கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஒன்றாக, கம்பெனிகள் அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கும் நன்கொடை குறித்து நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பேசியது நினைவிருக்கிறதா? 2017-18 பட்ஜெட் உரையில் அவர் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.  “அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடை குறித்து கம்பெனிகள் பதிலிறுக்கும் பொறுப்பினையும், வெளிப்படைத் தன்மையினையும் உறுதி செய்யும் வகையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் எதிர்காலத்தில் கறுப்புப் பணம் உருவாகாமல் தடுக்கப்படும்.”

இந்த வாக்குறுதியினையடுத்து, கம்பெனிகள் சட்டத்தில் முன் மொழியப் பட்டிருக்கும் முக்கியமான இரண்டு திருத்தங்கள் என்ன தெரியுமா? இதுவரை கம்பெனிகள், மூன்று ஆண்டுகளுக்கான தங்களது சராசரி நிகர லாபத்தில் 7.5 சதவீதம் வரை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கலாம் என்று உச்சவரம்பு இருந்தது. இப்போது அந்த உச்சவரம்பு நீக்கப்படுகிறது.
தவிர, மொத்தத்தில், எவ்வளவு நன்கொடை வழங்கப்படுகிறது என்ற தகவல் குறித்த விதிகளில் மாற்றம் இல்லை எனினும், எந்தக் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை என்பது குறித்த தகவலை இனிமேல் வெளியிடத் தேவை இல்லை என திருத்தம் கூறுகிறது. இத்தகைய வழிமுறைகள் மூலம் தான், எதிர்காலத்தில் கறுப்புப் பணம் உருவாகும் நிலையினைத் தடுக்கப் போகிறார்களாம். கம்பெனிகளின் பதிலிறுக்கும் பொறுப்பினையும், வெளிப்படைத் தன்மையினையும் இப்படித்தான் உறுதி செய்யப் போகிறார்களாம். உங்களுக்குப் புரிகிறதா?
– இ.எம்.ஜோசப்

Leave a Reply

You must be logged in to post a comment.