ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) 2017-2018 கல்வி ஆண்டிற்கான கையேடு மிகவும் தாமதமாக வெளியான போது, இந்தியா முழுவதும் உள்ள மாணவர் சமூகத்திற்கு அதிர்ச்சி, அவநம்பிக்கை ஏற்படுத்துவதற்கு வழிவகுப்பதாக இருந்தது.

ஆராய்ச்சி படிப்புகளான ஒருங்கிணைந்த எம்ஃபில்-பிஎச்டி, JRF மற்றும் நேரடி பிஎச்டி ஆகியவற்றுக்கான 83 சதவீத இடங்களை, 1,174இலிருந்து 194 இடங்களாக பல்கலைக்கழகம் குறைத்துள்ளது. மேலும் இந்தியாவில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு சேர்க்கையின் போது வழங்கப்பட்டு வந்த ’கையறுநிலைப் புள்ளிகளை’யும் நீக்கியுள்ளது. அதுமட்டுமல்லாது, எம்ஃபில்/ பிஎச்டி மாணவர்களுக்கு நடத்தப்படுகின்ற நுழைவுத் தேர்வு, வாய்மொழி நேர்காணல் ஆகியவற்றிற்கிடையே இருந்த தொடர்பையும் துண்டித்து விட்டது.

நுழைவுத் தேர்வை நன்றாக எழுதினாலும், வாய்மொழி நேர்காணலில் மாணவரின் செயல்பாடுகளைப் பொறுத்தே சேர்க்கைக்கான அனுமதி இனிமேல் அவருக்கு கிடைக்கும் என்பதே இதன் பொருள். பல்கலைக்கழக மானியக்குழுவின் 2016 மே 5 நாளிட்ட அறிவிப்பின் அடிப்படையிலேயே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பல்கலைக்கழகம் தன்னகத்தே கொண்டிருக்கும் சமூக ஒருமைப்பாடு இயல்பிற்கு ஆபத்தினை ஏற்படுத்தி விடும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் கூறுகின்றனர்.

2016 மே 5 நாளிட்ட பல்கலைக்கழக மானியக்குழுவின் அறிவிப்பிற்கு எதிராக மாணவர்களின் கோரிக்கையை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த பிறகு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்ஃபில்/பிஎச்டி அனுமதிக்கான இடங்கள் குறையும் என்பது எதிர்பார்க்கப்படிருந்த போதிலும், இவ்வளவு இடங்கள் குறைக்கப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
பேராசிரியர் ஒருவர் எத்தனை எம்ஃபில், பிஎச்டி மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட முடியும் என்பதை பல்கலைக்கழக மானியக்குழுவின் அந்த அறிவிப்பு விளக்குகிறது. ஒரு பேராசிரியர் மூன்று எம்ஃபில், எட்டு பிஎச்டி மாணவர்களுக்கும், ஒரு இணைப்பேராசிரியர் இரண்டு எம்ஃபில், ஆறு பிஎச்டி மாணவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்படலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழுவின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நெறிமுறைகளே மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் அதிக அளவில் குறைந்து போவதற்கான காரணமாக இருக்கிறது. பல்கலைக்கழகத்தின் உதவிப் பதிவாளர் (மாணவர் சேர்க்கை) AKபோதார், மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள மையங்கள், பள்ளிகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறைகளின் அடிப்படையில் யாரெல்லாம் மாணவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட முடியும் என்பதை அடிப்படையாக கொண்டே இந்தக் கணக்கிடுதல் நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறார்
ஆனால் பல்கலைக்கழக கையேடு பல்கலைக்கழக மானியக்குழுவின் நெறிமுறைகளில் கூறப்பட்டவற்றிற்கு முற்றிலும் மாறாக இருப்பதாக சொல்லும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்கள், எத்தனை ஆய்வு மாணவர்கள் அனுமதிக்கப்படலாம் என்பதை பல்கலைக்கழகம்தான் தீர்மானிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். மே 5 பல்கலைக்கழக மானியக்குழுவின் அறிவிப்பில் எத்தனை மாணவர்கள் அனுமதிக்கப்படலாம் என்பதை பல்கலைக்கழகத்தின் கல்வியமைப்பு முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ஆயிஷா கித்வாய் கூறுகிறார். மேலும் இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் கூறினார்.
அப்படியென்றால் பல்கலைக்கழகத்தின் கல்வியமைப்பு ஏன் இதுகுறித்து ஆலோசிக்கவில்லை என்ற கேள்விக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் முடிவினை போதார் விளக்குகிறார்,

பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் பதவிகள் உரிய அளவில் நிரப்பப்படவில்லை என்று மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் மோஹித் பாண்டே கூறும் போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சித் தரமானது இதனால் பாதிக்கப்படும் என்கிறார். பல்கலைக்கழக நிர்வாகத்தின் தவறுதலால் மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக எம்ஃபில், பிஎச்டி மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு, வாய்மொழி நேர்காணல் என்று இரண்டு நிலைகளைக் கொண்டதாக இருக்கும். கடந்த ஆண்டுகளில் நுழைவுத் தேர்வுக்கும் மதிப்பு வழங்கப்பட்டு வந்ததற்கு மாறாக, இந்த ஆண்டு வாய்மொழி நேர்காணலுக்கு மட்டுமே நூறு சதவீத மதிப்பு ஒதுக்கப்பட்டிருக்கிறது. பின்தங்கியுள்ள பகுதிகளில் இருந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்களை இந்த முறையானது பாதிப்பதாகவே இருக்கும்.

வாய்மொழித் தேர்வில் பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக 2012ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்ட குழு எழுத்துத் தேர்வு, வாய் மொழித் தேர்வு ஆகியவற்றுக்கிடையே இருந்த வேறுபாடு பொது மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவு மாணவர்களுக்கிடையே அதிகமாக இருப்பதாகக் கண்டறிந்ததாக ஸ்ரேயா ராய் சௌத்ரி என்பவர் ஸ்குரோல்.இன் இணைய இதழில் எழுதியுள்ளார்.

‘கையறு நிலைப் புள்ளிகள்’ என்ற அதிகபட்சமாக 12 புள்ளிகள், பெண் கல்வியறிவின்மை, விவசாயத் தொழிலாளர்களின் சதவீதம், கிராமப்புற மக்கள், கழிப்பறை இல்லாத குடும்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் சில மாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. காஷ்மீரி புலம் பெயர்ந்தவர்கள், திருநங்கைகள் போன்றோரும் இந்த புள்ளிகளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள். சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வியை அடைவதை ஊக்குவிப்பது என்பது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பழைய நடைமுறையாக இருந்து வருகிறது. 2017-18 கல்வியாண்டில் இந்தப் புள்ளிகள் எம்ஃபில், பிஎச்டி மாணவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து மாணவர்கள் வரும் நிலையை தடுத்து நிறுத்தும் முயற்சியாகவே இது இருப்பதாக மோஹித் பாண்டே தனது கருத்தினைத் தெரிவிக்கிறார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 2017 மார்ச் 2ஆம் நாள் சிறந்த பல்கலைக்கழகம் என்ற விருதினைப் பெற்றது. இடைவிடாமல் தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்குவதாக ஜனாதிபதி விழாவின் போது, பல்கலைக்கழகத்தைப் பாராட்டினார். ஆய்வு மாணவர்களின் எண்ணிக்கை குறையும் போது பல்கலைக்கழகத்தால் தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்க முடியுமா? விளிம்புநிலை சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் உயர்கல்வி, ஆராய்ச்சி போன்றவற்றை மேற்கொள்ளுவதை பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய நெறிமுறைகள் தடுத்து விடுமா? சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்குவது போன்ற அதன் கொள்கைகள் அடிப்படையில் இல்லாமல் போகும் போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தப்பிப் பிழைக்குமா?

  • முனைவர் தா. சந்திரகுரு – விருதுநகர்

Leave A Reply

%d bloggers like this: