் கொண்டேயிருக்கிறான். இப்படியான வாசக மனநிலையை “எலி” “போட்டோ” என்கிறஇரண்டு அசோகமித்திரனின் மிக முக்கியமான கதைகளைப் படிக்கிற எவராலும் அடைய முடியும். எழுபதுகளில் எழுதப்பட்ட இவ்விரண்டு கதைகளும் சமகாலத்திற்கும் பொருந்திப் போகக் கூடியதாக இருக்கிறது. திருமண வீடுகளின் நினைவின் எச்சமாகநீண்ட பெருநாட்களுக்கு நம்மோடு ஒட்டிக்கொண்டேயிருப்பவை அதனுடைய நிழற்பட தொகுப்புகள் தான். இன்றைக்கு எனைநடி னுடிஉரஅநவேயவiடிn தன்மையெல்லாம் கூடிய பிறகும் கூட அசையாத அந்த வண்ண நிழற்படங்களின் மீதான மோகம் சற்றும் குறைந்திருக்கவில்லை. எல்லாம் கைகூடி வந்த பிறகும் கூட ஏனோ உயிரற்ற அசையா பொம்மைகளைப் போல போட்டோவிற்கு போஸ் தருகிற மனிதர்
களைக்கண்டு எரிச்சலுற்ற மனதின் கதையே போட்டோ. ஒரு கதையை வாசிக்கிற போது அந்தக் கதையில் வாசகன் பொருந்திப் போவது அசோகமித்திரனின் எல்லாக் கதைகளுக்கும் நடக்கிறது. “எலி” கதையில் வைக்கப்பட்ட பொறியான வடை காற்றில் ஆடியபடியிருக்க அதனை உற்றுநோக்கியபடி விழுந்து கிடக்கும் எலியின் துக்கிக்கும் கண்களை அசோகமித்திரன் காட்டியிருக்கும் விதமேஇது ஒன்றும் எலியைக் குறித்த கதையல்லஎன்பதைப் புரிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்களையும், சொல்லப்பட்ட கதைகளையும் வேறு ஒரு மொழியில் வேறு ஒரு அர்த்தத்தில் சொல்ல வேண்டிய தேவையிருப்பதை காலத்தின் கணக்காகப் புரிந்து கொண்டவர்கள் கலைஞர்கள். அதனால்தான் சொல்லப்பட்டு உருவேறியிருக்கும் கதைகளை மறுஉருவாக்கம் செய்கிறார்கள். இதற்காக அசோகமித்திரன் தேர்ந்தெடுத்துக் கொள்வது கர்ணபரம்பரைக் கதைகளைத் தான். அசோகமித்திரன் உரையாடிய கர்ணபரம்பரைக் கதைகள் யாவும் கூட மத்தியதர வர்க்கத்து குடும்பங்களுக்கு இடையில் உரையாடிக் கிடந்தவை தான். இவர் அந்தக் கதைகளை அப்படியே நவீன மொழியில் எழுதுகிறார். அதன் மீது எவ்விதமான கேள்விகளையும் அவர் முன் வைக்கவில்லை. ஆன போதிலும் கூட வாசகனுக்குள் பல கேள்விகளை முளைக்கச்செய்து விடுகின்றன அசோகமித்திரனின் கதை மொழிதல் முறைகள். தமிழ் வாழ்க்கையின் வெகுஜன கலாச்சார அடையாளங்களாக அறுபது எழுபது வருடங்களாக சினிமாக்களே நீடித்திருக்கின்றன. அசோகமித்திரனுக்கு சினிமாக் கதைகள் என்று தலைப்பிட்டு தனித்த தொகுப்பினை உருவாக்கிடலாம். “ராஜாவுக்கு ஆபத்து” “புலிக் கலைஞன்” “பங்கஜமல்லிக்” “மீரா –தான்சேன் சந்திப்பு” போன்ற கதைகள் நவீன தமிழ் இலக்கியத்திற்கு என மிகத் தனித்த அடையாளத்தை உருவாக்கிய கதைகள் என்பது நிஜம் தான். கதைகளை சினிமாப் பின்புலத்தில் சொல்கிற போது சொல்வதற்கென தேர்வு செய்யப்பட்ட மனிதர்கள் யாவரும் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். “டகர்பாய்ட் காதர்” தமிழ் வாழ்க்கையிலேயே மிகவும் தனித்தவன். காலம் புறமொதுக்கிய பாரம்பரியக் குணாம்சம் கொண்ட கலைஞர்களின் குறியீடு “டைகர்பைட்காதர்” அவனுக்காககதாநாயகன் புலிவேஷம் போட வேண்டும்என்று நம்பிக் கதையை மாற்றுகிறபோது அவனுடைய இருப்பு என்னவாகிறது தேடப்பட்டுக் கொண்டேயிருந்தும் அந்தக் கலைஞன் காலத்தின் வெளிகளில் தொலைந்து போய்விட்டான். ஒரு விதத்தில் இப்போது நினைக்கிற போது இப்படித் தோன்றுகிறது. காற்றின் ககன வெளிகளில் நிழலென கரைந்திட்ட டைகர்பைட் காதர் வேறு யாருமில்லை அசோகமித்திரனே தான். போய் வாருங்கள்! உங்கள் கதைகள் எப்போதும் எங்களுடனே இருக்கும்.

Leave a Reply

You must be logged in to post a comment.