மீண்டும் ஒரு இடைத்தேர்தலுக்காக பரபரப்பாகிவிட்டது ஆர்.கே.நகர் தொகுதி. மிகவும் அடித்தட்டு மக்கள் நிறைந்திருக்கும் தொகுதி ஆர்.கே.நகர். ஏன் தங்கள் மீது மீண்டும் மீண்டும் தேர்தல் திணிக்கப்படுகிறது என்று ஒரு வித ஆயாசத்தோடு தொகுதி மக்களிடையே எழும் கேள்விக்கு விளக்கம் அளித்திட யாருக்கும் அவகாசம் இல்லை. கட்சிகள்.. அணிகள்.. சின்னங்கள்.. வாக்குறுதிகள் போட்டி குறித்த வாதப் பிரதிவாதங்கள் என பரபரப்பான காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. உண்மையான பிரச்சனைகளை திசை திருப்ப உணர்ச்சிகள் கிளப்பி விடப்படுவது இயல்பான ஒன்றாக மாறிப் போயுள்ள இன்றைய நிலையில் நாம் சற்றே நிதானமாக ஆர்.கே.நகர் அரசியலை புரிந்து கொள்ள முற்படலாமே!

ஜெ.இருந்திருந்தாலும் இடைத்தேர்தல் வந்திருக்கும்:
முன்னாள் முதல்வர் மறைந்து விட்டதால், அவர் விட்டுச் சென்ற பணிகளை நாங்கள் தொடர்வதற்காகவே ஆர்.கே.நகருக்கு வந்திருக்கிறோம் என ஆளும் கட்சியின் மூன்றோ, நான்கோ அணிகள் களத்தில் இறங்கி மக்களிடையே சுற்றி வருகிறார்கள். அம்மாவின் ஆன்மாவையும் துணைக்கு வைத்துக் கொள்கிறார்கள். பொதுவாக மரணமடைந்தவர்களின் கடந்த கால விமர்சனத்திற்குரிய செயல்பாடுகளைப் பற்றி பேசுவது சரியல்ல என்ற ஒரு செண்டிமெண்ட் (!?) உள்ளது.. அதற்குள் போக வேண்டாம்; உண்மையில் ஜெயலலிதா இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தாலும் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் வந்திருக்கும் தானே.. இல்லை என யாராவது மறுக்க முடியுமா? என்ன ஒரு வித்தியாசம்.. நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் உரையை மெரினாவிற்கு பதிலாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்திற்கு கொண்டு சென்று ஆசி பெற்றிருப்பார்கள். வேட்பு மனுவும் அங்கு சென்று ஆசீர்வாதம் பெற்று வந்திருக்கும். ஒரு வேளை இது நிதர்சனமாகியிருந்தால் நாங்கள் தான் அம்மாவின் பணியை தொடர்வோம் என இவர்கள் முழங்கியிருப்பார்களா என்ன? உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வரிகள் வெறும் வார்த்தைகள் அல்ல; தீச்சுவாலைகள். ‘இப்படியானவர்களை ஒரு வேளை நீதிமன்றம் தண்டிக்க மறுக்குமேயானால், அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் குற்றங்களை நீதிமன்றங்களே ஆதரித்தது போலாகி விடும்..’ என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு இவர்களுக்கு மட்டுமா.. ஊழல் அரசியல்வாதிகள் அனைவருக்குமே பொருந்துமே!

வாக்குச் சீட்டில் இருப்பது சின்னங்கள் மட்டுமா?
ஆளும் கட்சியின் இத்தகைய முரண்பாடுகளை முன்வைத்தே அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டியில் இறங்கியுள்ளன.. எல்லோரும் நாங்களே மாற்று எனவும் முழக்கமிடுகிறார்கள்.. இப்படி சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் உண்மைகளை உரசிப் பார்க்கும் பொறுப்பை ஜனநாயகம் நம்மிடம் தானே அளித்திருக்கிறது! உண்மையில் வாக்குச் சீட்டில் சின்னங்கள் மட்டுமே இருக்கும்.. அந்த சின்னங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் கொள்கைகளைப் புரிந்து கொள்ளும் வல்லமையின்றி வாக்குச் சாவடிக்கு செல்வதால் அவலங்கள் ஒரு போதும் முடியப் போவதில்லை. வெறும் அரசியல் விமர்சனங்களால், தனிநபர் துதிபாடல்களால் மாற்றம் நிகழ்ந்து விடப்போவதில்லையே; ஆனால் அத்தகைய அம்சங்களே தலை தூக்கி நிற்கின்றன. மக்களின் பிரச்சனைகள் விவாதிக்கப்படாமலேயே ஒதுக்கி வைக்கப்படுகிற சூட்சுமத்தை அம்பலப்படுத்த இந்த அரசியல் களத்தை பயன்படுத்தத் தானே வேண்டும்! தற்போதைய தேவையெல்லாம் நபர் மாற்றோ கட்சி மாற்றோ அல்ல; கொள்கைமாற்றே என உரத்து முழக்கமிடத் தானே வேண்டும் அது தானே ஆர்.கே.நகர் சொல்லும் அரசியல்.

அரிதாரம் பூசுவதல்ல.. அஸ்திவாரத்தை அசைப்பதே மாற்று!
கிரானைட் கொள்ளை குறித்த சகாயம் அறிக்கை சுட்டும் ஊழல்வாதிகள் அனைவ
ரையும் தூக்கி உள்ளே போடுவதோடு அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டாமா. உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ள வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட வேண்டாமா? தமிழக ஆறுகளில் தண்ணீர் எடுத்து குடிநீர் ஆதாரத்தை உறிஞ்சும் அந்நியக் கம்பெனிகளை ஓட ஓட விரட்டிட வேண்டாமா! பன்னாட்டு நிறுவனங்கள், அரசுக்கு வரியும் பாக்கி வைத்து, தமிழக உழைப்பாளிகளை நிர்க்கதியாக விட்டு ஓடிப்போவதை தடுத்து கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டாமா? சாதியின் பெயரால் அவமானகரமாக நிகழும் படுகொலைகளைத் தடுக்க அறச்சீற்றத்தோடு எழ வேண்டாமா? குடிநீருக்காகவும், பொது விநியோகப் பொருட்களுக்காகவும் அலையும் எளிய எம் மக்களுக்காக ஓடோடிச் சென்று ஆதரவாக நின்று குரல் எழுப்ப வேண்டாமா? ஆனால் இவற்றையெல்லாம் ‘நாங்களே மாற்று’ என்று சொல்பவர்கள் கண்டு கொள்வதாக தெரியவில்லையே…

வெறும் அரசியல் விமர்சனங்களே மாற்றாகி விட முடியுமா?  பணமதிப்பு நீக்கத்தால் மக்கள் அவதிப்பட்ட போது போராட்டக்களங்களில் மண்டை உடைந்தும், அவமானப்படுத்தப்பட்டும் நின்றவர்கள் மாற்று அல்லவா? செத்துப் போய்க்கொண்டிருக்கும் விவசாயிகளின் நிவாரணத்திற்காக ரயில் – பேருந்து சக்கரங்களின் முன்னால் விழுந்து கிடந்து குரலெழுப்பி காவல் துறையால் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் மாற்று இல்லையா? சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகவும், தீண்டாமை உள்ளிட்ட வன்கொடுமைகளுக்கு எதிராகவும் நாளும் போராட்டக் களங்களில் நின்று அதிகார லத்திகளை எதிர்கொள்பவர்கள் மாற்று இல்லையா? கங்கை கொண்டானை மீட்போம் என தாமிர பரணியில் இறங்கி ஆற்று நீர் மக்களுக்கே சொந்தம் என்ற போராளிகள் மாற்று இல்லையா? கீழ்மட்ட லஞ்சம் முதல் மேல்மட்ட பெரும் ஊழல்கள் வரை துணிச்சலோடு சமரசமின்றி போராடும் கூட்டம் சிறிதே என்றாலும் அவர்கள் தானே உண்மையான மாற்று!

ஏமாற்றத்திலிருந்து மாற்றத்தை நோக்கி…
அச்சடிக்கப்பட்ட ஒரு துண்டறிக்கை கூட இல்லாமல்.. தலைவர் அழைக்கிறார் என சுவர் விளம்பரங்கள் இல்லாமல்.. லாரி பிடித்து, கூலி கொடுத்து அழைத்து வராமலேயே லட்சக்கணக்கில் மக்கள் கூடுகிற போராட்டக் களங்களை அண்மைக்காலமாக தமிழகம் சந்தித்து வருகிறது.. இது ஆரோக்கியமான மாற்றமே… ஏமாற்றங்களால் துயரத்தில் இருக்கும் மக்கள் மனம் மாற்றத்திற்காக விழைகிறது என்பதே இத்தகைய கூட்டங்கள் உணர்த்தும் உண்மை. காலம் தற்போது சொல்லும் இந்த உண்மைகளை புரிந்து கொள்வது மாற்றை முன்வைக்கும் அரசியல் கட்சிகளுக்கு அவசியம் தானே! இந்தப் பின்னணியில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்.கே.நகர் களத்தில் நிற்கிறது.  சலிப்பூட்டும் அரசியல் முழக்கங்களுக்கிடையே, புது வெளிச்சக் கீற்றாய், மக்கள் குரலின் எதிரொலியாய் தேர்தல் களத்தை பார்க்கிறது. மக்கள் பிரச்சனைகளில் எப்போதுமே களத்தில் நிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது தேர்தல் களத்திலும் நிற்கிறது.. மக்களுக்காக.. மக்களை நம்பி.. மக்களிடையே அதன் பயணம் எப்போதுமே தொடரும்!

Leave A Reply

%d bloggers like this: