சென்னை,-
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாலை விபத்துக்களால் பலியாவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனைக் கட்டுப்படுத்த வாகனங்களில் தரமான வேகக் கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்துவதுடன், உரிய பிற விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாநிலப் போக்குவரத்துத் துறையிடம் தேசிய சாலைப் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினரும், சர்வதேச சாலைப் பாதுகாப்பு நிபுணருமான முனைவர் கமல் சோய் வலியுறுத்தியுள்ளார்.
சாலை விபத்துக்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வினை உருவாக்கும் நோக்கில், கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், ஒடிசா, டெல்லி ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை அவர் தெரிவித்தார்.   அவர் மேலும் கூறுகையில் “பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம். நம்முடைய மற்றும் மற்றவர்களின் உயிரை பாதுகாப்பதை லட்சியமாகக் கொண்டு வாகனங்களை ஓட்டினால் சாலை விபத்துக்கள் அதிக அளவில் குறையும். வாகனங்களில் தரமான வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை கண்டிப்பாகப் பொருத்த வேண்டும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாலை விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இதில் பலியாவோர் எண்ணிக்கையும் இங்குதான் அதிகமாக உள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, கடந்த 2015-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 69 ஆயிரத்து 59 (69,059) சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 79 ஆயிரத்து 746 பேர்  காயமடை1ந்துள்ளனர். 15 ஆயிரத்து 642 பேர் பலியாகினர். இந்த எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டில் முறையே 67 ஆயிரத்து 250  77 ஆயிரத்து 725 மற்றும் 15 ஆயிரத்து 190 ஆக இருந்தது” என்று தெரிவித்தார்.
நெடுஞ்சாலைகளில் வர்த்தக வாகனங்கள் அதிக வேகமாக செல்லுவதுதான் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம். 40 முதல் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான சாலை விபத்துக்களில் மரணம் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு வகையான போக்குவரத்து வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவியை கண்டிப்பாகப் பொருத்தப்பட வேண்டும் என்று ஏற்கெனவே  மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்றும் அவர்  கூறினார்.
 
 

Leave a Reply

You must be logged in to post a comment.