சென்னை, மார்ச் 21 –
சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய பாக்கித் தொகை தொடர்பாக மார்ச் 31க்குள் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வாக்குறுதி அளித்தார். இதனையடுத்து கரும்பு விவசாயிகள் நடத்தி வந்த காத்திருப்புப் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. தமிழகத்தில் 24 தனியார் சர்க்கரை ஆலைகள், 16 கூட்டுறவு ஆலைகள், 2 பொதுத்துறை ஆலைகள் செயல்படுகின்றன. 24 தனியார் சர்க்கரை ஆலைகள் மாநில அரசு அறிவித்த விலையை கடந்த நான்கு ஆண்டுகளாக தரவில்லை. இதன்மூலம் தனியார் ஆலைகள் விவசாயிகளுக்கு 1500 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. 18 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் விவசாயிகளுக்கு ரூ.450 கோடி பாக்கி வைத்துள்ளன. இதுதவிர தனியார் ஆலைகள் 2004-2009 காலக்கட்டத்தில் விவசாயிகளுக்கு தர வேண்டிய லாப பங்குத் தொகை 350 கோடி ரூபாயை தராமல் உள்ளன.

இவ்வாறாக, சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு 2300 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. அத்தொகையை மாநில அரசு பெற்றுத்தரக் கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் செவ்வாயன்று (மார்ச் 21) தலைமைச் செயலகம் அருகே சேப்பாக்கத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில், நாகை என்.பி.கே.சர்க்கரை ஆலை, விழுப்புரம் செங்கல்ராயன் சர்க்கரை ஆலை, திருப்பூர் அமராவதி சர்க்கரை ஆலை ஆகிய 3 கூட்டுறவு ஆலைகளிலும் நடப்பு பருவத்திற்கான அரவையை துவங்க வேண்டும், கூட்டுறவு, பொதுத்துறை ஆலைகளின் கடனை அரசே ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தை இதனைத் தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், விவசாயிகள் சங்கத் தலைவர்களை அழைத்து தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையில் தொழில்துறை முதன்மைச் செயலாளர், சர்க்கரை துறை ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தனியார் ஆலைகள் ரூ.1003 கோடி பாக்கி
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கரும்பு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், கடந்தாண்டு வரை தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு 1003 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. அவற்றை பெற்றுத்தர மார்ச் 31க்குள் முத்தரப்பு கூட்டம் நடத்தப்படும். அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை பெற்றுத்தர அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். முத்தரப்பு பேச்சுவார்த்தையில் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசு நடந்துகொள்ளும் என்று அமைச்சர் வாக்குறுதி அளித்தார்.

2 நாளில் 44 கோடி பட்டுவாடா
கூட்டுறவு பொதுத்துறை ஆலைகள் வழங்க வேண்டிய 218 கோடி ரூபாயில், 44 கோடி ரூபாய் இரண்டு தினங்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். மீதமுள்ள 174 கோடி ரூபாய் ஏப்ரல் மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இதனையேற்று போராட்டத்தை விலக்கிக் கொள்கிறோம் என்றார். இப்போராட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.பழனிசாமி தலைமை தாங்கினர். போராட்டத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் பேசினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், பொருளாளர் எம்.சின்னப்பா, நிர்வாகிகள் ஏ.ஜனார்த்தனன், கோபிநாத், காசிநாதன், ஜோதிராம், குண்டு ரெட்டியார், சி.பெருமாள், பாபு, வி.ச மாநில துணைத்தலைவர் முனுசாமி உள்ளிட்டோர் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: