புதுதில்லி, மார்ச் 21-
புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளை சந்தித்து சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. செவ்வாயன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.விவசாயிகளின் தற்கொலை சம்பவங்களைத் தடுக்க வேண்டும். விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய அனைத்துக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக புதுதில்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த 14ஆம் தேதி போராட்டத்தை தொடங்கி நடத்திவந்தனர். மேல் சட்டை அணியாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

இதற்கிடையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராதாமோகன் சிங் ஆகியோரிடம் பேசி இரண்டு நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டுக்கொண்டார். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பேச்சுவார்த்தை நடக்கும்வரை போராட்டத்தை தொடர்வோம். எங்களது கோரிக்கைகள் மீது உடன்பாடு ஏற்பட்டால் போராட்டத்தை கைவிட்டு தமிழகம் செல்கிறோம். இல்லையெனில் தில்லியிலேயே போராட்டத்தை தொடர்வோம் என தெரிவித்தனர். இந்நிலையில் 8-ஆம் நாளான செவ்வாயன்று காலை விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்ந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: