நடைபெற்ற ஐந்து மாநிலங்களுடைய தேர்தல்களில் பாஜக நடந்துகொண்ட முறை இந்தியாவின் எதிர்காலம் என்னாகுமோ என்ற பெரும் அச்சத்தை எழுப்பியுள்ளது. ஏற்கனவே மதவெறியைக் கிளப்பி அதிகாரத்தை சுவைத்துள்ள பாஜக, உத்தரப்பிரதேசத்தில் மத வெறி மட்டுமல்லாமல் சாதிவெறியையும் சேர்த்து ஆயுதமாக்கியிருப்பதை பார்க்க முடிகிறது. சமாஜ்வாதி கட்சிக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட யாதவர் அல்லாத இதர அனைத்து சாதிகளையும் மோடி ஒன்றிணைத்தார் என்றும், அதே போல் மாயாவதிக்கு எதிராக அவர் சார்ந்த பிரிவைத் தவிர இதரதாழ்த்தப்பட்ட சாதி பிரிவுகளை ஒன்றிணைத்தார் என்றும் இந்த ‘சிறப்பான தந்திரம்’ வெற்றியைத் தேடித்தந்ததென்றும் பகிரங்கமாகவே பாஜக தலைவர்கள் உட்பட பலரும் பேசுவதைக் கேட்கிறோம்.

ஆக மதவெறியோடு சேர்த்து சாதிவெறியை மோடி இணைத்தார் என்பது வெள்ளிடைமலை. இதுமட்டுமின்றி, கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்யப்பட்டு, ஓட்டுக்கு ரூ.3000, ரூ.5000 என்று, வாக்குகளை விலை பேசுவதையும் பாஜக செய்துள்ளது. தேர்தலை, சாதி மதம் காசு என்றாக்கி அரசியலுக்கு எந்த சம்பந்தமும் இல்லையென்று தேர்தலையே கேவலப்படுத்தியிருக்கிறது பாஜக. இத்தோடு சேர்த்து இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். தேர்தல் முடிவுக்குப் பிறகு கோவா, மணிப்பூர் மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் மூலம் வாங்கி, மக்கள் தேர்ந்தெடுக்காவிட்டாலும் தங்களால் ஆட்சிக்குவர முடியுமென்று ஜனநாயகத்தின் முகத்தில் கரிபூசியுள்ளனர்.

இந்த 5 மாநில தேர்தலில், மாநிலங்களை ஆண்ட கட்சிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள தென்பது ஆள்பவர்கள் மீது மக்களுக்கு இருக்கும் கோபத்தைக் காட்டுகிறது. இந்தக் கோபத்துக்கு காரணமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டியது புதிய ஆட்சிகளின் கடமையாகும். ஆனால், நீங்கள் வாக்களித்தாலும், அளிக்காவிட்டாலும் ஆட்சியமைப்போம் என்று கொக்கரிக்கிறது பாஜக. இன்னொருபுறம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களில் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் அல்ல, மாறாக தில்லியில் இருந்து அனுப்பப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகள் என்பது இன்னொருவகையில் ஜனநாயகப் படுகொலை. இதற்கெல்லாம் மேலானதொரு கொடுமை, உ.பி மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் நியமிக்கப்பட்டிருப்பதாகும்.

சட்ட விரோதமாக ராமர் கோயில் கட்ட வேண்டும் என்றவர். சூரிய நமஸ்காரத்தை மறுப்பவர்கள் கடலில் மூழ்க வேண்டும் என்றவர். பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு மக்களவையில் பாஜக கட்சியின் கொறடா உத்தரவிட்ட போதும், அதனை ஏற்க மறுத்தவர். இஸ்லாமிய பெண்களின் பிணங்களையும் விட்டுவைக்கக் கூடாது. அதையும் வல்லுறவுக்கு உள்ளாக்க வேண்டும் என்று அநாகரிகமாக, மனித தன்மையற்று பேசியபோது அருகிலிருந்து அமைதியாய் கேட்டவர். பாஜகவின் முதலமைச்சர் தேர்வு குறித்து அந்தந்த மாநிலத்தில் உள்ள பாஜக எம்.எல்.ஏக்களுக்குக் கூடத் தெரியாது. அவர்களே அதிர்ச்சியிலிருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன. இவை அனைத்தையும் தீர்மானிப்பவர் மோடியும் – அமித்ஷாவும்தான். அவர்கள் நினைத்தால் எதையும் செய்வர் என்ற இடத்திற்கு நாடு சென்று கொண்டிருக்கிறது.

இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கு, எதிர்கால இந்தியா எங்கு செல்லும் என்ற பெரும் கவலையை பலரிடம் ஏற்படுத்தியுள்ளது. பகிரங்கமான மதவெறியை கொள்கையாகக் கொண்டு பிரச்சாரம் செய்து, காந்திக்கு அல்ல கோட்சேவுக்கு நினைவுதினம் நடத்தவேண்டுமென்ற நிலைக்குச் செல்கின்றவர்கள் கையில் நாடு சிக்கிவிட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
ஆக, இந்தத் தேர்தல்கள் ஜனநாயகப் படுகொலை, மதவெறி, சாதிவெறி, எதேச்சதி
காரம் என்று பாஜகவின் அனைத்து முகங்களையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஆர்எஸ்எஸ் -பாஜகவுக்கு எதிராக, அதன் மதவெறி கொள்கைகளுக்கு எதிராக, நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிராக அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. எழுவோம், இவைகளுக்கெல்லாம் எதிரான உண்மையான – மாற்றுக் கொள்கைகளுடன்.

Leave A Reply

%d bloggers like this: