சிவகங்கை, மார்ச் 28-
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா உருவாட்டி கிராமத்தில் 11 வகையான தீண்டாமைகள் கடைப்பிடிக்கப்படுவதாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்துசமய அறநிலையத் துறை துணை ஆணையர் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

முன்னணியின் மாவட்டச் செயலாளர் பொன்னுச்சாமி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் மு.கந்தசாமி, காளையார்கோயில் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, உருவாட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதவன், ரவி உள்ளிட்டோர் ஆட்சியர் மற்றும் துணை ஆணையரிடம் மனு அளித்தனர். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா உருவாட்டி கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பங்குனி திருவிழா மார்ச் 31-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில் மண்டகப்படி, நாடகம், இறுதிநாளில் தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழாவில் இப்பகுதியில் அதிகமான எண்ணிக்கையில் வசிக்கிற தலித் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். கோவிலுக்கு காப்பு கட்டும்போது தலித் மக்கள் அழைக்கப்பட வேண்டும்.

காப்பு கட்டுதலுக்கு தகவல் சொல்ல வேண்டும். திருவிழாக்காலங்களில் மண்டகப்படி நடத்த ,நாடகம் நடத்த அனுமதியளிக்க வேண்டும்.மஞ்சுவிரட்டு விழாவில் மாடுகளுக்கு துண்டு கட்ட அனுமதி வேண்டும்.கிராமக்குழுவிலும், கோவில் குழுவிலும், வரவு செலவு குழுவிலும் தலித் மக்கள் இடம் பெற வேண்டும். கிராமத்தில் 950 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் உள்ளது.இக்கண்மாயிலிருந்து விறகை ஏலம் எடுத்து கிராமத்தில் கூடுதலாக ஏலம் விடப்படும் தொகை தொடர்பாக வரவு-செலவு கணக்கு பார்க்கும் குழுவில் தலித்துகளுக்கு உரிய பங்களிப்பு வேண்டும்.நாடக மேடையில் உரிய வாய்ப்பு தர வேண்டும். பாதியோடு நிற்கும் தலித் மக்களுக்கான குழும வீடுகள் கட்டும் பணியை முடிக்க வேண்டும். ஒரு குடம் தண்ணீரை 15 ரூபாய்க்கு வாங்குகிற அவலநிலையை போக்க குடிதண்ணீர் வசதியை மேம்படுத்த வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.  திருவிழாவில் அனைவரும் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக துணை ஆணையர் உறுதியளித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.