சென்னை,மார்ச் 23-
ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டு மக்களை சந்தித்து வாக்குகள் சேகரிக்கும் பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். வடசென்னையில் ஏழை மற்றும் நடுத்தரமக்கள் கணிசமாக வாழும் ஆர்.கே.நகர் தொகுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். ஆனால் பிரதான சாலைகள் அமைக்கும் பணியைத்தவிர வேறு எந்தப் பணியும் திருப்திகரமாக நடைபெறவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

முதல்வரின் மரணத்தால் இடைத்தேர்தல் இத்தொகுதியில் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது. இங்கு அதிமுக சசிகலா அணி சார்பில் ஊழல் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட தினகரன், அதிமுக பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தகட்டப் பஞ்சாயத்து , ரவுடியிசம் உள்ளிட்ட பல வழக்குகளுக்கு ஆளான மதுசூதனன், இனவாத அரசியலை தூக்கிப்பிடிக்கும் நாம் தமிழர்கட்சி, மதவெறி அரசியலை தொழிலாகக் கொண்டுள்ள பாஜக சாமானிய மக்களின் நலனை மேம்படுத்தும் அரசியல் கொள்கை பிடிப்பு இல்லாத நபர்கள் வரிசையில் மக்கள் நலனை உயிர்மூச்சாக கருதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உழைப்பாளி மக்களை நம்பி களத்தில் நிற்கிறது.

சிலருக்கு இது கவுரவத்தேர்தலாகவும் சிலருக்கு வாழ்வா? சாவா? என்ற நிலையிலும் உள்ளது. தொகுதியில் நிறைவேற்றப்படாமல் பல்வேறு பிரச்சனைகள் மண்டிக்கிடக்கின்றன. சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகியுள்ள இத்தொகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்பது கனவாகி விட்டது. பணம் படைத்தவருக்கு மட்டுமே மருத்துவ வசதி என்ற நிலையை கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் உருவாக்கிவிட்டு சென்று விட்டனர். இந்நிலையில் மாற்றம் ஏற்படுத்தவே பணபலத்தையும் , அதிகாரபலத்தையும் , ஆள்பலத்தையும் எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. சொத்தை பாதுகாக்கவும், அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளவும் இசை நாற்காலியை சுற்று வதைப்போல் முதலாளித்துவ கட்சிகள் வெட்கமின்றி வலம் வருகின்றன. ஆனால் மக்களின் பல்வேறு வாழ்வாதாரப் போராட்டங்களில் போராடி வெற்றி பெற்றுள்ளதால் வாக்காளர்களின் நன்மதிப்பை கம்யூனிஸ்ட்டுகள் பெற்றுள்ளோம் என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.லோகநாதன்.

ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2,62,721 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் 1,28,305 ஆண்கள், 1,34,307 பெண்கள், 109 திருநங்கைகள் வாக்காளர்களாக உள்ளனர். இத்தொகுதியில் 51 இடங்களில் 256 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1024 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தல் பணியில் 1842 ஊழியர்களும், 307 நுண்பார்வையாளர்களும் ஈடுபட்டுள்ளனர். 29 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. 3 பறக்கும் படையும் , 3 நிலை கண்காணிப்புக்குழுவும், 22 கண்காணிப்புக் குழுக்களும் பணியில் உள்ளன.

7 வட்டங்களைக் கொண்ட ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தொடங்கி உள்ளன. 38வது வட்டம் பவர்அவுஸ் பகுதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம், 39வது வட்டம் புதுவண்ணாரப் பேட்டையில் வி.ஜானகிராமன், 40வது வட்டம் வஉசி நகரில் இரா.முரளி, 41வது வட்டம் கொருக்குப்பேட்டையில் ஏ.விஜயகுமார், 42வது வட்டம் செ.சுந்தர்ராஜ், 43வது வட்டம் காசிமேட்டில் சி.திருவேட்டை, 47வது வட்டம் அம்பேத்கர்நகர், காமராஜர்நகரில் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் பொறுப்பில் பிரச்சாரக்குழுகள் பிரிக்கப்பட்டுள்ளன. தொகுதி பணிமனை செயலாளராக ஆர்.ஜெயராமன் பொறுப்பேற்றுள்ளார்.  இதையடுத்து இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் தேனீக்களை போல் பிரச்சாரப்பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் தொகுதியில் தலைவர்கள் முகாமிட்டு சிபிஎம் வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: